News
Loading...

ஃபீஸ் கட்ட பணம் இல்லையா... நான் இருக்கிறேன் வாருங்கள்!

தோள் கொடுப்பாள் தோழி - ஸ்ரீப்ரியா

தோள் கொடுப்பாள் தோழி - ஸ்ரீப்ரியா

வியாசர்பாடி, எருக்கஞ்சேரி லஷ்மி அம்மன் நகர் சரவணா தெருவில் இருக்கும் அந்த வீடு பிள்ளைகளால் நிறைந்திருக்கிறது. அத்தனை விழிகளிலும் நம்பிக்கைக் கீற்று. ‘அம்மா... அம்மா’ என்று தன்னை வளைய வரும் பிள்ளைகளை அன்போடு அரவணைத்து, விசாரித்து உபசரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீப்ரியா. ‘யார் இந்தப் பிள்ளைகள்’ என்றால், ‘என்னோட பிள்ளைகள்தான்’ என்று பெருமிதமாகச் சொல்கிறார் அவர். ஸ்ரீப்ரியா வீட்டுக்கு தினமும் இப்படி நான்கைந்து பிள்ளைகளாவது வருகிறார்கள். ‘இந்த வருஷம் ஃபீஸ் கட்ட முடியலேம்மா... படிப்பை நிறுத்திடலாம்னு வீட்டுல சொல்றாங்க’, ‘+2வுல 1110 மார்க்கும்மா... மேல படிக்க வசதியில்லை... வேலைக்குப் போகச் சொல்றாங்க...’, ‘படிக்க வைக்க வசதியில்லை... நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க...’, ‘ஃபீஸ் கட்டலேன்னு வெளியில நிறுத்திட்டாங்கம்மா...’  

இப்படி ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு குமுறல். ஒரு பிள்ளைகளைக் கூட நிராகரிப்பதில்லை ஸ்ரீப்ரியா. பெற்றோரை அழைத்துப் பேசுகிறார். படிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்கி படிப்பைத் தொடரச் செய்கிறார். கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டு அப்பிள்ளைக்கு தானே தாயாகி விடுகிறார். படிப்பை கண்காணித்து, தேவையான பயிற்சிகள் தந்து வேலையில் சேரும் வரை உற்சாகப்படுத்தி வழிநடத்துகிறார். இப்படி 250க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை கல்வியால் வெளிச்சமாக்கி இருக்கிறார் ஸ்ரீப்ரியா!  
சௌகார்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஸ்ரீப்ரியா, தாய் அல்லது தந்தையை இழந்த, அடித்தட்டு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்கென்றே ‘கோல்டு ஹார்ட் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பை நடத்துகிறார். 

தன்னிடம் படித்த மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என இதுமாதிரி பிள்ளைகளுக்கு உதவுவதற்கென்றே ஒரு பெரிய வட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார். “இந்தப் பிள்ளைகள் எல்லாம் வெகுஜன சமூகத்தோட பார்வையே படாம ஒதுங்கியிருக்கிற குப்பங்கள், குடிசைப்பகுதிகள், சாலையோரக் குடில்கள், தீப்பெட்டியை அடுக்கி வச்ச மாதிரி இறுக்கமா கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குள்ள மூச்சு முட்ட வாழுற ஏழைப் பிள்ளைகள். சில பிள்ளைகளுக்கு அப்பாவோ, அம்மாவோ இல்லை. நிறைய அப்பாக்கள் குடிக்கு அடிமையானவங்க. ஆனா, எல்லாக் குழந்தைகளுமே ரொம்ப நல்லாப் படிக்கக் கூடியவங்க. எந்த சிறப்பு வகுப்புக்கும் போகாம, ஒத்தை விளக்கு வெளிச்சத்துல, குடிகார அப்பாவோட வசையைச் சகிச்சுக்கிட்டுப் படிச்சு நிறைய மதிப்பெண் வாங்கின பிள்ளைங்க. 

ஒரு கட்டத்துக்கு மேல, அவங்களால கல்வியைத் தொடர முடியலே. அல்லது இந்தப் பிள்ளைகளோட உழைப்பு குடும்பத்துக்குத் தேவைப்படுது. திரும்பவும் அதே குடிசை, அதே வாழ்க்கையில இந்தக் குழந்தைகளைத் தள்ளாம அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்னா தரமான கல்வியைக் கொடுக்கணும். அதுக்காகத்தான் இந்தப் பிள்ளைகள் எல்லாம் ஏங்குறாங்க. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சௌகார்பேட்டையில... அக்கறையுள்ள அப்பா, அன்பை வாரிவாரிக் கொட்டி வளர்த்த அம்மான்னு ரொம்பவே நல்ல வாழ்க்கை. படிப்பை முடிச்சதும் நல்ல பள்ளியில நல்ல வேலை கிடைச்சுச்சு. நல்ல கணவர், நல்ல குழந்தைன்னு எல்லாமே எனக்கு நல்லா அமைஞ்சது. இப்படியொரு முரணான வாழ்க்கை இருக்குன்னே எனக்குத் தெரியாது. மத்தவங்களைப் பத்தி பெரிசா கவலைப்பட்டதில்லை. வகுப்பறை, வீடுன்னு சின்ன வட்டத்துக்குள்ளதான் நானும் வாழ்ந்தேன். 

விஸ்வசேவா எஜூகேஷனல் டிரஸ்ட்னு ஒரு தொண்டு நிறுவனம் இருக்கு. இந்த நிறுவனம் பள்ளிப்  பிள்ளை களுக்கு தன்முனைப்பையும், நம்பிக்கையும், உறவுகளோட மேன்மையையும் உணர்த்துற மாதிரி நிறைய பயிற்சிகள் கொடுப்பாங்க. எங்கள் பள்ளிக்கும் வந்து பயிற்சி கொடுத்தாங்க. அந்தப் பயிற்சிதான் என் அகக்கண்களை திறந்துச்சு. ‘இப்படியொரு சுயநல வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கோமே’ என்கிற குற்ற உணர்வை உருவாக்குச்சு. வாழ்க்கையில பல்வேறு படிநிலைகள் இருக்கிறதும், எந்த வாய்ப்பு களுமே கிடைக்காம அழுக்கு வெளியில ஒரு சமூகம் வாழ்ந்துக்கிட்டிருக்கிறதும் அந்த தொண்டு நிறுவனம் மூலமாத்தான் எனக்குத் தெரிஞ்சுது. ஏதாவது செய்யணும்கிற உந்துதல் உருவாச்சு. அந்த அமைப்போட ஒருங்கிணைப்பாளர் ரவிகிட்ட, ‘சார்... ரொம்பவே குற்ற உணர்வா இருக்கு. என்னளவுல ஏதாவது செய்யலாம்னு தோணுது. நான் என்ன செய்யணும்’னு கேட்டேன். 

‘மின்ட்ல ஒரு பள்ளி இருக்கு. ஒருமுறை அங்கே போய்ப் பாருங்க... என்ன செய்யணும்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க’ன்னு சொன்னார். ஒருநாள் அந்தப் பள்ளிக்குப் போனேன். உண்மையிலேயே ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. எல்லாமே தெருஓரத்தில வாழ்ந்த மக்களோட குழந்தைகள்... கிழிஞ்ச உடை... கலைஞ்ச தலை, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருவிதமான பிரச்னை... நான் கற்பனைகூட செஞ்சு பாக்க முடியாத வகுப்பறைச் சூழல்... அரை மணி நேரத்துக்கு மேல அங்கே என்னால இருக்க முடியலே... ஆனாலும், அந்தக் குழந்தைகளும் அவங்க எதிர்காலமும் மனசுக்குள்ள பெரிய அழுத்தத்தை உருவாக்குச்சு. ரவி சார்கிட்ட பேசினேன். ‘நீங்க ஏதாவது செய்யணும்னு நினைச்சா அந்த பள்ளியில இருந்து ஆரம்பிங்க’ன்னு சொன்னார். ஒருநாள் அந்தப் பள்ளியோட தலைமையாசிரியர் என்னைக் கூப்பிட்டார். ‘அன்னைக்கு நீங்க வந்துட்டுப் போனதே குழந்தைகள் மத்தியில சந்தோஷத்தை உருவாக்குச்சு. வாரம் ஒருமுறையாவது பள்ளிக்கு வந்து குழந்தைங்கக்கிட்ட பேசுங்க’ன்னு சொன்னார். 

அதுக்கப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பள்ளிக்குப் போக ஆரம்பிச்சேன். ‘ப்ரியாம்மா... ப்ரியாம்மா’ன்னு அந்தக் குழந்தைகள் என்கிட்ட முழுசா ஒட்டிக்குச்சுங்க... குடும்பத்தைப் பத்தி, அம்மா, அப்பா பத்தியெல்லாம் என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு குழந்தைக்கிட்டயும் ஒவ்வொரு கதை. சராசரி மனிதர்கள் எதிர்கொள்ள முடியாத கதைகள்... குடிகார தந்தையோட கொடுமைகள், அம்மா இல்லாத குழந்தைகள் படுற அவஸ்தை, உறவுக்காரங்களே தவறா பயன்படுத்துறதுன்னு அந்தக் குழந்தைகள் சொல்வதைக் கேட்க மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. என் அனுபவத்துல நான் கேள்விப்பட்டிராத கதைகள்...  நம்மோட தேடலுக்கு விடை கிடைச்சிடுச்சுன்னு தோணுச்சு. இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யணும்னு மனசு கிடந்து அடிச்சுக்கிது. அந்தப் பள்ளி தலைமையாசிரியர்கிட்டப் போய், ‘நான் என்ன சார் செய்யணும்’னு கேட்டேன். ‘இந்தப் பிள்ளைகளுக்கு அம்மாவா இருங்க... அது போதும்’னு சொன்னார். 

அதுக்குப் பிறகு அந்தப் பள்ளியோட ஐக்கியமாகிட்டேன். அந்தப் பள்ளியோட 10ம் வகுப்பு தேர்ச்சி 25 சதவிகிதம் இருந்துச்சு. மொத்தம் 69 பிள்ளைங்க அந்த வருஷம் +2 படிச்சாங்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பிள்ளைகளைத் திரட்டி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். நிறைய பிள்ளைகளுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கிறதே சிரமமான வேலையா இருந்துச்சு. ‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீ படிக்கச் சொல்றேங்கிறதுக்காக புத்தகத்தை எடுத்து வச்சு படிக்க முயற்சி செய்றேன்... ஆனா, படிக்கவே தெரியலையே... என்ன செய்யட்டும்’னு ஒரு பிள்ளை சொன்னா. அடிப்படையில இருந்து ஆரம்பிக்க வேண்டிய தேவையை புரிஞ்சுக்கிட்டேன். பாலாஜின்னு ஒரு தம்பி இருக்கான். ஒரு கிரிக்கெட் டீம் வச்சிருக்கான். எல்லாருமே இன்ஜினியரிங் ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸ். எம் மேல ரொம்பவே மரியாதை உள்ள தம்பி. அவனைக் கூப்பிட்டு, ‘இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யணும்பா’ன்னு சொன்னேன். 

“நாங்க பதினோரு பேர் இருக்கோம்மா... ஒரு வருஷம் முழுசா உங்க கூட இருப்போம். நீங்க என்ன சொன்னாலும் கேக்குறோம்’’னு சொன்னாங்க. 
69 பிள்ளைகளையும் ஆறு ஆறு பேர் கொண்ட குழுவா பிரிச்சோம். ஒரு குழுவுக்கு ஒரு தம்பி பொறுப்பேத்துக்கிட்டாங்க. தினமும் மாலை 5 மணியில இருந்து 8 மணி வரைக்கும் வகுப்பு எடுக்க ஆரம்பிச்சோம். வகுப்புங்கிற இருண்மை இல்லாம விளையாட்டுத்தனமா கத்துக் கொடுத்தோம். சனி, ஞாயிறுகள்ல முழு நேர வகுப்புகள் எடுத்தோம். பிள்ளைகள் ரொம்பவே ஆர்வமா வந்தாங்க. அந்த நாட்கள்ல பிள்ளைகளுக்கு மதிய உணவும் கொடுத்தோம். அன்னதான சமாஜம்கிற அமைப்பு பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுக்கிற பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. மற்ற நாட்கள்ல ஸ்நாக்ஸ் கொடுத்தோம். அந்தக் கல்வியாண்டுல பள்ளியோட தேர்ச்சி 69 சதவிகிதமா உயர்ந்துச்சு. அந்த ரிசல்ட் ரொம்பவே உற்சாகத்தைக் கொடுத்துச்சு.  

அதுக்குப் பிறகு நிறைய பள்ளிகள்ல இருந்து கூப்பிட்டாங்க. கல்லூரியில இருக்கிற என்.எஸ்.எஸ். மாணவர்களை ஒருங்கிணைச்சு, அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சிகள் கொடுத்தோம். கொருக்குப்பேட்டை, பென்சில் ஃபேக்டரி, ராயபுரம், யானைகவுனி, கொசப்பேட்டை பகுதிகள்ல நிரந்தர சிறப்பு பயிற்சி மையங்கள் அமைச்சோம். ராயபுரம் இளம்சிறார் அரசினர் காப்பகத்தில உள்ள 80 பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தோம். இந்தப் பணிகளுக்காக குடியிருப்பு களுக்குள்ள போகும்போது நிறைய பேர் +2க்கு மேல படிக்காம வீட்டுல இருக்கிறதைப் பார்க்க முடிஞ்சுச்சு. அவங்ககிட்ட பேசினேன். பெரும்பாலான பிள்ளைகளுக்கு பொருளாதாரம்தான் பிரச்னைன்னு தெரிஞ்சுச்சு. 

வாழ்க்கையை மாத்துற ஒரே சக்தி கல்விதான். ஆனா, அதுக்குப் பணம் தடையா இருக்கு. இந்தப் பிள்ளைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும். என் வருமானத்துல நாலைஞ்சு பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். மற்ற பிள்ளைகளுக்கு..? நம் சமூகத்தில எத்தனையோ பேர் மத்தவங்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணத்துல இருக்காங்க. ஆனா, யாருக்கு செய்றதுன்னு அவங்களுக்குத் தெரியலே. அவங்களை கண்டுபிடிச்சு ஏன் கையேந்தக்கூடாது? சிறப்பு வகுப்புகள்ல என் கூட ஒருங்கிணைஞ்சு செயல்பட்ட யுவராஜ், லஷ்மி நாராயணன், ஸ்ரீதர், பூபாலன், பத்மா, வைஷ்ணவி, இளையராஜா, கலைன்னு எல்லாரையும் அழைச்சுப் பேசி, கோல்டு ஹார்ட் ஃபவுண்டேஷன் அமைப்பை ஆரம்பிச்சேன். என் வட்டத்துல இருந்த நண்பர்கள், மாணவர்களை எல்லாம் தொடர்பு கொண்டேன். எல்லாரும் அவங்களுக்கு முடிஞ்ச தொகையைக் கொடுத்தாங்க. 

எந்தத் தேர்வு முறையும் இல்லை. பள்ளியோ, கல்லூரியோ எந்தப் பிள்ளை படிப்புன்னு வந்தாலும் ஃபீஸ் கொடுத்தோம். அரசுப்பள்ளி, தனியார் பள்ளின்னு எந்தப் பிரிவினையும் வச்சுக்கலே. தனியார் பள்ளிகள்ல படிச்சு பணம் கட்ட முடியாம டிஸ்கன்டினியூ ஆன பிள்ளைங்க, எம்பிபிஎஸ், இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், பாரா மெடிக்கல்னு எது படிக்க விரும்பினாலும் படிக்க வச்சோம். இதுவரை 250 பிள்ளைங்களுக்கு மேல தத்தெடுத்திருக்கோம். இந்த வருஷமும் ஏராளமான பிள்ளைங்க வந்திருக்காங்க.  இந்தப் பிள்ளைகளுக்கு வெறும் கல்வி மட்டும் போதாது. தாழ்வு மனப்பான்மையை போக்கணும். கம்யூனிகேஷன் வேணும். குறிப்பா மொழி வளம் வேணும். ஆளுமைத் தன்மையை வளர்க்கணும். அதுக்காக நிறைய பயிற்சிகள் கொடுக்கிறோம். முன்னோடிகளைக் கொண்டு வந்து இவங்க முன்னாடி நிறுத்தறோம். 

சூப்பர்100, சூப்பர் ஹீரோன்னு ரெண்டு வாட்ஸ் அப் குரூப் தொடங்கியிருக்கோம். சூப்பர்100 குரூப் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கிறது, கேரியர் கைடன்ஸ் தர்றது, தேவையான பயிற்சிகளை தேர்வு செய்து கொடுக்கிறது மாதிரி வேலைகளை செய்வாங்க. பிள்ளைகளோட ப்ரோஃபைலை அந்த குரூப்ல போடுவோம். யாராவது ஒருத்தர் அந்தப் பிள்ளையைத் தத்தெடுத்துக்கிட்டு வழிகாட்டுவாங்க. சூப்பர் ஹீரோ குரூப்ல இருக்கிறவங்க மாதம் 1000 ரூபாய் நன்கொடை கொடுப்பாங்க. இன்னும் நிறைய திட்டங்கள் வச்சிருக்கோம். எந்தப் பிள்ளையும் பணம் இல்லேன்னு படிப்பை கைவிடக்கூடாது. அடித்தட்டுப் பிள்ளைகள், அப்பாவோ, அம்மாவோ இல்லாத பிள்ளைங்க, குறிப்பா பெண்கள்... எப்போ வேணும்னாலும் இந்த அம்மாவைத் தேடி வரலாம்...’’ நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் ஸ்ரீப்ரியா (உதவிக்கு: 98846 29206)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.