News
Loading...

“தமிழ்நாடு சிமெண்ட் தரமில்லை!” - திருப்பி அனுப்பிய கேரளா

“தமிழ்நாடு சிமெண்ட் தரமில்லை!” - திருப்பி அனுப்பிய கேரளா

அரியலூர் அரசு சிமென்ட் ஆலை விரிவாக்கத்துக்கு 675 கோடி ரூபாயை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார். ஆனால், அங்கு தயாராகும் சிமென்ட் தரமானதாக இல்லை என்று கேரள அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. இது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அரியலூரில் அரசு சிமென்ட் ஆலை இருக்கிறது. இது 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆலை வந்தது முதல் சர்ச்சைகளும் முளைத்தன. இயந்திரங்கள் பழுது, ஊழல், வேலைக்கு ஆட்கள் இல்லை, ஆட்கள் நியமிப்பதில்  ஆளும் கட்சியினர் முறைகேடு, ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கோரிக்கை என்று எத்தனையோ பிரச்னைகள். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மக்கள் சேவை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம். 

“இது மிகவும் பின் தங்கிய மாவட்டம். இந்தப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு, இந்தப் பகுதியின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 1979-ம் ஆண்டு அரசு சிமென்ட் ஆலை இங்கு தொடங்கப்பட்டது. அதற்காகப் பலர், நிலங்களைக் கொடுத்தனர். நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அப்போது அரசு தரப்பில் சொல்லப்பட்டது. வேலைவாய்ப்பு கிடைத்தால் மாவட்டம் வளர்ச்சி அடையும் என்பதற்காக அரசுக்குக் குறைந்த விலையில் நிலங்களைக் கொடுத்தார்கள் மக்கள். வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தப் பகுதியும் வளர்ச்சி அடையவில்லை. இங்குள்ள அதிகாரிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அதிக அளவில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அரசு ஆலை நீங்கலாக தனியார் சிமென்ட் ஆலைகளும் இங்கு உள்ளன. 166-க்கும் மேற்பட்ட  சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. ஃபேக்டரி வெளியிடும் புகையால் பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆலைகளால் கஷ்டப்படுவது எங்கள் மக்கள். ஆனால் யாரோ பலன் அடைகிறார்கள்.” என்று சொன்னார்.

‘‘வேலை செய்யவே ஆட்கள் இல்லாத இந்த ஆலைக்கு நிதி ஒதுக்கீடு மட்டும் செய்கிறார்கள். ஓய்வுபெற்ற அதிகாரிகளை இதன் நிர்வாகப்  பணியில் நியமிப்பதால்தான் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுகிறது. இந்த நிலைக்கு முக்கிய காரணமே முன்னாள் ஆலை தலைவர் என்.கே. நாகராஜன், பணி மற்றும் நியமன துணை மேலாளர் பாலசந்தர் ஆகிய இருவரும்தான். ஒருவர் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் வேறு யாரையாவது நியமனம் செய்யவேண்டும். அப்படி நியமித்தால் தான் அந்தப் பணிகளை தொய்வு இல்லாமல் தொடரமுடியும். ஆனால், அவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எந்த அனுபவமும் இல்லாத ஒப்பந்த  தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் ஓய்வுபெற்று வெளியே சென்றுவிடுகிறார்கள். சரியான ஆட்கள் இல்லாததால் ஒரு காலகட்டத்தில் சிமென்ட் உற்பத்தி பாதியிலேயே நின்றுவிடுகிறது. கடந்த  2015-ம் ஆண்டு  6,000 டன் சிமென்ட் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. அந்த சிமென்ட்கள் தரம் இல்லையென்று இழப்பீடு கோரப்பட்டது. இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பணத்தை கட்டி விஷயத்தை மூடிமறைத்தார்கள்” என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர்,  ‘‘சுமை தூக்கும் பணிகளுக்கு ஆட்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  எடுக்காமல். அ.தி.மு.க-வைச் சேர்ந்த லோடிங் கான்ட்ராக்டர் செளந்தர்ராஜன், யூனியன் தலைவர் தங்கவேல் இருவரும் எடுத்துக் கொடுக்கிறார்கள். ‘சிலருக்குப் பணம் கொடுக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்கும் தி.மு.க, தொ.மு.ச, சி.ஐ.டி.யு ஊழியர்கள் மிரட்டப் படுகிறார்கள். ஆலை தொடங்கும்போது 1,500-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்கள் இருந்தார்கள். இப்போது 250-க்கு உட்பட்ட பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். 100 ஏக்கர், 200 ஏக்கர்  நிலம் வைத்திருக்கும் தனியார் சிமென்ட் ஆலைகளே கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த ஆலைக்கு சொந்தமாக 1,500 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் மற்றும் சுண்ணாம்பு சுரங்கங்கள் உள்ளன. ஆனாலும் நஷ்டத்தில் இயங்குகிறது. இது எப்படி?” என்று கேட்டார்.

“தமிழ்நாடு சிமெண்ட் தரமில்லை!” - திருப்பி அனுப்பிய கேரளா

என்.கே நாகராஜனிடம் பேசினோம். ‘‘நான் ஓய்வுபெற்று வந்துவிட்டேன். கேரளாவில் பணம்கட்டி எடுத்து வந்தது உண்மைதான். எந்த அதிகாரியிடமும் பணம் வசூலிக்கவில்லை. பேக்டரியில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பது உண்மைதான். நான் இருக்கும்போது எந்த ஊழல் எந்த பிரச்னையும் இல்லை. என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று முடித்தார்

நிர்வாக இயக்குநர் காமராஜிடம் தகவலை சொல்லிப் பேசினோம். ‘‘எந்த சிமென்ட் பேக்கேஜும் கேரளாவில் ரிஜெக்ட் ஆகவில்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நான்கு வருடத்துக்கு முன்பு ஃபேக்டரி லாபகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. இப்போதும் நல்லபடியாக இயங்கிக்கொண்டிருக்கிறது” என்று சொன்னார்.

நல்ல அதிகாரிகள்... நல்ல நிர்வாகம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.