News
Loading...

ஆண் குடி... பெண் குடி... குழந்தைகள் குடி...

ஆண் குடி... பெண் குடி... குழந்தைகள் குடி...

உலகின் பல்வேறு பகுதி களில் வெவ்வேறு பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மதுபானங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிரச்னையாக உருவாகாத அளவு மதுப்பழக்கம் உள்ள நாடுகளை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கும். வணிகமயமாக்கப்பட்ட, முழுக்க முழுக்க வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற மதுபானங்களுக்கு அந்நாடுகளில் பெரிய மவுசு இல்லை. 

உள்ளூர் கலாசாரத்துக்கு ஏற்ப, உள்ளூரிலேயே கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மதுபானங்களையே அவர்கள் விரும்பிப் பருகுகின்றனர். உதாரணமாக ஜிம்பாப்வே நாட்டில் சிபுக்கு, நம் கோவாவில் ஃபெனி.

போதை போதை என மிதமிஞ்சிக் குடித்தலுக்குச் செல்லாமல், மகிழ் தருணத்துக்காக மட்டுமே மதுவைப் பயன்படுத்தும் நாடுகள் ஒருபோதும் மூழ்குவதில்லை. அங்கெல்லாம் மது என்பது ஒரு கொண்டாட்டத்தின் ஒரு துளி. அதுவே குதூகலம் அல்ல. ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒயின் தயாரிப்பு ஒரு வைபவமாகவே நடைபெறும். நண்பர்கள், உறவினர்களோடு நேரம் செலவிட்டு மகிழ்ந்திருக்க ஒரு வாய்ப்பாக அமையும். இசையும் நடனமும் கொஞ்சம் மதுவும் நல்ல உணவுமாக அந்தத் திருவிழா களை கட்டும். மொடாக் குடியர்களுக்கு அங்கு வேலையில்லை ! 

அதுபோலவே ஒயின் கிளப்கள் மற்றும் ஒயின் டேஸ்ட்டிங் செஷன்ஸ். இங்கு உறுப்பினராக உள்ளவர்கள் பொதுவாக ஒயின் தவிர வேறு எந்த மதுபானத்தையும் கண் கொண்டு பார்ப்பதில்லை. ஒயின் பருகுவதை ரசனை சார்ந்த ஒரு கலையாகவே பயின்று பின்பற்றுவார்கள். குறிப்பிட்ட உணவுடன் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்பதற்குக்கூட, வரையறுக்கப்பட்ட பட்டியல் உண்டு. 

அதையும் மீற மாட்டார்கள்! இப்படி கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்து மதுவும் நம் வாழ்வில் இடம் பெற்றிருக்குமானால், போதையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பீதியையும் பற்றிப் பேச வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. 

நமக்கு வாய்த்ததோ சாக்கடைக்கும் குப்பைத்தொட்டிக்கும் சற்றும் குறைவில்லாத டாஸ்மாக் பார்தானே? அங்கு விற்கப்படும் மதுபானங்களை (மன்னிக்கவும்... சரக்கு என்றே சொல்ல வேண்டும். அந்த பாட்டிலில் பிடிக்கப்பட்டுள்ள திரவ உட்பொருளை) குடிப்பது என்பது ஒரு சுகானுபவம் என்று யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது அங்கு சென்று குடிப்பதுதான் வாழ்வின் அற்புத தருணமா?

இப்படியான கேடுகெட்ட சூழலுக்கு - மதுவுக்கு மட்டுமல்ல - அடிமையாகி ஏராளமானோர் பணத்தையும் குணத்தையும் நலத்தையும் இழக்கின்றனர். இவர்களில் குழந்தைகளும் பெண்களும் உண்டு என்பதே அதீத வேதனை தரும் உண்மை. தனக்கும் குடும்பத்துக்கும் பணிக்கும் சமூகத்துக்கும் பிரச்னை ஏற்படுத்தும் அளவுக்குக் குடிப்பது ஆண்கள்தான் என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும், குழந்தைகளும் பெண்களும் குடிப்பதை (கலாசாரக் காவலர் போன்ற போர்வைகளை எல்லாம் தாண்டி) மருத்துவ அறிவியல் ரீதியாகவே சகிப்பது கடினம்.

குழந்தைகள் குடிக்கத் தொடங்கினால்..?

*குழந்தைகள் குடிக்கத் தொடங்கினால், மதுவுக்கு அடிமையாகும் தன்மையானது, வயது வந்தவர்களை விடவும்  அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

*மூளையின் அமைப்பு சிதைவதோடு, அதன் செயல்பாடுகளும் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகின்றன.

*குடி காரணமாக, சமூகத்துக்கு ஏற்ப இயைந்து வாழக் கற்றுக்கொள்ளும் தன்மை நீங்கி, ஒருவித வெறி அவர்களுக்குள் உருவாகிறது. காலப்போக்கில், தான் செய்வது அத்தனையும் சரி என்ற எண்ணம் பதிந்து விடுகிறது. குடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையும் உருவாகிவிடுகிறது. வீட்டிலும் வெளியிலும் பணம் திருடும் சூழலும் ஏற்படுகிறது. 

*பள்ளி செல்வது குறையும். பொய் சொல்வது அதிகமாகும்.

*அற்ப காரணங்களுக்குக்கூட அதிகமாகக் கோபம் கொள்வார்கள்.

*எப்போதும் ஒருவித அசட்டுத் தைரியத் துடனே இவர்கள் காணப்படுவார்கள். சிலர் பதற்றமாகவே இருப்பார்கள்.

*குடும்பம், உறவுகளுடானான பற்று குடிக்கும் குழந்தைகளிடம் குறையும். 

*குடியை குடி கெடுக்கும் பழக்கங்கள் அத்தனையும் தொடரும். கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கும் எளிதில் அடிமையாவார்கள். 

*போதை ஊசிக்குள் சென்றுவிட்டாலோ, அறியாமலே அபாயமான தொற்றுநோய்களுக்கும் பலியாகிவிடுவார்கள்.

*சில மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும், வகுப்பில் வைத்தே குடிப்பதும் இதன் நீட்சிதான்.

பெண்கள் குடிக்கத் தொடங்கினால்..?

*பெண்களிடம் மதுப்பழக்கம் ஏற்பட்டால், அது கூடுதலான வழிகளில் அவர்களையும் மற்றவர்களையும் - குறிப்பாக குழந்தைகளையும் பாதிக்கிறது.

*மதுவின் நச்சுத்தன்மைக்கு பெண்கள் எளிதில் ஆட்படுவார்கள். 

*அளவாக மது அருந்துதல் என்பது கூட பெண்களுக்கு மிகக்குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 60 மி.லி. அளவு அல்லது அரை பாட்டில் பியர் குடித்தால் கூட, பெண்ணின் உடல் தன்மைக்கு அதிகமே. அதனால், பாதுகாப்பான குடி என்பதே பெண்களுக்கு இல்லை. ஆண்களுக்கு மது காரணமாக ஏற்படும் உடல் / மன / சமூகப் பிரச்னைகள் பெண்களுக்குப் பல மடங்காகப் பெருகுகின்றன. 

*கர்ப்பிணிகள் மது அருந்துவது, கருவில் உள்ள குழந்தையை கடுமையாகப் பாதிக்கும். மனவளர்ச்சிக் குறைபாடு, பிறவிக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

*சமூகத்தில் மது அருந்துவது இரு பார்வைகளாக  உருவாகிவிட்டன. ஆண் மது அருந்துவதற்கு ஓரளவு அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிட்டது. பெண்கள் மது அருந்துவது என்பது இப்போதைய சூழலில் அவமானமாகவே கருதப்படுகிறது. அதனால், மதுப்பழக்கம் உடைய பெண்கள் வீட்டிலோ, வெளியிலோ பிறர் அறியா வண்ணமே குடிக்கிறார்கள். இதை ரகசியமாகவே வைத்திருப்பார்கள் என்பதால், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அவர்களுக்கு இவ்விஷயத்தில் உதவ முடியாமலே போகிறது. 

*பெண் என்ற காரணத்தாலேயே பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை இன்றுள்ளது. அவற்றிலிருந்து விடுபட உதவும் என நம்பி மதுவை நாடுவோரும்  அண்மைக்காலமாக அதிகமாகி வருகிறார்கள். இச்சூழலில், இதை ஒரு விவாதப் பொருளாக ஆக்காமல், மதுவிலிருந்து விடுபடும் வழிகளை ஆக்கப்பூர்வமாக அளிப்பதே குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சமூகத்துக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை.

அதிர்ச்சி டேட்டா

*உலகில் ஐந்தில் ஒரு நாட்டுப்புறப் பாடலில் மது இடம் பெற்றிருக்கிறது.

*அலெக்ஸாண்டர் ஒருமுறை தன் வீரர்களுக்கு மது அருந்தும் போட்டி நடத்தினார். போட்டியின் முடிவில் 42 பேர் இறந்திருந்தார்கள், மது விஷம் காரணமாக! மதுவின் நச்சுத்தன்மைக்கு பெண்கள் எளிதில் ஆட்படுவார்கள். குழந்தைகள் குடித்தால், அவர்களின் மூளை அமைப்பு சிதைவதோடு, அதன் செயல்பாடுகளும் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகின்றன.

(தகவல்களைப் பருகுவோம் !)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.