News
Loading...

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சேலம் நகராட்சிக்கு ராஜாஜி தலைவராகவும் விஜயராகவாச் சாரியார், நடேச பண்டாரம் போன்ற தேசிய தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்களாகவும் இருந்த பெருமை உண்டு. 1994-ல் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த மாநகராட்சியின் மேயராக அ.தி.மு.க-வின் சவுண்டப்பன் இருந்து வருகிறார்.

சவுண்டப்பன் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். நாடக நடிகர். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அ.தி.மு.க பிளவு பட்டபோது ஜெ., அணியில் இருந்தவர். இரண்டு முறை கவுன்சிலர் ஆக இருந்திருக்கிறார். 2001 - 2006 வரை துணைமேயராக இருந்தார். அப்போது மேயராக இருந்த சுரேஷ்குமார் எம்.பி ஆனதால், இவர் பொறுப்பு மேயராக இருந்தார். பொறுப்பு மேயராக ஆட்சிக்கு விசுவாசமாக நடந்துகொண்ட தால், கடந்த முறை மேயர் பதவி இவரைத் தேடி வந்தது. ஆனால், இவர் சேலம் மக்களின் நலன் காக்கும் மாநகர தந்தையாக இல்லை என்கிறார்கள். நாடக நடிகரான இவர் சேலம் மாநகராட்சி மக்களின் நலனுக்கு எதிரான வில்லன் என்கிறார்கள்.

“தி.மு.க சேலத்தை அலங்கோலம் ஆக்கி விட்டது. எனக்கு வாக்களித்தால் இங்கு பாலாறும், தேனாறும் ஓடும்” என வசனம் பேசியே வாக்குகள் பெற்று மேயரான சவுண்டப்பன் கடந்த 5 ஆண்டில் சம்பாதித்ததைத் தவிர சாதித்தது ஒன்றும் இல்லை. 

நாடக மன்றம் ஆன மாமன்றம்

கடந்த 5 வருடங்களில் ஒரு நாளாவது 2 மணி நேரத்துக்கு மேல் மாமன்றம் கூடியதாக வரலாறு இல்லை. கூட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் கோபம்படும்படி ஆளும் கட்சி கவுன்சிலர்கள் பேசுவார்கள். மோதல் வெடிக்கும். உடனே தி.மு.க கவுன்சிலர்கள் வெளியேற்றப்படுவார்கள். அடுத்த நிமிடம் ‘‘அம்மாவின் ஆணைக்கிணங்க...” என்று சொல்லி தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். இதுதான் மாமன்றம் நடந்த லட்சணம். 

பாலம் கட்டியதில் முறைகேடு

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

சேலம் மாநகராட்சியின் இதயப் பகுதியாக இருக்கும் பேருந்து நிலையப்பகுதி இட நெருக்கடி யுடன், சுகாதார கேட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பகுதியில் 320 கோடியில் பறக்கும் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டினார்கள். மேம்பாலத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்போது மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதம் நடக்கவில்லை. மேம்பாலம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சொல்லு கிறார்கள். மேம்பாலத்தால் சேலத்தின் அடையாளமான 5 ரோடு, புதிய பேருந்து நிலையம் என அனைத்தையும் சிதைத்து விட்டார்கள். இந்தத் திட்டத்துக்கு ஆன செலவை புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டி இருக்கலாம்.   

பலிகடா ஆன பள்ளிக்கூடங்கள்

சேலம் நகராட்சியாக இருக்கும் போது பிற நகராட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக நகராட்சி சார்பில் கல்லூரி அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது மாநகராட்சி நிர்வாகம், பள்ளிக்கூடக் கட்டடங்களை இடித்துத்தான் அம்மா உணவகங்களைக் கட்டி இருக்கிறது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆற்றோர மாநகராட்சி துவக்கப்பள்ளி, பால்மார்கெட் சாலையில் இருந்த மாநகராட்சி துவக்கப்பள்ளி, சத்திரத்தில் இருந்த குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளி ஆகிய வற்றின் கட்டடங்களைத் தரைமட்டம் ஆக்கி அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுள்ளது. 

முடக்கப்பட்ட நான்கு திட்டங்கள்...

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக 2008-ல் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைமேடு, வெள்ளைகுட்டை, வண்டிப்பேட்டை பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் பணி தொடங்கியது. இந்த 5 வருடத்தில் பாதாள சாக்கடைப் பணிகள் முழுமையடையாமல், சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றிய பிறகு கழிவு நீர் இணைப்புத் தருவதாகக் கூறி ஒவ்வொரு வீட்டுக்கும் டெபாசிட் தொகையாக 5,000, குடியிருப்புகள், லாட்ஜ்-களுக்கு 3 முதல் 5 லட்சமும் வசூலித்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருக் கிறார்கள்” என குற்றச்சாட்டு படிக்கிறார்கள் மக்கள். 

குப்பைகள் அள்ளுவதில் முறைகேடு

“சேலம் மாநகராட்சி முழுவதும் ஒரு நாளைக்கு 450 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. இந்தக் குப்பைகளைக் கொட்ட செட்டிசாவடியில் 100 ஏக்கரில் குப்பை கொட்டும் இடம் அமைக்கப் பட்டது. குப்பைகளைக் கொண்டு செல்ல சீனிவாசா வேஸ்டேஜ் பிரைவேட் லிட்., நிறுவனத்துக்கு 1 டன்னுக்கு ரூ.1,440 வீதம் டெண்டர் விடப்பட்டது. குப்பைகளைப் பிரித்து அரைப்பதற்கு ஏஞ்சியோ பயோடெக் நிறுவனத்துக்கு 1 டன்னுக்கு 1000 வீதமும் டெண்டர் விடப்பட்டது. மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் எல்லோரும் வகைதொகை இல்லாமல் கமிஷன் பெற்றதால், டெண்டர் எடுத்தவர்கள் 70 டன் குப்பைகளை அள்ளிவிட்டு 150 டன் அள்ளியதாகவும், 50 டன் அரைத்துவிட்டு 150 டன் அரைத்ததாகவும் கணக்குச் சொல்கிறார்கள்” என்கிறார் ஒரு மாநகராட்சி அதிகாரி. 

குடிநீர் இணைப்புகளுக்கு லஞ்சம் 

“சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் முறைகேடாகக் கொடுக்கப் பட்டுள்ளன. லோக்கல் கவுன்சிலர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் 20,000-ம் பெற்றுக்கொண்டு இணைப்புக் கொடுக்கிறார்கள். ஒரு வார்டு கவுன்சிலருக்கு 100 இணைப்புகளுக்கு 20 லட்சம் வீதம் 60 வார்டு கவுன்சிலர்களுக்கு 12 கோடி செல்கிறது” என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர்.

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

மாநகராட்சிக்குச் சொந்தமாக 3,800 கடைகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்கள் வரையிலும் ஒரு கடைக்கு மாதம் 3,500 வாடகை வசூலிக்கப்பட்டது. திடீரென 1 கடைக்கு மாதம் 22,000 ரூபாய் என வாடகை உயர்த்தப்பட்டது. கடைக்காரர்கள் உயர் நீதிமன்றம் சென்றார்கள். மாநகராட்சி கமிஷனர்  செல்வராஜ் கடைக்காரர்களைக் கூப்பிட்டுப் பேசினார். கடைக்காரர்கள் கமிஷனரை பார்த்த பிறகு இப்போது வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். 

நஷ்டத்தில் இயங்கும் மாநகராட்சி 

இப்படி பல வழிகளும் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் 300 கோடிக்கு மேல் மாநகராட்சி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் கொடுப்பதில்லை. சட்டப்படி 3,200 துப்புரவு தொழிலாளர்கள் இருக்க வேண்டிய மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர் 750 பேரும், தினக்கூலிகளாக 550 பேரும் என அரைகுறையாக மாநகராட்சி தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

கமிஷன் பிரச்னையில் மோதல் 

‘‘மாநகராட்சியும், மக்களும் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற சுயநலத் தாலும், உள்ளூர் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலையீட் டாலும் சேலம் மாநகராட்சி நரக ஆட்சியாக மாறி இருக்கிறது. கமிஷனர் செல்வராஜுக்கும், மேயர் சவுண்டப்பனுக்கும் கமிஷன் பெறுவதில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

கமிஷனர் செல்வராஜ், தனக்கு ‘வசூல்’ செய்து கொடுக்க கிளர்க் ஒருவரை தனிச் சம்பளம் கொடுத்து நியமித்திருக்கிறார். இவர் சொல்லும் தொகைதான் வரியாக வசூலிக்கப்படுகிறது. குறைவாக வரி விதித்து 6 மாதத்துக்கு 15 கோடி ரூபாய்தான் வரி வசூல் என்று காட்டுகிறார்கள். கமிஷனருக்குத்தான் வசூல் அதிகமாகச் செல்கிறது. மாநகராட்சியைவிட கமிஷனருக்குத்தான் வசூல் அதிகம்”என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். மாநகராட்சி உதவி கமிஷனர்கள், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போன்ற அதிகார மட்டத்தில் இருக்கும் பெரும் பானோர் அரசியல் பின்புலம் உடையவர்களாக இருக்கிறார்கள். இப்படி அதிகாரிகள் ஒருபுறம்... மேயர், கவுன்சிலர்கள் இன்னொரு புறம் என்று சேலம் மாநகராட்சியை கூறுபோட்டு கொள்ளை அடிக்கிறார்கள். 

மேயரின் 2 மனைவிகளும் இறந்து விட்டார்கள். மேயர் 60 வயதைக் கடந்துவிட்டார். இப்போது ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தாகவும் மகள் வழி பேரன் சங்கருக்கும், மேயருக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறந்ததாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.