News
Loading...

கட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்

கட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்

கச்சிதமான கான்கிரீட் கலவையும், வலுவான அஸ்திவாரமும் இல்லாமல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் அமைப்பது சாத்தியமில்லை. அதுவும் கட்டுமானங்களுக்கான கான்கிரீட் கலவை கலக்க முன்பெல்லாம் அதிகப்படியான மனித ஆற்றல் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக ஆர்.எம்.சி போன்ற தயார் நிலை கான்கிரீட் வகைகள் இப்போது கிடைப்பதால் பெரிய கட்டுமானங்கள் சுலபமாக இப்போது அமைக்கப்படுகின்றன. மேலும் ஆர்.எம்.சி போன்ற தொழில்நுட்பங்கள் கான்கிரீட் பயன்பாட்டினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன. அவ்வகையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ என்பதை சொல்லலாம்.

தொடக்கம்

கட்டுமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் விரைவாக வேலையை முடிப்பது என்ற காரணங்களை முன்னிறுத்தி ஜப்பானியர்களால் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தொழில்நுட்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுமான பணிகளில் ‘சென்டரிங்’ அமைப்புகளுக்குள் கான்கிரீட் ஒரே சீராக பரவுவதற்காக கம்பிகளால் குத்துவது, அல்லது ‘வைப்ரேட்டர்கள்’ கொண்டு இறுகச்செய்வது போன்ற வேலைகள் இதில் இல்லை. 

‘கெமிக்கல் அட்மிக்ஸர்கள்’

கான்கிரீட்டை கச்சிதமாக பரவச்செய்வதற்கு ஆட்களை பயன்படுத்தாமல் தானாக பரவுவதுபோல இருக்கவேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்கள் உள்ளிட்ட மற்ற சேர்மானங்களை கான்கிரீட்டில் கலந்து பயன்படுத்தப்பட்டது. கலவையில் பிசுபிசுப்பு தன்மையை போதுமான அளவில் நிறுத்திக் கொள்ள ‘பாலி கார்பாக்சிலேட் பாலிமர்’ உள்ளிட்ட ‘அட்மிக்ஸர்கள்’ கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதே எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ ஆகும். 

பயன்பாடுகள் 

தண்ணீர் கசிவு உண்டாவது, கலவை காய்ந்து உதிர்வது, காற்றுகுமிழ்கள் ஏற்படுவது போன்ற வழக்கமான பிரச்சினைகள் இதில் வருவதில்லை. அதன் காரணமாக வேலைகள் எளிதாக முடிந்து விடுவதோடு. குறைவான வேலையாட்களே தேவைப்படுவதால் செலவுகளும் கட்டுக்குள் வருகிறது. 

எஸ்.சி.சி–யை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் ‘பம்ப்’ செய்ய இயலும். மேலும் கான்கிரீட் ‘வைப்ரேட்டர்கள்’ பயன்பாடும் இதில் தேவைப்படுவதில்லை. 

நமது ஊரில் எஸ்.சி.சி

நமது நாட்டில் பெரிய கட்டுமான நிறுவனங்கள் இவ்வகை கான்கிரீட்டை பயன்படுத்துகிறார்கள். இந்த கான்கிரீட்டானது அதன் பயன்பாட்டை பொறுத்து வழக்கத்தைவிட இதில் செலவு அதிகமாகலாம். அதன் தயாரிப்பு பரவலாக இருக்கும்போது இன்னும் பயன்பாடு அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போதைய கட்டுமான நுட்பத்தின் சிறந்த புது வரவாக இதைச்சொல்லலாம்.

அடுக்கு மாடிகளுக்கு வரம் 

பல மாடிகள் கொண்ட குடியிருப்புகள் அமைக்கும்போது கான்கிரீட்டின் இறுக்கம் ஒரு சதுர அங்குலத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்த கட்டிடங்கள் பாதிப்புகளுக்கு உட்படாமல் தாங்கி நிற்கும். கட்டிடங்களின் உயரம் அதிகமாகும்போது கான்கிரீட்டை அந்த உயரத்திற்கு ‘பம்ப்’ செய்வது கடினமாக இருக்கும். ‘எஸ்.சி.சி’–ல் ‘பம்ப்’ செய்யும் வேலையை எளிதாக செய்ய முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.