News
Loading...

MSDhoni The Untold Story - திரை விமர்சனம்

MSDhoni The Untold Story - திரை விமர்சனம்

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் இன்று ரிலீஸாகியிருக்கிறது எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி. ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து  வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ஒருவரின் படத்துக்கு கிடைக்கும் ஆர்ப்பாட்டமும், உற்சாகமும் தோனிக்கும் கிடைத்திருக்கிறது.


பம்ப் ஆபரேட்டர் வேலை, சிறிய அப்பார்ட்மெண்ட் வீடு, அன்பான குழந்தைகள் என மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருகிறார் பான் சிங். நன்றாக படிக்க வேண்டும், என்னைப் போல பம்ப் ஆபரேட்டர் வேலை பார்க்க கூடாது என தோனிக்கு சிறிய வயதிலேயே அறிவுரை சொல்கிறார். தோனிக்கு விளையாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். பள்ளியில் கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங்கில் கலக்குவதை பார்த்த பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி தோனியை கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்ய சொல்கிறார். அங்கிருந்து தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும், படத்தின் கதையும் ஆரம்பிக்கிறது.

கிரிக்கெட்  ஆட வந்த பிறகு, கூச் பீகார் டிராபி, துலீப் டிராஃபி என அடுத்தடுத்து பெரிய பெரிய டோர்னமெண்ட்களில் ஆடும் அளவுக்கு விறு விறுவென வளர்கிறார் தோனி. முக்கியமான முதல் தர போட்டிகள் அனைத்தையும் சிறு சிறு அத்தியாயமாக கடத்துகிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே. தோனி ஆட வந்தால் எதிரணி மிரள்வதும், பந்துகள் பறந்து தொலைவதும், ஆட்டத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் கூடுவதுமாக திரைக்கதை நகர்கிறது. தியேட்டரும் அதிர்கிறது.

ஒரு கட்டத்தில் ரயில்வே அணிக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது ரெயில்வேயில் வேலை போனஸ். அப்பாவுக்காக வேலைக்குச் செல்கிறார் தோனி. ஆனால்  வேலை அவருக்கு பிடிக்காமல் போக, ராஜினாமா செய்து விடுகிறார். அதன் பின்னர் தோனி எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார், தோனியின் முதல் காதல் என்ன ஆனது? சாக்ஷியை கரம் பிடித்தது எப்படி? கேப்டனாக என்னவெல்லாம் செய்தார் என்பதை மூன்று மணி நேரம் பத்து நிமிட திரைப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

MSDhoni The Untold Story - திரை விமர்சனம்

இளைமைக்கால தோனியை கண் முன் கொண்டு வந்ததில் செம ஸ்கோர் செய்கிறார் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் முன்னாள் காதலியாக வரும் பிரியங்காவின் கதாப்பாத்திரத்தில் 'டைரிமில்க்'  திஷா படானி நடித்திருக்கிறார். தோனி- பிரியங்கா காதல் அத்தியாயம் கொஞ்ச நேரமே வந்தாலும் ’கொஞ்சல்’ நேரமது. ஹெலிகாப்டர் ஷாட் ஆட நண்பனிடம் இருந்து தோனி கற்றுக்கொள்ளும் காட்சி கியூட். ' அந்த கரக்பூர்ல ஜாப் செக்யூரிட்டில மாட்டிக்கிட்டா அதுக்கப்பறம் என்னால இதுவே செய்ய முடியாதுப்பா'  , “லைஃபும் கிரிக்கெட் மாதிரிதான். எல்லா பாலும் அடிக்கற மாதிரி வராது” போல சில இடங்களில் ஃப்ரீ ஹிட் அடிக்கின்றன வசனங்கள். மற்ற இடங்களில் எல்லாம் டாட் பால் கணக்காக போகின்றன

வழக்கமாக பயோகிராபி படங்களில் மிஸ் ஆகும் காமெடி, தோனியில் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ரயில்வே குவார்ட்டர்ஸில் தோனியின் அறையை சுற்றிக்காட்டும் அந்த ரூம் மேட் மெர்சல் சாய்ஸ்!

தோனி போதாதா? கூடவே சச்சின், யுவராஜும் இருக்கிறார்களே... அது போதும் என  முடிவு செய்திருக்கிறார் இயக்குனர். நேர்கோட்டுக்கதையாக இருந்தாலும் தோனி இன்னிங்கிஸ் போல கடைசி சில நிமிடங்களில் மட்டும் தான் விறுவிறுவென திரைக்கதை நகர்கிறது. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி என படத்தின் பெயரை பார்த்து  தோனியின் வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்த்து போனால்  தோனியின் விக்கிப்பீடியாவுக்கு விஷுவல் வடிவம் தந்திருக்கிறார் நீரஜ். அன்டோல்ட் எங்கப்பா..........

அஸார் படத்துக்கு வந்த விமர்சனங்களை பார்த்து உஷாராகி விட்டாரோ என்னவோ, ஆட்டோ பயகிராஃபி திரைப்படம்  எடுக்கிறேன் என சொல்லிவ்ட்டு யாருக்கும்  வலிக்காமல், மருந்துக்கு கூட எந்த வித உள் அரசியல்கள், கான்ட்ரவெர்ஸி எதையும் டச் பண்ணாமல் சென்றிருக்கிறார்கள். தோனிக்கு நரேந்திர சிங் தோனி என்ற அண்ணன் உண்டு. பாஜகவில் இருந்து  பிற்பாடு முலாயம் சிங் யாதவை சந்தித்து சமாஜ்வாடியில் இணைந்த அந்த அரசியல்வாதி அண்ணன் கேரக்டரே திரைப்படத்தில் இல்லை . 

யுவராஜ் அப்பா உடனான தகராறு வரலாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசனுடனான நெருக்கம், மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள், லட்சுமிராயின் கிசுகிசு உட்பட அத்தனையையும்  கதை, திரைக்கதை  எழுதும்போது சாய்ஸில் விட்டுவிட்டார்  நீரஜ் பாண்டே.

சாக்‌ஷி, யுவராஜ் சிங் எல்லாம் உண்மையிலே நடித்திருக்கிறார்களா என நினைக்க வைக்கும் செம காஸ்டிங். எங்கப்பா பிடிச்சீங்க?

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் மொத்த பரபரப்பையும் பத்து நிமிட காட்சியாக திரையில் கொண்டு வந்த விதம் 'வாவ்'. தோனி இறங்கி அடித்த அந்த சிக்ஸரில் அத்தனை ரசிகர்களும் டைம் டிராவல் செய்து  ஏப்ரல் 2,2011க்குச் சென்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இந்தியாவுக்கு கேப்டனாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த தோனியின் சரித்திர அத்தியாயத்தை  இளைஞர்களுக்கு மோட்டிவேட்டிவாக போட்டுக் காட்டியதில் இயக்குனர்  நீரஜ் ஜெயித்திருக்கிறார்.  

முழுமையான தோனியின் வரலாறு சொல்லப்பட வில்லை என்றாலும். சுஷாந்த் சிங் ராஜ்புட் திரைப்படத்தில் சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் தோனியே சிக்ஸ் விளாசியது போல தியேட்டரை விசில்களாலும், கரகோஷங்களாலும் தகர்க்கிறார்கள் ரசிகர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் வரும் அந்த ஒரு காட்சி கபாலியின் ‘மகிழ்ச்சி’க்கு சமமாக ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. 

பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், ஸ்டேடியம் கூட்டத்தின் உணர்வை பின்னணியில் கொண்டு வந்ததில் அசத்தியிருக்கிறார்கள். ஹெச்.டி.யில் மேட்ச் பார்க்கும் அளவுக்கு துல்லியமான ஒளிப்பதிவு (சுதீர் பல்சானே)

சொல்லப்படாத விஷயங்களை தவிர்த்து விட்டால் தோனி திரைப்படம், தோனியின் வெறித்தன ரசிகர்களுக்கு இன்னொரு மாஸ் ஹெலிகாப்டர் ஷாட் விருந்து. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.