News
Loading...

"உங்களால் மதுரை சுத்தமான நகரமாக மாற வேண்டும்" டிராஃபிக் ராமசாமியை பாராட்டிய நீதிபதி

"உங்களால் மதுரை சுத்தமான நகரமாக மாற வேண்டும்" டிராஃபிக் ராமசாமியை பாராட்டிய நீதிபதி

மதுரையில் விதிமீறல் ப்ளெக்ஸ் பேனர்களை அகற்றக்கோரும் வழக்கில் ஒரு வாரத்தில் ப்ளெக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "உங்களால் மதுரை சுத்தமான நகரமாக மாற வேண்டும்" என்று டிராஃபிக் ராமசாமியை பாராட்டியுள்ளனர்.

இந்த வயதிலும் சமூக அக்கறையுடன் இயங்கி வருபவர் டிராஃபிக் ராமசாமி. சமூகம் சார்ந்த பிரச்னைகளில் புகார் மனுக்களோடு காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பார். சென்னையைத்தொடர்ந்து டிராஃபிக் ராமசாமி இப்போது கலக்கி வருவது மதுரையில். 'சென்னையில் என்ன வேணும்னாலும் செய்யலாம். மதுரையில் எல்லாம் எடுபடாது' என ஆரம்பத்தில் டிராஃபிக் ராமசாமியை பற்றி நினைத்தவர்கள், இப்போது ஆடிப்போய் இருக்கிறார்கள்.

பெர்மிட் இல்லாமல் ஆட்டோக்கள் ஓடுவதை அறிந்து வழக்கு போட்டு தடுத்தது... சட்டவிரோத பேனர்களை அகற்ற போலீஸில் புகார் அளித்து, அவர்கள் தாமதித்தால் தனி ஒருவனாய் கிழித்தெறிவது, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது என இவரின் செயல்பாடு எல்லாம் அதிரடி ரகம் தான்.

சில மாதங்களுக்கு முன்னர், அதிமுகவினர் விளம்பர் பேனர்களை சாலைகளை மறைத்து வைத்திருக்க... அவ்வழியாக வந்த டிராஃபிக் ராமசாமி. இந்த விளம்பர பேனர்கள் டிராஃபிக்க்கு இடையூறாக உள்ளது. உடனே அகற்ற வேண்டும் என போலீஸிடம் சொல்ல... அதிமுகவின் பேனர் என்பதால் எப்படி அகற்றுவது என தெரியாமல் அமைதியாக நின்றனர். கமிஷனருக்கும், கலெக்டருக்கும் போனில் புகார் தெரிவித்து விட்டு காத்திருந்த டிராபிக் ராமசாமி, அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தானே அகற்றத்துவங்கினார்.

அதிமுகவினர் வெகுண்டெழுந்து அவரை தாக்க முற்பட, டிராஃபிக் ராமசாமியின் பாதுகாவலர் அதிமுகவினரை விரட்டி அடித்தார். இதையடுத்து பேனர்களே போலீஸாரே அகற்றினர். இது தொடர்பாக அதிமுகவினர் மீதும், நடவடிக்கை எடுக்கத்தவறியதாக மாவட்ட நிர்வாகம் மீதும் வழக்கு தொடர்ந்தார் டிராஃபிக் ராமசாமி. ப்ளக்ஸ் பேனர் விவகாரத்தில் அதிமுகவினர் மீது அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி  மதுரை, மேல மாசிவீதியில் அதிமுக நடத்திய பொதுக்கூட்டத்துக்காக வைக்கப்பட்ட பேனர்களை படம் எடுத்த டிராஃபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமாவை அதிமுகவினர் தாக்கினர். தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

இந்நிலையில், விளம்பர பேனர்கள் சம்பந்தமான வழக்கு விசாரணையின் போது மனுத்தாக்கல் செய்த டிராஃபிக் ராமசாமி, "சட்டத்தை ஆளுங்கட்சியினர் மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவை மீறி  மதுரையின் நெரிசல் மிகுந்த இடங்களில் பேனர்கள் வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகன விபத்து ஏற்படவும் காரணமாகிறது. இதுபற்றி கலெக்டர், கமிஷனரிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. எனவே கடமை தவறிய போலீஸ் கமிஷனர் உட்பட சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிடவேண்டும்"  என கேட்டிருந்தார்.

பேனர்களை அகற்ற ஒரு வாரம் கால அவகாசம் அளித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர், "இந்த விவகாரத்தில் மதுரையை சேர்ந்தவர்கள் செய்யத் தவறிய பணியை, சென்னையைச் சேர்ந்த மனுதாரர் (டிராஃபிக் ராமசாமி) பொதுநல வழக்கு தொடுத்து செய்திருக்கிறார். அவர் செயல்  பாராட்டுக்குரியது. உங்களால் மதுரை சுத்தமான நகரமாக மாறட்டும்," எனத்தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே தன்னுடைய உதவியாளர் பாத்திமாவை தாக்கிய விவகாரத்திலும் அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் டிராஃபிக் ராமசாமி. 

"உங்களால் மதுரை சுத்தமான நகரமாக மாற வேண்டும்" டிராஃபிக் ராமசாமியை பாராட்டிய நீதிபதி

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிக்காக பொதுநல வழக்கு தொடர்ந்து, சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை ஆணையம் அமைய காரணமாக இருந்தவர் டிராஃபிக் ராமசாமி தான். தற்போது மதுரையின் ஒவ்வொரு பிரச்சனையிலும் சட்ட போராட்டத்தை நடத்தி துவங்கியிருக்கிறார்.

"மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிகாரத்தின் கீழ் வரும் 13 மாவட்டங்களில் ப்ளெக்ஸ்  பேனர்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும். 13 மாவட்ட கலெக்டர்களும் அதைப்பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என டிராஃபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் தற்போது உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.