News
Loading...

‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி!

‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி!

மருந்துத் தயாரிப்பு கம்பெனி ஒன்றிடம் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்ற விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்.

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட மருந்து தயாரிக்கும் ஷாசன் கம்பெனி, புதுச்சேரி காலாப்பட்டில் உள்ளது. ‘‘காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க மறைந்த தலைவர் ஒருவர் அமைச்சராக இருந்தபோது, இந்த கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால், அந்தத் தலைவரின் குடும்பத்துக்குப் பல வசதிவாய்ப்புகளை இந்த கம்பெனி செய்துகொடுத்து வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் பணத்தை வாரி இறைப்பதால், இந்தக் கம்பெனியால் ஏற்படும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் பற்றிய புகார்களை யாரும் கண்டுகொள்வது இல்லை” என்று கவலையோடு சொன்னார், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன், “காலாப்பட்டில் மருந்துகள் தயாரிக்கும் ஷாசன் தொழிற்சாலைக்கு திடீர் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ஒருவர், அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட உண்மை நிலையை அரசு தெரிவிக்க வேண்டும்” என பரபரப்பை ஏற்படுத்தினார்.

‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி!

இந்த விவகாரம் பற்றி விசாரித்தோம். நம்மிடம் பேசிய புதுச்சேரி அரசியல் புள்ளி ஒருவர், “அந்த மருந்து கம்பெனி ஆளும் கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் நன்கு கவனிக்கிறது. பல அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. ரூ.45 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனியை சமீபத்தில் வேறொரு நிறுவனத்துக்கு 1,365 கோடி ரூபாய்க்கு கைமாற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் கந்தசாமி, அந்த கம்பெனிக்கு திடீர் விசிட் சென்றுள்ளார். ‘உங்கள் இஷ்டத்துக்கு கம்பெனியை விற்றுவிட்டால், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் என்னாவது?’ என்று எகிறியுள்ளார். 

‘கம்பெனியை மட்டுமே கைமாற்றி உள்ளோம். தொழிலாளர்கள் அப்படியேதான் இருப்பார்கள்’ என்று கம்பெனி நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது. அதன் பிறகு, “எங்கள் ஊரில் சம்பாதித்துதான் இவ்வளவு தொகைக்கு விற்றுள்ளீர்கள். அதனால், 50 கோடியைக் கொடுத்துவிட்டுக் கிளம்புங்கள்’ என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால், 20 கோடிக்கு அமைச்சர் இறங்கி வந்துள்ளார். அதற்கும் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கடுப்பான அமைச்சர், ‘எங்கள் அனுமதி இல்லாமல் கம்பெனி எப்படி நடக்கும் என்பதைப் பார்க்கலாம்’ என்று சொல்லி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஃபைல்களை அள்ளிச்சென்றுள்ளார்” என்றார்.

“அமைச்சரின் நடவடிக்கையால் கோபமான ஷாசன் கம்பெனி நிர்வாகத்தினர், கம்பெனிக்கு அமைச்சர் வந்தது, ஃபைல்களை அள்ளிச்சென்றது உள்ளிட்ட சி.சி.டி.வி கேமரா பதிவுகளை எடுத்துக்கொண்டு டெல்லியில் காங்கிரஸ் தலைமையிடம் புகார் செய்துள்ளனர். அதை அறிந்த அமைச்சர், எடுத்து வந்த ஃபைல்களை திருப்பிக்கொடுத்து விட்டார்” என்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி!

இந்த விவகாரத்தை எழுப்பிய அன்பழகன், “விதிமுறைகளை மீறி அந்த கம்பெனி இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் காமதேனுவைப் போன்றது என்பதால், மக்களின் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினால், அதை வைத்து ஆளும் கட்சியினர், அந்த நிறுவனத்தை மிரட்டி பணமாக்கி விடுகின்றனர்” என்கிறார் வேதனையுடன்.

இது குறித்து அமைச்சர் கந்தசாமியிடம் கேட்டதற்கு, “அரசியல் காழ்ப்பு உணர்வுடன் என் மீது தவறாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். யாரிடமும் பணம் கேட்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. கழிவுநீரை அப்படியே வெளியேற்றுவதாக அந்த கம்பெனி மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனால் அங்கு சோதனையிடச் சென்றேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தவுடன், ஆவணங்களை கம்பெனி நிர்வாகத்திடம் கொடுத்தாகிவிட்டது” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.