News
Loading...

அரசே விதைக்கும்... அரசே அறுக்கும்!

அரசே விதைக்கும்... அரசே அறுக்கும்!

கேரள அரசின் பண்ணை மீட்புத் திட்டத்தால் அங்கு காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, இயற்கை விவசாயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கேரளாவில் காய்கறி விளைச்சல் மிகவும் குறைவு. இந்தியாவில் காய்கறி உற்பத்தி செய்யும் முதல், 10 மாநிலங்களில்கூட கேரளா இல்லை. காய்கறி தேவைக்காக தமிழகம், கர்நாடகாவை நம்பித்தான் கேரளா உள்ளது. ஆனால், அண்மைகாலத்தில் கேரளா கொண்டு வந்துள்ள இயற்கை வேளாண் கொள்கை மற்றும் காய்கறி சாகுபடி ஊக்குவிப்பு திட்டங்களால் கேரளத்தின் காய்கறி உற்பத்தி கணிசமாக அதிகரித்து உள்ளது.

குடும்ப ஸ்ரீ, ஜனஸ்ரீ

தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளுக்கு தடை விதிக்க கேரளா அரசு முடிவு செய்திருப்பதற்கு அங்கு காய்கறி உற்பத்தி அதிகமானதும் ஒரு காரணம். இந்த ஆண்டு இறுதிக்குள் காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட வேண்டும், ரசாயன பாதிப்பற்ற காய்கறிகளை மக்களுக்குத் தர வேண்டும் என்பதுதான் அம்மாநில அரசின் நோக்கம். இதற்காக மாநில வேளாண் துறை சார்பில், பண்ணை மீட்புத் திட்டம் 676 (Mission 676) துவங்கப்பட்டு உள்ளது. 

இத்திட்டத்தின்படி, வீட்டையொட்டி காலியாக உள்ள இடங்களிலும் மொட்டை மாடிகளிலும் அவரவர் தங்கள் தேவைக்கு ஏற்ப காய்கறி தோட்டங்களை அமைக்க அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த குடும்ப ஸ்ரீ, ஜனஸ்ரீ போன்ற சுய உதவிக் குழுக்களை நியமித்து உள்ளது. குடும்பஸ்ரீ அமைப்பின் தலைவராக பிரபல நடிகை மஞ்சு வாரியர் உள்ளார். இவர் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாகச் சென்று குறைந்த விலையில் காய்கறி விதைகளை கொடுத்து தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். 

மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை கட்டணமாகச் செலுத்தினால், இவர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து விதைகளை நடுவது முதல் தோட்டம் அமைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து தருகின்றனர். வீட்டு தேவைக்கு மேல் கூடுதலாக விளையும் காய்கறிகளை கூட்டுறவு மையம் மூலம் விற்பனை செய்யவும் இவர்களே ஏற்பாடு செய்து தருகின்றனர். 

தற்போது கேரளா முழுவதும் பல லட்சம் பேர் தங்களது வீட்டுத் தோட்டங்களை மாடியிலிலும் காலி இடங்களிலும் அமைத்து உள்ளனர். சிலர் மொட்டை மாடிகளில் வாழை, கொய்யா, எலுமிச்சை போன்ற சிறு மரங்களைகூட வளர்க்கின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது, பலர் தங்கள சொந்த வீட்டில் விளைந்த காய்கறிகளையே பயன்படுத்தினர்.

வீடு, மாடித் தோட்டம் தவிர, விளை நிலங்களிலும் காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா தட்பவெப்ப நிலைக்கு உகந்த காய்கறி விதை ரகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை மானிய விலையில் விவசாயிகளிடம் வினியோகம் செய்கின்றனர். அத்துடன் காய்கறி பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கான மானியமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

உரம், களை மேலாண்மை, நோய், பூச்சி கட்டுப்பாடு என்று அனைத்திற்கும் இயற்கை உரங்களை மட்டுமே கேரள அரசு சிபாரிசு செய்கிறது. பாதிப்பின் அளவு கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால் மட்டுமே ரசாயன உரங்களை சிபாரிசு செய்கின்றனர். மாநிலம் முழுவதும் 10க்கும் அதிகமான பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு முழுக்கவே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 2,500 டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு 
நிர்ணயம் செய்துள்ளனர்.

முதல் மாநிலம்

மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கய்கறிகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை அறிய நடமாடும் ஆய்வகம் ஒன்று இந்தயாவிலேயே முதன்முறையாக கேரளாவில் நடைமுறையில் உள்ளது. 

இந்த ஆய்வகத்தின் மூலம் ஆய்வு செய்து குறிப்பிட்ட காய்கறி, பழங்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்து இருந்தால், அம்மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு காய்கறிகளை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். தர நிர்ணய சான்றிதழ் பெற்ற வாகனங்களை மட்டுமே மாநில எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.