News
Loading...

இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்!

இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்!

பண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.

இலங்கையிலும், வடக்கு மாகாணத்திலும் சரி, தற்போது மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில், தமிழ் நாட்டிலிருந்து நிறைய அகதிகள் தங்கள் தாய்பூமிக்கு செல்லவிரும்புகிறார்கள். 1983–ம் ஆண்டு இனக்கல வரத்துக்கு பிறகு உள்ள நிலைமாறி, தற்போது 19 ஆயிரத்து 388 குடும்பங்களைச்சேர்ந்த 68 ஆயிரத்து 649 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டிலுள்ள 28 மாவட்டங்களில் இருக்கும் 108 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 14 ஆயிரத்து 542 குடும்பங்களைச்சேர்ந்த 36 ஆயிரத்து  651 இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கு வெளியே உள்ளூர் காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வசித்துவருகிறார்கள். இவர்களுக்கான விசாகட்டணம் மற்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் கூடுதலாக தங்கிய காலத்துக்கு அபராதத்தொகை மத்திய அரசாங்கத்தால் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணத்தை பரிசீலித்து, யார்–யார்? இலங்கைக்கு திரும்ப நினைக்கிறார்களோ?, அவர்களுக்கு இவ்வளவு அதிககாலத்துக்கு தங்கியதற்கான அபராதத்தொகை மற்றும் விசாகட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க பரிசீலிப்பதற்காக மத்திய அரசாங்கம் உயர்மட்டக்குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு விரைவில் தனது முடிவை அறிவித்தால், இலங்கை தமிழர்கள் நிறையபேர் தங்கள் சொந்தபூமிக்கு திரும்பவசதியாக இருக்கும். அகதிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்வதற்காக ஐக்கிய நாட்டுசபை அகதிகள் தூதரகம் இலவச விமான டிக்கெட், ஒவ்வொரு நபருக்கும் மீள் குடியேற்றத்துக்காக 75 அமெரிக்க டாலர்கள், போக்குவரத்து அலவன்சாக 
19 டாலர்கள் வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு குடும் பத்துக்கு 75 அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது.

மேலும், இப்போது ஒவ்வொரு நபரும் தமிழ்நாட்டிலிருந்து 40 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதி, 60 கிலோவாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த சலுகைகளையெல்லாம் பயன்படுத்தி, இலங்கை திரும்பவேண்டும் என்று அகதிகள் விரும்பி னாலும், அவர்கள் அதற்கான அனுமதியைப்பெற பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது. முதலில் போலீஸ் அனுமதியை பெறவேண்டும். அதற்கு போலீசார் அடையாள அட்டை, முகவரி அத்தாட்சி, அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அவருடைய வீட்டு உரிமையாளர் அத்தாட்சி மற்றும் அருகில் குடியிருக்கும் 2 பேரின் சான்றிதழ் கடிதம் ஆகியவற்றை கேட்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், குடியேற்ற அதிகாரி யிடம் தாக்கல் செய்யப்படும் விசாவுக்கான விண்ணப்பம் ஆன்–லைன் மூலம் அனுப்ப வேண்டியதுள்ளது. அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செய்யப்படும் விண்ணப்பம் கியூபிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் ஆகியோரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.  இவ்வாறு பல தடைகளைத் தாண்டி நாங்கள் செல்லவேண்டிய நிலையில், எங்களை மகிழ்வோடு வரவேற்று உபசரித்த தமிழ்நாடு, ‘நாங்கள் எங்கள் நாட்டுக்கு போய் வருகிறோம்’ என்று சொல்லும் போது, ‘போய்வாருங்கள் சொந்தங்களே!’ என்று அன்போடு வழியனுப்பும் வகையில், இந்த நடைமுறை சிக்கல்கள் இல்லாமல், எங்களுக்கு அனுமதி வழங்கினால் மிகவும் நன்றாக இருக்குமே? என்பது இலங்கை அகதிகளின் விருப்பமாகும். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான அலுவல் முறைகளை எளிதாக்க வேண்டும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.