News
Loading...

வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எங்கே? எப்போது?

வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எங்கே? எப்போது?

கலைஞரின் அறிக்கை :

11-9-2016 அன்று  "வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எங்கே? எப்போது?" என்ற தலைப்பில்,  நான் விடுத்த அறிக்கை ஒன்றில், 9-9-2016 தேதிய  "தி இந்து"ஆங்கில நாளிதழில் "அடையாறு மீண்டும் பெருக்கெடுத்தால், சென்னை வாழ் மக்களுக்கு தப்பிக்க வழியே இல்லை - மற்றொரு வெள்ளம் வந்தால், மாநகரைப் பாதுகாப்பதற்கு அரசால் எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்று மக்கள் அஞ்சுகிறார்கள்"என்று  வெளி வந்த செய்தியினை எடுத்துக்காட்டி,  கடந்த ஆண்டு தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்திலும், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா  மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னை மாநகரிலும்  ஏற்பட்ட    வரலாறு  காணாத  வெள்ளத்திற்கும்  -  அந்த வெள்ளத்தை  எதிர்கொள்கிற  வகையில் அரசின் சார்பில்  எந்தவிதமான  முன்னேற்பாடுகளும் செய்யாமல், வானிலை ஆய்வுத் தரப்பினரால்  தரப்பட்ட  எச்சரிக்கை அறிவிப்புகளையும்  இலட்சியம்  செய்யாமல் இருந்ததால்,    ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  மக்கள்  உயிர் இழக்கவும், இலட்சக்கணக்கானோர்   உடைமைகளை இழக்கவும்,  நடுத்தெருவில்  நாடோடிகளாகத்  திரியவுமான  நிலைக்கு  ஆட்பட்டு, சொந்த ஊரிலேயே குழந்தை குட்டிகள் மற்றும் பெட்டி படுக்கையுடன் அகதிகளைப் போல் அலைந்து அல்லல்படவுமான நிலை ஏற்பட்டதை யெல்லாம் விவரித்து  இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் சுணக்கம் காட்டாமல் உடனடியாகச் சுறுசுறுப்பான  நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல்,  மீண்டும் ஒரு செயற்கைப் பேரிடரை சென்னை மாநகரமோ, மற்ற மாவட்டங்களோ நிச்சயம் தாங்காது என்று கூறியிருந்தேன்.   ஆனால் அ.தி.மு.க. அரசு அதைப்பற்றி கவலையே படவில்லை. 

நேற்றையதினம் நாளேடுகள், வார இதழ்கள் ஆகியவற்றில்  இந்த வெள்ளம் பற்றி  பரபரப்பான செய்திகள் வந்துள்ளன. "மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் வட சென்னையைக் காப்பாற்றுங்கள் - அரசுக்கு ஆர்வலர்கள் ஆறு கோரிக்கை"என்ற தலைப்பில் "தி இந்து"தமிழ் நாளிதழிலும்;  "பதறுது உள்ளம் :  பாயுமோ வெள்ளம்!  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் - மழை நீர் வடிகால் இல்லாததால் மக்களிடம் பரவும் அச்சம்"என்ற தலைப்பில் "தின மலர்"நாளிதழும்;  "என்ன செய்யப் போகிறோம்?"என்ற தலைப்பில் "ஆனந்த விகடன்"வார இதழும் விரிவாக இதுபற்றி  எச்சரித்துள்ளன.  

குறிப்பாக அந்தச் செய்திகளில் "தினமலர்" நாளேடு, "நெருங்கி விட்டது, வடகிழக்குப் பருவ மழை.   மாநகரின் புகை மூட்டங்களுக்கு நடுவே, மேகம் கறுத்து, மின்னல் வெட்டும் போதெல்லாம்,  மனசுக்குள்ளே இடி இறங்குவது போல,  ஒரு வலி வந்து போகிறது. அது, கடந்த ஆண்டு தந்த கசப்பான அனுபவத்தின் வேதனை.  ஓராண்டில்,  நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வடிகால் பணியை முடிக்க வேண்டிய அதிகாரிகள், அதைச் செய்யாததால், மக்களை மூழ்கடிக்கிறது அச்சம்..  நகர் முழுவதும் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இல்லவே இல்லை.  நடக்கும் வேலைகளை வேகமாக முடிப்பதிலும், ஆக்கிரமிப்புக்களை அகற்று வதிலும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த அக்கறையும் காட்டவில்லை.  சம்பந்தப் பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, "ஆக்கிரமிப்புக்களை அளவிட வருவாய்த்  துறை நில அளவை செய்ய வேண்டும். அத்துறையின் ஒத்துழைப்பு இல்லாததால், நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது"என்று பொறுப்பை வருவாய்த் துறை மீது சுமத்தினார். பல பகுதிகளிலும் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால்  ஆக்கிரமிப்புகள்  அகற்றப் படவில்லை.  மழைநீர் வடிகால்களும்  முழுமையாக தூர்வாரப் படவில்லை.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஓராண்டில் உருப்படியாக எந்த ஆறும், கால்வாயும் முழுமையாக மீட்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் தான் இப்படி என்றால்,  வெள்ளத்தால் மக்கள் மத்தியில் பெரும் அவப் பெயரைச் சந்தித்து,  சென்னையில் பல தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க. அரசாவது, கொஞ்சம் மெனக் கெட்டிருக்கலாம்.  அரசின் மவுனம் அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது"என்றெல்லாம் அதிகாரிகள் மீதும், அதிமுக அரசின் மீதும்  செயலின்மையைச் சுட்டிக்காட்டிக் கோபத்தைக்  கக்கியுள்ளது.

சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், மாநில மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் வசந்திதேவி,  கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா,  திருநங்கை செயல்பாட்டாளர்சங்கரி,  சென்னை ஆதரவு குழு உறுப்பினர் நித்தியானந்த் ஜெயராமன்,  எண்ணுhர் அனைத்து மீனவர் கூட்டமைப்பு துணைத் தலைவர் செல்வராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வட சென்னையில்  கடந்த ஆண்டு போல மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம் ஆகியவற்றை தூர்வாரி  ஆழப்படுத்துவது உள்ளிட்ட ஆறு பணிகளை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்"என்று தெரிவித்திருக்கிறார்கள்.    

இன்னும் சொல்லப் போனால், "ஆனந்த விகடன்"வார இதழ் தலையங்கமே தீட்டியிருக்கின்றது.  அதில், "அக்டோபர், நவம்பர் மாதம் வந்தால்,  வழக்கமாக தீபாவளிக் கொண்டாட்டக் குதுகாலம் தான் நமக்குள் வரும்.  ஆனால் இந்த ஆண்டோ, மெல்லிய பயம் அடிவயிற்றைக் கவ்விக் கொண்டிருக்கிறது.  காரணம், சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் பெய்த பலத்த மழையும் பயங்கர சேதமும் தான்!  கடந்த ஆண்டு வெள்ளச் சேதத்துக்குக் காரணமாக இருந்த அத்தனை காரணி களையும் இப்போது களைந்து விட்டோமா?  ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகளைப் பலப்படுத்தி விட்டோமா?  ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகளைப் பலப்படுத்தி விட்டோமா?   மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் முழுமை அடைந்து விட்டனவா?  எவ்வளவு பலத்த மழை வந்தாலும் மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டனவா  என்ற கேள்விகள், நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.   கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மழை வெள்ளப் பாதிப்பு வராமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கோரியும்,  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறக்கப் பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும்  சென்னை உயர் நீதி மன்றத் தில்  பலர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர்.  இதை விசாரித்த உயர் நீதி மன்றம், "மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில்  எந்தவொரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.  எனவே, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத் துக்கு இறுதிவடிவம் கொடுத்து, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.  இனி வரும் காலங்களில் பெருவெள்ளப் பாதிப்பு தொடராமல் தடுக்க, தகுதி வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்"என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.  வரும் முன் காத்தால் தான் வருங்காலம் வளமாக இருக்கும். பாதிப்பில் இருந்து கற்க வேண்டிய முதல் பாடம் இது தான்"என்று "ஆனந்தவிகடன்"எழுதியுள்ளது.

ஆனால் அ.தி.மு.க. அரசு வெள்ளத் தடுப்பு சம்பந்தமாக முக்கியமான  இந்தப் பாடத்தை இன்னமும் கற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை என்பதைத் தான் ஏடுகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ள செய்திகள் காட்டுகின்றன.  அரசியல் ரீதியாக எச்சரிக்கை செய்தாகி விட்டது;  பத்திரிகைகளும் பதைபதைப்புடன் எடுத்துரைக்க வேண்டியவற்றைச் சொல்லி விட்டன;  உயர் நீதி மன்றமும் இடித்துரைத்து விட்டது;   சமூக அக்கறை கொண்டோரும்  மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு விட்டனர். இவ்வளவுக்குப் பிறகும்  அதிமுக அரசு செயலற்றிருந்தால்,  தீராப் பழி வந்து சேர்ந்து விடும் என்பதை உணர்ந்திட வேண்டும். சென்னை மாநகர் மீண்டும் ஒரு பேரிடரையும்,  இழப்பையும் சமாளிக்கும் நிலையில் இல்லை என்பதை  அ.தி.மு.க. அரசு புரிந்து கொண்டு, வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை என்பதால் போர்க்கால அடிப்படையில் வேகமாகவும், தீவிரமாகவும் உடனடியாகச்  செயல்பட வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.