News
Loading...

மானத்தை வாங்கும் மதுரை மாநகராட்சி

மானத்தை வாங்கும் மதுரை மாநகராட்சி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலைநகரம்... தூங்கா நகரம்... என்றெல்லாம் புகழப்படும் மதுரை மாநகரம் சர்வதேச நகரமாகி இருக்க வேண்டும். ஆனால், மாநகரை ஆண்டவர்களோ தங்களது ‘திறமை’யால் மதுரை மாநகராட்சியின் புகழை ‘மங்க’ வைத்திருக்​கிறார்கள்.

மூன்று மாநகராட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க-வே தக்கவைத்துக் கொண்டிருந்த மதுரை மேயர் பதவியை, 2011-ல் அ.தி.மு.க. கைப்பற்றியது. மதுரை மாநகராட்சியை, அ.தி.மு.க-வின் மூத்த அரசியல்வாதியான ராஜன் செல்லப்பா சிறப்பாகக் கொண்டு வருவார் என நம்பி அவரை மேயர் ஆக்கினார்கள் மக்கள். 

திருப்பரங்குன்றம் அருகிலுள்ள சேக்கிலுப்​பட்டிதான் ராஜன் செல்லப்பாவின் பூர்வீகம். நீண்ட காலத்துக்கு முன்பே பசுமலையில் செட்டிலாகிவிட்டார். தந்தை தலைமை ஆசிரியர். உறவினர்கள் பலரும் ஆசிரியர்கள், சகோதரி பல்கலைக்கழக துணைவேந்தர், ராஜன் செல்லப்பாவும் சட்டம் தெரிந்தவர்... இப்படி, மரியாதைமிக்க குடும்பம் என அனைத்தையும் கணக்குப்போட்டுத்தான் மக்களும் ஓட்டுபோட்டனர். ஆனால், அவர்களுக்கு ராஜன் செல்லப்பா ‘நாமம்’தான் போட்டார். மாநகராட்சியின் நலனில் ‘அக்கறை’ காட்டவேண்டியவர் தன்னுடைய ‘வளர்ச்சி’யில்தான் ஆர்வம் காட்டினார். விளைவு... மாநகராட்சி அதிகாரிகளும் முறைகேடுகள் செய்வதையே தங்களது வரைமுறையாக்கிக் கொண்டனர். ‘கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்’ என்கிற மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் அதிகாரிகளைக் கண்டு கொள்ள​வில்லை மேயர். அமைச்சர் செல்லூர் ராஜு தன் பங்குக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்குள் தலை நீட்ட... அதை சமாளிக்கவே ராஜன் செல்லப்பாவுக்கு நேரம் போதவில்லை. செல்லூர் ராஜு ஒரு கூட்டம் போட்டால் மேயர் ஒரு கூட்டம் போடுவார். அவர் பால்காவடி எடுத்தால், இவர் சண்டி யாகம் நடத்துவார். செல்லூர் ராஜு - ராஜன் செல்லப்பா பவர் பாலிடிக்ஸில் பாவப்பட்ட ஜென்மங்கள் மதுரைவாசிகள்தான்.

மாணவர் அணி, வழக்கறிஞர் அணியில் எல்லாம் இடம்பிடித்துவிட்டு ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக வந்து உட்கார்ந்தவர் ராஜன் செல்லப்பா. அப்போது தனக்கு உதவியாக வந்த செல்லூர் ராஜுவுக்கு வட்டச் செயலாளர் போஸ்டிங் போட்டுக் கொடுத்தார் ராஜன் செல்லப்பா. அரசியல் பரமபதத்தில் ஏணிகள் கிடைத்து செல்லூர் ராஜு அமைச்சரானது எல்லாம் காலத்தின் கோலம். ஆனால், ராஜ்யசபா எம்.பி. வரையில் உயர்ந்த ராஜன் செல்லப்பாவுக்கு இறங்கு முகம். கட்சியில் சில காலம் ஓரங்கட்டப்​பட்டதால் செல்லூர் ராஜுவின் வளர்ச்சியைக் கண்ணெதிரே பார்க்க வேண்டிய துர்பாக்கியம். செல்லூர் ராஜுவும் ராஜன் செல்லப்பாவுக்கு பல வகையில் குடைச்சல்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். துணை மேயராக இருந்த கோபாலகிருஷ்ணன் எம்.பி-யாக போட்டியிட சிபாரிசு செய்தார்; காலியான துணை மேயர் பதவிக்கு சீனியர் கவுன்சிலர்கள் பலரையும் ஒதுக்கிவிட்டு  திரவியம் என்ற தன்னுடய ஆதரவாளரை கொண்டு வந்து அமர்த்தினார் செல்லூர் ராஜு. சட்டசபைத் தேர்தலின்போது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ. ஆனார் ராஜன் செல்லப்பா. இதனால் ஷார்ட்கட்டில் பொறுப்பு மேயர் ஆனார் திரவியம். ராஜன் செல்லப்பாவோ எதையும் சுயமாக செய்தார். ஆனால் திரவியமோ, செல்லூர் ராஜுவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி அரசியலில் மதுரைக்கு வந்தது சோதனை! அதிகாரிகள் காட்டிலோ செம மழை.

அரசியல் இருக்கட்டும்! மதுரை மாநகராட்சி இந்த ஐந்தாண்டுகளில் சாதித்தது என்ன? ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஏதாவது செய்தார்களா? ஊழல் நாற்றமடித்துக் கிடக்கிறது மதுரை மாநகராட்சி. மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை ஆணையர் கிரன்குராலா இரண்டு வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தார். நடவடிக்கை பாய இருந்த நிலையில் மேலிடத்தில் சொல்லி கச்சிதமாக அவரை இடமாற்றம் செய்தார்கள். புதிதாக வந்த கமிஷனர் நந்தூரியோ இவர்களது திருவிளையாடல்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. ‘‘நந்தூரி வருவார். அறைக்குள் அமர்ந்து கம்யூட்டரில் கேம் ஆடுவார். அவர் செய்த ஒரே விஷயம் அவருடைய அறையை அழகுபடுத்த நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்ததுதான்’’ என்கிறார்கள் ஊழியர்கள்.

நூறு வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக மாறியபோதும் அரசு மருத்துவமனை போல ஒவ்வொரு வார்டும் சீக்குப் பிடித்திருக்கிறது. கோடிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய சிறப்பு நிதிகள் எல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை.   

“நான்கரை ஆண்டுகள் மேயராக இருந்து பல கோடிகளை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் ராஜன் செல்லப்பா. கடன் வாங்கி செலவழித்து கவுன்சிலராக வந்த எங்களுக்குத்தான் எந்த பலனும் இல்லை” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். அதிலும் குறிப்பாக, அ.தி.மு.க. மண்டலத் தலைவரான ராஜபாண்டியன் ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்குவார். “அடுத்த தேர்தலில் ஓட்டுக் கேட்டு வார்டுகளுக்குப் போனால் மக்கள் தர்ம அடி கொடுப்பார்கள்” என மீடியாவிலேயே முழங்கினார். இப்படி சொந்தக் கட்சியினராலேயே குறை சொல்லும் நிலைதான் இருக்கிறது. 

குன்னத்தூர் ஜமீன் சத்திரத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் காணாமல் போன விவகாரம் நீதிமன்றம் வரை போனது.  மரகதலிங்கத்தின் மர்மம் கடைசி வரையில் விலகவில்லை. செல்லூர் ராஜு மற்றும் சி.பி.எம். எம்.எல்.ஏ-வாக இருந்த அண்ணாதுரை ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ்களும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறப்புச் சான்றிதழும் வழங்கிய விவகாரம் நாடு முழுவதும் நாறியது. காசு கொடுத்தால் யாருக்கும், எந்த சான்றி​தழும் வாங்கலாம் என்ற சாதனையைப் படைத்தார்கள். இது மறைவதற்குள் நகர்ப்புற மக்கள் தொழில் செய்ய கடன் வழங்கும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு கடன் வழங்கி பல கோடி ரூபாயை ‘லபக்’கிய விஷயம் வெளியானது. இத்தனை சாதனைகளை செய்த மதுரை மாநகராட்சிக்கு விருது கொடுக்காமல் இருந்தால் எப்படி? தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாகத் தேர்வுசெய்த அரசு, விருதும், ரூ.25 லட்சம் பரிசும் கொடுத்து கவுரவித்தது! அடுத்த சில நாட்களிலேயே ‘சிறந்த மாநகராட்சி’யின் வாசலில் கோர்ட் அமீனா மூலம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதுதான் அதகளத்தின் உச்சம்!

சாலை அமைப்பதற்காக மதுரை மாநகராட்சி நிர்வாகம் அப்துல் ரஹீம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, கையகப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் ‘மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.59 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என கோர்ட் உத்தரவிட்டது. தொகையை வழங்காமல் மாநகராட்சி இழுத்தடித்தது. மீண்டும் கோர்ட்டின் கவனத்துக்கு விஷயம் போனதும் கடுப்பான நீதிமன்றம், மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா மாளிகை உள்ளிட்ட 7 ஹெக்டேர் நிலத்தை ஜப்தி செய்ய தடாலடி உத்தரவை பிறப்பித்தது. இதில் தற்போது தற்காலிகமாக தப்பித்திருக்கிறார்கள். இதேபோல் பணியாளர் நியமனத்தில் கோல்மால், மாநகராட்சி பள்ளிகள் சிலவற்றை நடத்த முடியாமல் தனியார்களுக்கு தாரைவார்ப்பு என பிரச்னைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

மானத்தை வாங்கும் மதுரை மாநகராட்சி

பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்த முறையில் அ.தி.மு.க. புள்ளி ஒருவருக்கு வழங்கியுள்ளனர். சமீபத்தில் மட்டும் சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் இந்த ஒப்பந்ததாரர்தான். ஆனால், ஒப்பந்தத்தை இதுவரை ரத்து செய்யவில்லை.  

‘‘மதுரையில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டடங்களை அப்புறப்படுத்து​வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களிடம் மாதாமாதம் சூட்கேஸ் வாங்கிக்​கொண்டு ‘நீ பாதி, நான் பாதி’ என மேயரும் அதிகாரிகளும் ஒற்றுமையாகப் பிரித்துக் கொள்கிறார்கள்’’ என நாம் சொல்ல​வில்லை... அ.தி. மு.க. கவுன்சிலர்களே பொருமுகிறார்கள். ‘‘நகர தலைமைப் பொறியாளராக இருக்கும் மதுரம், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி யசோதா ஆகியோரின் சொத்து விவரங்களையும், வங்கி பரிவர்த்தனை​களையும் ஆய்வு செய்தாலே பல கோடிகள் சிக்கும்’’ என்கிறார்கள்.

‘‘மதுரையின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ.350 கோடி அரசிடமிருந்து பெற்றது, 411 கோடி நிதியில் பல்வேறு மூலதன வேலைகள், எல்.இ.டி. விளக்குகள் பொறுத்துதல், மாட்டுத்தாவணியில் 12 கோடியில் 240 கடைகள், கோச்சடையில் 3 கோடி ரூபாய் செலவில் கனரக வாகன நிறுத்துமிடம், விராட்டிபத்தில் நவீன குளிரூட்டப்பட்ட மீன் அங்காடி வளாகம், ஆம்னி பஸ்கள் பேருந்து நிலையம் போன்ற சாதனைகளையும் அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றில் பல இன்னும் முழுமை அடையவில்லை.

மானத்தை வாங்கும் மதுரை மாநகராட்சி

மதுரையில் தண்ணீர் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது. காதில் புகைவர மக்கள் எல்லோரும் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அதனால், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்குள் நுழைய முடியாத நிலை. இதே தண்ணீர் பிரச்னையால்தான் சட்டமன்றத் தேர்தலின்போது செல்லூர் ராஜுவை சோலை அழகுபுரத்தில் குடத்துடன் வந்து மக்கள் முற்றுகையிட்டனர். இவை எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், அடுத்த மேயர் கனவில் தூங்கிக்கொண்டிருக்கிறார் திரவியம்.

என்னடா இது... மதுரைக்கு வந்த சோதனை!

அசைக்கமுடியாத அதிகாரி!

கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக இருப்பவர் மதுரம். அ.தி.மு.க., தி.மு.க. என யார் வந்தாலும் மதுரை மாநகராட்சியின் ஆக்டிங் கமிஷனர் இவர்தான். போலி பில், சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவது, திட்டங்களில் முறைகேடு, மாநகராட்சிக் கழிப்பறை ஏலம், ஊனமுற்றோர் பெட்டிக்கடைகளில் ஊழல், பார்க்கிங் ஏலம் என வகை தொகையில்லாமல் இவர் மீது குற்றச்சாட்டுகள். இதற்காகவே 10 ஆண்டுகளாக அவரை அந்த இடத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறது அரசு.

மிஸ்ஸிங் ஃபைல்ஸ்!

பல்வேறு துறைகளில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொகைகளுக்கு இதுவரை ஆடிட் செய்யப்படவில்லையாம். இந்த நிலையில், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்களை ஏப்பம்விட்ட முக்கியமான ஃபைல்களை அதிகாரவர்க்கத்தினர் தூக்கிச்சென்று விட்டார்களாம்.

காசு... பணம்... தண்ணீர்!

அய்யர் பங்களா, ஆனையூர், திருநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் காசு கொடுத்தே குடிநீர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தப் பகுதிகளுக்கெல்லாம் லாரியில் குடிநீர் அனுப்புவதாக மாநகராட்சி நிர்வாகம் கோடிக்கணக்கான ரூபாய்களை கணக்கு காட்டுகிறது. அந்தத் தண்ணீரோ திருமண மண்டபம், ஹோட்டல்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. 

வெள்ளைக்கல் ஊழல்!

‘குப்பைகளை உரமாக்கும் திட்டம்’ என்று வெள்ளைக்கல் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்தார்கள். ஆனால், இன்றுவரை திட்டம் செயல்படாமல் அப்படியே முடங்கிக்கிடக்கிறது. இந்த ஊழலுக்குப் பிறகு மதுரை மாநகராட்சி எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் ‘எதுக்கு... கொள்ளையடிக்கவா?’ என கிண்டல் அடிக்கிறார்கள் மக்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.