News
Loading...

ஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்!

ஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்!

புத்தகத்தின் பெயர்: த அப் சைட் ஆப் ஸ்ட்ரெஸ் (The Upside of Stress)

ஆசிரியர்: கெல்லி மெக்கோனிகல் (Kelly McGonigal)

பதிப்பாளர்: அவெரி (Avery)

ஸ்ட்ரெஸ் (Stress) - இன்றைக்கு நகர்ப்புறத்து மனிதர்கள் பலரும் கண்டு நடுங்கும் வார்த்தையாக இருக்கிறது. ஆனால், இந்த ஸ்ட்ரெஸ்ஸை நாம் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ‘த அப் சைட் ஆப் ஸ்ட்ரெஸ்’ என்கிற புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியை கெல்லி மெக்கோனிகல்.

புத்தகத்தைத் திறந்து படிக்கத் தொடங்கிய உடனே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார் ஆசிரியை. அந்தக் கேள்வி, பின்வரும் வாசகங்களில் எது சரி என்பதுதான். 

* ஸ்ட்ரெஸ் மிக மிக மோசமானது. அதை தவிர்க்கவேண்டும். குறைக்கவேண்டும். அது நமக்கு வந்துவிட்டால் அதை மேனேஜ் (நிர்வாகம்) செய்யப் பழகவேண்டும்.

* ஸ்ட்ரெஸ் என்பது நமக்கு உதவக்கூடியது. அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அதை உபயோகரமாக மாற்றிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் நாம் பழகிக்கொள்ளவேண்டும்.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லி விட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானவர்களின் பதில் இப்படித்தான் இருக்கும். ‘‘ஸ்ட்ரெஸ்ஸா... அய்யோ, அது விஷமாச்சே. ஆகவே ஆகாது சாமி’’ என்பதாகத்தான் இருக்கும். 

ஹெல்த் சைக்காலஜிஸ்ட்டான புத்தகத்தின் ஆசிரியரும் அதே கருத்துடனேயே இருந்து வந்துள்ளார். ஸ்ட்ரெஸ்ஸை எப்படித் தவிர்ப்பது, எப்படிக் கட்டுப்படுத்துவது என வகுப்புகள், ஆய்வுகள், புத்தகங்கள் என பல வேலைகளைச் செய்துவந்துள்ளார். அதாவது, ஸ்ட்ரெஸ் கெட்டது என்ற நம்பிக்கையுடனேயே ஓடித் திரிந்து அதைத் தவிர்ப்பது மற்றும் நிர்வகிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கண்டறிய பல காலம் செலவு செய்துள்ளார். 

‘‘ஆழ்ந்து மூச்சுவிடுங்கள்; நீண்ட நேரம் தூங்குங்கள்; பரபரப்படையாதீர்கள் என்று ஒரே அட்வைஸ் மழைதான் கிடைத்தது. ஸ்ட்ரெஸ் நமக்கு எதிரி என்கிற அடிப்படை எண்ணத்தை மனதில் அழிக்க  முடியாமல்  உருவானதினால் தானே! அதன் பாதிப்புகளிலிருந்து நாம் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தானே! 

இதன்பின்பு, ஸ்ட்ரெஸ் குறித்த எனது எண்ணத்தை நான் திடீரென்று மாற்றிக் கொண்டேன். இந்தப் புத்தகத்தின் மூலம் உங்களின் எண்ணத்தையும் மாற்ற முயற்சிக்கிறேன்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஆசிரியையிடம் ஏற்பட்டது? 1998-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 30,000 பேரிடம், ‘உங்களுக்கு எந்த அளவு ஸ்ட்ரெஸ் இருக்கிறது’ என்கிற கேள்வி  கேட்கப்பட்டது. கூடவே, ‘ஸ்ட்ரெஸ் உங்கள் உடல்நிலையை பாதிக்கிறது என்று நம்புகிறீர்களா?’ என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது. 

எட்டு வருடத்துக்குப் பின் அந்த 30,000 பேரையும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆய்வு செய்ததில் தெரியவந்த விஷயத்தில்தான் ஆசிரியரின் மனமாற்றத்துக்கான காரணியே இருக்கிறது. அந்த 30,000 பேரில் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கிறது என்றவர்களில் பலரும் இறந்துபோயிருந்தனர். அதாவது, அதிக ஸ்ட்ரெஸ் என்பது இறந்து போவதற்கான வாய்ப்பை 43%  அதிகரித்து இருந்தது. இறந்து போனவர்கள் அனைவருமே ஸ்ட்ரெஸ் தன் ஹெல்த்தை பாதிக்கிறது என்பதை நம்பியவர்களாகவே இருந்தனர். 

குறைந்த அளவு ஸ்ட்ரெஸ்ஸே இருக்கிறது என்று சொல்லி, அதுவும் தனது உடல்நிலையை பாதிக்கும் என்று நம்பியவர்கள்கூட இறப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், ஸ்ட்ரெஸ் நமது உடல்நலத்தை பாதிப்பது இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நன்றாகவே இருந்தனர். அதிலும் குறைவான ஸ்ட்ரெஸ் உடல்நிலையை பாதிக்காது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நன்றாகவே இருந்தனர் என்று கண்டறியப்பட்டது. 

அதனால்தான் ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்ட்ரெஸ் என்பதே ஆளைக் கொல்லும் நோயாக மாறுவதில்லை. ஸ்ட்ரெஸ் நமது உடல்நலத்தைப் பாதிக்கும் என்கிற  எண்ணம் நமக்கு ஆழமாக வேறுரூன்றும்போதுதான் ஆளைக் கொல்கிறது’ என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சர்வேயில் தெரியவந்த முடிவுகளே தனது சிந்தனையை மாற்றியது என்கிறார் ஆசிரியை.

இதே போன்ற பல ஆராய்ச்சிகளும் இதே மாதிரியான கருத்துக்களையே வெளிக்கொண்டு வந்துள்ளன. இளவயதில் வயதான காலம் குறித்த எண்ணம் என்ன என்று கேட்டால், ‘‘ஜாலியா இருக்கும் பாஸ். வயதாவது நல்லதுதானே! அனுபவம் பெரிய ஆசான் இல்லையா?’’ என்று சொல்பவர்கள் ஒருபக்கம்;  ‘‘அய்யோ, கிழவனாகிடுவோம் பாஸ், பிறகு கஷ்டம்தான்’’ என்று சொன்னவர்களுக்கும் இடையே சுமார் ஏழு வருடம் வித்தியாசம் இருந்ததாம்.  அதாவது, கிழவனாகிவிடுவோம் என்று இளமையிலேயே கவலைப்படுபவர்களுக்கு எமன் சீக்கிரம் அழைப்பு விடுத்துவிடு கிறான் என்கிறது ஆய்வுகள்.

ஸ்ட்ரெஸ் நம்மைக் கொன்றுவிடும் என்று எல்லோரும் நம்மை பயமுறுத்துவதினாலேயே ஸ்ட்ரெஸ் மனிதர்களைக் கொல்கிறது. ஏன் பயமுறுத்து கிறோம்? ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக. ஆனால், அந்த பயம் ஆளைக் கொல்ல காரணமாகி விடுகிறது. பயம், கெட்ட பெயர், சுய விமர்சனம், மானக்கேடு என்பவை எல்லாம் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவருகிறதே தவிர, பாசிட்டிவ் விளைவுகளைக் கொண்டுவருவதில்லை என்கின்றன பல ஆய்வுகள். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் குறித்து சொல்லப்படும்போது எல்லாம் ஸ்ட்ரெஸ்ஸின் நெகட்டிவ் விஷயங்கள் அனைத்தும் பூதாகரமாகக் காட்டப்படுகின்றன. அதனாலேயே ஸ்ட்ரெஸ் ஆட்கொல்லியாகி விடுகிறதே தவிர, ஸ்ட்ரெஸ் நிச்சயம் ஒரு ஆட்கொல்லி நோயில்லை. 

ஸ்ட்ரெஸ் குறித்த எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்வது எப்படி? ஸ்ட்ரெஸ் கெட்டது என்பதும் ஸ்ட்ரெஸ் நல்லது என்பதும் இரண்டு விதமான மனநிலை. இந்த இரண்டும் எப்படி மாறுபடுகிறது தெரியுமா? 

ஸ்ட்ரெஸ் கெட்டது எனும் மனப்போக்கு: 

*     ஸ்ட்ரெஸ் என்னுடைய உடலை வருத்தி எடுத்து உயிரைக் குடிக்கிறது.

*     ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பதால், என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் மற்றும் உற்பத்தித்திறன் குறைகிறது.

*     ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பதால், என்னால் எதிலும் கவனம் செலுத்தவோ, கற்றுக்கொள்ளவோ முடிவதில்லை.

*     ஸ்ட்ரெஸ் என்பதே கேடு. அதனால் அதைத்  தவிர்க்கவேண்டும். 

ஸ்ட்ரெஸ் நல்லது எனும் மனப்போக்கு:

*     ஸ்ட்ரெஸ் என்னுடைய பெர்ஃபார்மென்ஸை யும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.

*     ஸ்ட்ரெஸ்ஸே என் உடலை உறுதியாக்குகிறது.

*     ஸ்ட்ரெஸ்ஸே என்னை அதிகமாக கற்றுக் கொள்ளவும் வளரவும் செய்கிறது.

*     ஸ்ட்ரெஸ் எனக்கு உதவுவதாகவும் பாசிட்டிவ் ஆனதாகவும் இருக்கிறது.

ஒரு வேலையை செய்ய நினைக்கும்போது டென்ஷன் வருகிறது. ‘கூலாக இரு. கூலாக இரு’ என நாம் நமக்குள்ளே சொல்லும் வேளையில், நம்முடைய மனது கூலாக மறுக்கிறது. அந்த நேரத்தில் வேறு யாராவது வந்து, ‘என்ன இன்னும் முடியலையா’ என்று கேட்டால் கொட்டித் தீர்த்துவிடுகிறோம். அதே சமயம், கூலாக இரு என்று சொல்வதற்கு பதிலாக, ‘அடேய்... எவ்வளவு பெரிய வேலையை நாம் செய்யப் போகிறோம்’ என்று உற்சாகமாக நினைத்தால், அந்த உற்சாகமே ஸ்ட்ரெஸ்ஸை நமக்கு உகந்ததாக மாற்றி, வேலையை எத்தனை இடையூறுகள் வந்தாலும் சுலபத்தில் முடிக்க உதவும்.

அதெப்படி சாத்தியம்? ஒரு வேலையை முடிக்கத் தேவையான பணம், நேரம், ஆள் படை எல்லாம் குறைவாக இருக்கும்போது, அந்த வேலையை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாது. ஆனாலும், அந்த வேலையை குறித்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும் எனில்  ஸ்ட்ரெஸ் வரத்தானே செய்யும் என்பீர்கள். அப்படி வரக்கூடிய ஸ்ட்ரெஸ், கையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் விஷயங்களை  பலமிழக்கச் செய்துவிடும். எனவே, ‘இருக்கிற  விஷயங்களை வைத்துக்கொண்டே அந்த செயலை முடிக்கிறேன் பார்’ என்ற உற்சாகத்துடன் செயல்படுவதே ஸ்ட்ரெஸ்ஸை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முறையாகும் என்கிறார் ஆசிரியை.

இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்தால் ஸ்ட்ரெஸ்ஸை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு காரியங்களை வெற்றிகரமாக முடித்து சாதனை படைக்கலாம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.