
ஊருக்கு ஊர் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட் களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட சில ஊர்களும் அதற்குரிய சிறப்புப் பொருட்களும்...
குமாரபாளையம் லுங்கி
இடம்: குமாரபாளையம் (நாமக்கல்)
பொருள்: லுங்கி.
சிறப்பு: கேரளத்து சேட்டன்கள் முதல் இந்தியா முழுவதும் விரும்பி அணிவது இங்கு தயாராகும், லுங்கி எனப்படும் கைலிகள்தான்.
விலை: 120 ரூபாய்.

நெய்க்காரப்பட்டி வெல்லம்
இடம்: நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்)
பொருள்: வெல்லம்.
சிறப்பு: தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது. நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது.
விலை: தரத்தையும் நிறத்தையும் பொறுத்து ஒரு கிலோ ரூபாய் 25-ல் இருந்து தொடங்குகிறது.
கும்பகோணம் வெற்றிலை
இடம்: கும்பகோணம் (தஞ்சாவூர்)
பொருள்: வெற்றிலை.
சிறப்பு: கறுப்பு நிறத்தில் அதிக காரமாக இருக்கும் கம்மாறு வெற்றிலை, கற்பூர வாசனை மிகுந்த கற்பூர வெற்றிலை. வெளிர் நிறத்தில் காரம் இல்லாத ஓரளவு சாதாரண வெற்றிலை என பல ரகங்கள் கிடைக்கும்.
விலை: ஒரு கவுளி ரூபாய் 60-ல் இருந்து ஆரம்பம்.

நத்தம் ரெடிமேட் சட்டைகள்
இடம்: நத்தம் சென்ட்ரல் சினிமா வீதி (திண்டுக்கல்)
பொருள்: சட்டை.
சிறப்பு: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாம்பே காட்டன், நெப்சி கதர், மெஜுராகோட்ஸ் என பலவகை சட்டைகள் தயார் செய்வதுதான் நத்தம் சிறப்பு. தமிழ்நாடு முழுக்க இங்கிருந்தே விநியோகம்.
விலை: 65 ரூபாயில் தொடங்கி பையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப சட்டைகள் கிடைக்கும்.
சீர்காழி பிரம்பு நாற்காலிகள்
இடம்: சீர்காழி (நாகப்பட்டினம்)
பொருள்: பிரம்பு ஊஞ்சல், சோபா போன்றவை.
சிறப்பு: தரமான பிரம்புப் பொருட்களைக் குறைந்த விலையில் மட்டுமில்லாமல், பல டிசைன்களில் வாங்க தமிழகத்திலேயே சிறந்த இடம்.
விலை: ஊஞ்சல், சேர் 2,000 ரூபாய் முதல் 5,000 வரை. சோபாசெட் 18,000 ரூபாய் முதல் 25,000 வரை.

கரூர் வீட்டு உபயோகத் துணி வகைகள்
இடம்: கரூர் (கரூர் பஸ் நிலையத்துக்குப் பின்புறமுள்ள 80 அடி சாலை)
பொருள்: வீட்டு உபயோக துணி வகைகள்
சிறப்பு: திரைச்சீலைகள் மேஜை விரிப்புகள் முதல் ஏப்ரான், கிளவுஸ் என பல ரகங்கள் கிடைக்கும். இவற்றில் உங்கள் விருப்பத்தின் பேரில் எம்ப்ராய்டரியும் செய்து தரப்படுவது கூடுதல் சிறப்பு.
விலை: இங்கு 200 ரூபாய்க்கு விற்கப்படும் திரைச்சீலை மற்ற ஊர்களில் 2,000 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.
பத்தமடை பாய்
இடம்: பத்தமடை (திருநெல்வேலி)
பொருள்: பாய்.
சிறப்பு: உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாயை இந்திய குடியரசுத்தலைவரிலிருந்து விக்டோரியா மகாராணி வரை பலரும் பாராட்டி இருக்கின்றனர். கம்பளிப் படுக்கை, கோரைப் பாய், பிரம்புப் பாய், ஈச்சம் பாய் என்று பல வகை பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
விலை: இங்கு 150 ரூபாய்க்கு விற்கப்படும் பாய் வெளியூர்களில் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திண்டுக்கல் பூட்டு
இடம்: திண்டுக்கல்.
பொருள்: பூட்டு
சிறப்பு: மாங்காய் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு முதல் கோயில்களுக்காக 20 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட பூட்டுக்களும் இங்கு தான் உருவாக்கப்படுகிறது. 8 அங்குல மணிப்பூட்டுகள் சிறப்பு வாய்ந்தவை... இதில் சாவியைப் போட்டு சுழற்றும்போதெல்லாம் மணிச்சத்தம் வரும்.
விலை: 50 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை.
சென்னிமலை போர்வை
இடம்: சென்னிமலை (ஈரோடு)
பொருள்: போர்வை.
சிறப்பு: சென்னிமலை போர்வை...15 ஆண்டுகளுக்கு நிறமும் தரமும் நின்று பேசுமாம்.
விலை: 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப போர்வைகள் கிடைக்கின்றன.

மார்த்தாண்டம் தேன்
இடம்: மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)
பொருள்: தேன்.
சிறப்பு: இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, அக்மார்க் தேனை உற்பத்தி செய்து, விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் விற்பனையாகிறது.
விலை: அரை கிலோ தேன் 100 - 150 ரூபாய். மற்ற ஊர்களில் இதைவிட 2 அல்லது 3 மடங்கு விலை.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.