News
Loading...

நாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – சீமான்

நாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – சீமான்

இயற்கை விவசாயத்தைப் பொதுமை படுத்தும் நோக்கில் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி “மரபுவழி உழவு மற்றும் உணவு பெருவிழாவை” வருகின்ற செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டு உள்ளது.
இந்த நிகழ்வு, காலை 10 மணிக்குக் கருத்தரங்கமாக தொடங்கி, கண்காட்சி, வேளாண்மை ஆர்வலர்களுக்கு “வேளாண்பெருங்குடியோன் நம்மாழ்வார் விருது”, மாலை திறந்தவெளி மாநாடு என நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், மூலிகை மருத்துவர்கள், மரபுவழி உணவு நிபுணர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு மணல் நிறைந்த பகுதியில் ஒரு பெருங்காட்டையே உருவாக்கி, அந்தக் காட்டின் உயிர்ச் சூழலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இன்று அந்தக் காட்டை பாதுகாக்கப் போராடி வருகின்றவரும், இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான “ஜாதவ் மோளை பேயிங்” அவர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பாட்டு இயற்றிய இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழனும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் ஜாதவ் மோளை பேயிங் அவர்களுக்கு “மாயோன் விருதும்”, நெல் ஜெயராமன், பவானி சின்னத்தம்பி, பாமையன், பியூஸ் மனுஷ, ஹிப் ஹாப் தமிழன், மருத்துவர் காசிப்பிச்சை, நெல்லை சிவராமன், ராவணப்பிரபு, கோவை யோகநாதன், மருத்துவர் தணிகாசலம் மற்றும் கீலர் ஹலீம் ஆகியோருக்கு “வேளாண்பெருங்குடியோன் நம்மாழ்வார்” விருதும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்  இயற்கை மீட்சி பேருரை ஆற்ற இருக்கிறார்.
இதற்காக வீரத்தமிழர் முன்னணி விடுத்துள்ள அழைப்பில்,
பழந்தமிழர் மரபு, ஐந்திணை ஒழுகலாறு, பண்டைய இலக்கியம் என அனைத்திலும் நிரம்பக் கிடக்கிறது தமிழரின் மரபு வழி தாளாண்மை எனும் வேளாண்மை தொழில். இதைத்தான் உலகப்பொதுமறை தந்த வள்ளுவப்பெருந்தகை
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
 உழந்தும் உழவே தலை”
என்று உழவின் அறம் கூறியுள்ளார். 

அப்படிப்பட்ட உழவுத்தொழில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது. உலகப்பொதுமயம், மக்கள்தொகை வளர்ச்சி, உற்பத்தி பெருக்கத்தின் தேவை எனப் பல காரணிகள் தமிழர் தாளாண்மை தொழிலை காவுகொண்டு உள்ளது. இதுபோக இந்திய துணைக்கண்டத்தில் சிக்கிய தமிழகம் நான்கு புறமும் தனது உரிமையை இழந்து, மூன்று புறமும் தனது நதிநீர் உரிமையை இழந்து நாதியற்று கிடக்கிறது. நாசகார தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு கேட்காமல் கிடைக்கிறது. நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை. 

மத்திய நிறுவனங்கள், மத்திய கல்வி நிலையங்கள், மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் இவைகள் தமிழகத்தின் பக்கம் ஒன்றுகூடத் திறக்கவில்லை. ஆனால் தமிழகத்தின் இயற்கை வளத்தினை கபளீகரம் செய்கின்ற கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ ஆய்வகம், கெயில் குழாய்ப்பதிப்பு, மீத்தேன் எரிகாற்று திட்டம் என அனைத்துத் திட்டங்களையும் இந்த இந்திய அரசு தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றத் துடிக்கிறது. பசுமையான தமிழகத்தை விரைவில் பாலைவனமாக மாற்ற இந்த அரசுகள் அசுரர் வேலை செய்கின்றது.

இந்த இக்கட்டான சூழலில், தமிழன் தனது மண்ணை அழிவில் இந்து மீட்க தற்சார்பு பொருளாதாரம் மற்றும் தற்சார்பு நீர்மேலாண்மை விவசாயம் அவசியம் என்ற பாதையை உருவாக்கிப் பயணப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த மண்ணை பாழ்ப்படுத்தும் கார்பிரேட்டின் ரசாயன உரங்களைப் புறந்தள்ளி, இயற்கை உங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இயந்திர கலப்பைகள் ஆக்கிரமித்த நமது வயல்வெளிகளைக் கலப்பைகள் கொண்டு காப்பாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த உன்னத முன்னெடுப்பைத் தமிழகம் முழுதும் சிலர் செய்து கொண்டு வரும் இந்தச் சூழலில், இயற்கை விவசாயத்தைப் பொதுமை படுத்தும் நோக்கில் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி “மரபுவழி உழவு மற்றும் உணவு பெருவிழாவை” வருகின்ற செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டு உள்ளது.  இந்த நிகழ்விற்கு இயற்கை ஆர்வலர்களை வரவேற்று மகிழ்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.