News
Loading...

களத்துக்கு வந்த கரன்ஸி மாஃபியாக்கள்!

களத்துக்கு வந்த கரன்ஸி மாஃபியாக்கள்!

‘இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக’ என்ற அவப்பெயருடன் தள்ளி வைக்கப்பட்ட ‘பணப் பட்டுவாடா’ புகழ் அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் நவம்பர் 19-ம் தேதி மறுதேர்தல் என அறிவிக்கப்பட்டதும், முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இருவரும் விறுவிறுப்பாக களமிறங்கிவிட்டனர்.

கடந்த மே மாதம் 11-ம் தேதி, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவரும் கோடிகளால் வாக்காளர்களை  ‘கவர்’ செய்தனர் என்ற குற்றச்சாட்டுதான், தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம். தேர்தல் கமிஷனின் பறக்கும் படைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி பணம் எடுத்துச் செல்ல ‘புதுசு கண்ணா புதுசு’ பாணியை கடைப்பரப்பினார், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அன்புநாதன். அவரது பண்ணை வீட்டில் இருந்து நாலரை கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். 

இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் செந்தில்பாலாஜியையே தனது வேட்பாளராக அ.தி.மு.க நிறுத்தியுள்ளது. “முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில், சொந்த மாவட்டத்துக்கு வராமல் சென்னையிலேயே ‘மையம்’ கொண்டு சசிகலாவின் அண்ணி இளவரசி மூலமாக செந்தில்பாலாஜி சீட் வாங்கிவிட்டார்” என்கிறார்கள் கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர். கூடவே, இன்னொரு  காரணத்தையும் சொல்கிறார்கள். “முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால், புது வேட்பாளர் பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நிலையில், செந்தில்பாலாஜியையே அறிவித்துவிட்டனர். மேலும், கடந்த முறை முதல்வரால் அறிவிக்கப்பட்ட செந்தில்பாலாஜியை மாற்றினால், அது சென்டிமென்டாக முதல்வருக்குப் பிரச்னையை உண்டாக்குமோ என்றும் யோசித்தார்களாம்” என்கிறார்கள், கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.   

அதேபோல, தி.மு.க வேட்பாளராக மீண்டும்  களமிறக்கப்பட்டுள்ளார் கே.சி.பழனிச்சாமி. 2011-16-ல் அரவக்குறிச்சி எம்.எல்.ஏவாக இருந்த கே.சி.பி எதையும் தொகுதிக்குச் செய்யவில்லை என்ற அதிருப்தி  தொகுதி மக்களிடம் இருக்கிறது. எனவே கடந்த முறை, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை. ஆனால், செந்தில்பாலாஜியை எதிர்க்கக்கூடிய கேன்டிடேட் என்ற அடிப்படையில் கே.சி.பழனிச்சாமியை அரவக்குறிச்சியில் நிறுத்த தி.மு.க முடிவுசெய்தது. உண்மையில், அவருடைய சாய்ஸ்  கரூர்தான். 

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறதா, அல்லது, தனித்துப் போட்டியிடுகிறதா என்ற குழப்பம் சமீபத்தில் உண்டான நேரத்தில், காங்கிரஸின் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியனுக்கே சீட் கிடைக்கலாம் என்று பேச்சு அடிபட்டது. ஜோதிமணியும் களம் காணும் ஆசையில் இருந்தார். இடைத்தேர்தலில் பங்கேற்கவில்லை  என்று மக்கள் நலக் கூட்டணி முடிவெடுத்துவிட்டனர்.

தொகுதிப் பிரச்னைகள் குறித்து, “அரவக்குறிச்சியிலும், பள்ளப்பட்டியிலும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. எல்லாக் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், ஊழியர்கள் இல்லை. காய்ச்சலைத் தவிர்த்து வேறு எந்தவொரு  பிரச்சனைக்காகப் போனாலும் திருச்சிக்கோ, கரூருக்கோதான் அனுப்புகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதாக தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கிறார்களே ஒழியே, வெற்றிபெற்றபின் வாக்குறுதியை மறந்துவிடுகிறார்கள்” என்றார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதிச் செயலாளர் ஆலிம் ஏ.ரிபாய்தீன் ஹாசன், “இந்தத் தொகுதியில், முருங்கை சாகுபடி அதிகமாக உள்ளது. முருங்கையைச் சார்ந்து ஒரு தொழிற்சாலை இங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. 2011-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த கே.சி.பி கூட அதைச் சொல்லித்தான் ஓட்டுக் கேட்டார். ஆனால், செய்யவில்லை” என்றார்.

பணப்பட்டுவாடா செய்ததற்காக, தேர்தல் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கே.சி.பழனிச்சாமியும், செந்தில்பாலாஜியும் மீண்டும் தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என அவர்களை எதிர்த்து வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு சூடுபிடித்தால் காட்சிகள் மாறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.