News
Loading...

கூகுள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

கூகுள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஸ்மார்ட்போன்கள் உலகில், தானே முந்திச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு, செயற்கை நுண்ணறிவியல் அடிப்படையில் உருவான 'கூகுள் அசிஸ்டண்ட்' என்னும் செயலியுடன், தன் முதல் ஸ்மார்ட் போனை கூகுள் நிறுவனம் “கூகுள் பிக்ஸெல்” என்ற பெயரில், அக்டோபர் 4 அன்று, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வெளியிட்டது. சென்ற மாதம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் சாம்சங் காலக்ஸி போன்களுக்குப் போட்டியாக வெளி வந்திருக்கும் இந்த போனின் சிறப்பம்சங்கள், கூகுள் நிறுவனத்தின் இலட்சியங்களை அடைய வழி வகுத்துள்ளன என்று கூறலாம். கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாகி, மீண்டும் தன் குழுவினரின் தொழில் நுட்பச் சிறப்பை நிரூபித்துள்ளார்.

இதுவரை ஆண்ட்ராய்ட் போன்களின் இயக்க முறைமையை மட்டும் கூகுள் நிர்ணயம் செய்து வந்தது. முதல் முறையாக, ஆண்ட்ராய்ட் போன்களின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் என இரண்டையும் கூகுள் நிறுவனமே வடிவமைத்து, அத்தகைய முதல் போன்களை வழங்கியுள்ளது. 

இந்த ஸ்மார்ட் போன்களை, எச்.டி.சி. நிறுவனம், கூகுள் நிறுவனத்திற்காகத் தயாரித்தாலும், முழுக்க முழுக்க தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு கூகுள் பொறியாளர்களின் உழைப்பின் உருவமாகவே உள்ளது. எச்.டி.சி. பெயர் எதிலும் இல்லை. கூகுள் நிறுவனப் பெயர் கூட, அதன் முதல் எழுத்தான 'G' என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. 
உலகத் தரத்திலான ஸ்மார்ட் போன்களை வடிவமைத்துத் தயாரிப்பது என்பது, கூகுள் போன்ற அனைத்து தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைக் கொண்ட நிறுவனத்திற்குக் கூட பெரிய சவாலாகும். ஆனால், இந்த போன்களைத் தந்ததன் மூலம், இதில் கூகுள் வெற்றி பெற்றுவிட்டது என்றே கூற வேண்டும்.

இந்த அறிமுகவிழாவின் தொடக்கத்தில் பேசிய சுந்தர் பிச்சை, டிஜிட்டல் உலகின் வளர்ச்சியின் முதல் இரண்டு நிலைகள், 'பெர்சனல் கம்ப்யூட்டர்' மற்றும் 'இணையம்' என்று குறிப்பிட்டுவிட்டு, இனி மூன்றாவது நிலை “மொபைல் போன்களே” என்று கூறினார். இனி, கூகுள் நிறுவன ஆய்வுகள் மொபைல் பிரிவில் அதிகக் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார். அவ்வகை ஆய்வுகளின் முதல் வெற்றிப் படைப்பாக, இந்த பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள் வந்துள்ளன. 

கடந்த 20 ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகத் தேடலில் யாரும் தொட முடியாத முதல் இடத்தில் இயங்கி வரும் கூகுள், தற்போது 'செயற்கை நுண்ணறிவுத்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயலிகளை உருவாக்கி, நம் வாழ்வை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்ற உள்ளது. அதன் தொடக்கம் இந்த ஸ்மார்ட் போன்களில் ஆரம்பித்துள்ளது. 
'கூகுள் பிக்ஸெல் மற்றும் கூகுள் பிக்ஸெல் எக்ஸ்.எல்' என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் முதல் தொழில் நுட்ப சிறப்பம்சம் இதில் இணைத்துத் தரப்பட்டுள்ள 'கூகுள் அசிஸ்டண்ட்' ஆகும். 

Artificial Intelligence என்னும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி, நம் குரல் கட்டளைகளை ஏற்றுச் செயல்படும். ஓர் உதவியாளர் போலவே நம்முடன் பேசும். “இதன் மூலம், ஒவ்வொரு பயனாளரும் தன் தனிப்பட்ட கூகுள் அனுபவத்தினைப் பெற இயலும்” என சுந்தர் பிச்சை, கூகுள் அசிஸ்டண்ட் குறித்துக் கூறினார்.
இதே அடிப்படையில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் 'Siri' மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'Cortana' ஆகியவை, தாங்கள் உறுதி அளித்த பல செயல்களை இன்னும் ஈடேற்ற முடியாத நிலையில் உள்ளன. அந்த இடைவெளியை 'கூகுள் அசிஸ்டண்ட்' நிறைவேற்றிவிட்டால், இந்தப் பிரிவில் தொடர்ந்து பல சிகரங்களை கூகுள் தொட முடியும். 

'கூகுள் அசிஸ்டண்ட்' ஆண்ட்ராய்ட் 7.1 இயக்க முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. போனில் உள்ள ஹோம் பட்டனை சற்று நேரம் அழுத்திப் பிடித்தால், இது இயங்கத் தொடங்குகிறது. அல்லது ஏதேனும் ஒரு சொல்லைக் கூறினால், இயக்கம் தொடங்குகிறது. முந்தைய போன்களில் 'வாய்ஸ் சர்ச்' டூல் தனியாகக் கிடைத்தது. தற்போது இது சிஸ்டத்திலேயே இணைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் வசதிகளும் பயன்பாடுகளும் தொடர்ந்து மேம்படுத்தப்படும். 

ஐபோன் 7ல் இல்லாத, யு.எஸ்.பி.போர்ட் (டைப் சி) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இந்த போன்களில் தரப்பட்டுள்ளது. “மக்கள் அதிகம் விரும்பும், இவற்றை நீ நீக்கினாயா? நான் தருகிறேன்” என ஆப்பிள் நிறுவனத்திற்கு, கூகுள் இந்த வகையில் சவால் விட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள கேமராக்கள், மற்ற ஸ்மார்ட் போன்களின் கேமராக்களைக் காட்டிலும் அவற்றின் திறன் அடிப்படையில் முதலிடம் பெற்றுள்ளதாக, ஸ்மார்ட் போன் கேமராக்களை ஆய்வு செய்திடும் அமைப்பு அறிவித்துள்ளது. கேமராக்களை ஆய்வு செய்வதில் நிபுணர் என உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் DxOMark என்பவர், இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராவின் செயல் திறனுக்கு 89 புள்ளிகள் கொடுத்து, முதலிடத்தைத் தந்துள்ளார். காலக்ஸி எஸ் 7 போன் கேமராவிற்கு 87 புள்ளிகளும், ஆப்பிள் ஐபோன் 7க்கு 86 புள்ளிகளும் வழங்கியுள்ளார். பல்வேறு வெளிப்புற சூழ்நிலைகளில், மிகத் துல்லியமான இமேஜ்களைப் படங்களாக வழங்குவதில், இதில் உள்ள கேமராக்கள் முதல் இடத்தில் உள்ளன. மற்ற நிறுவன ஸ்மார்ட் போன் கேமராக்களைக் காட்டிலும் குறைவான மெகா பிக்ஸெல் திறனை இவை கொண்டிருந்தாலும், 1.55 மைக்ரான் இமேஜ் சென்சார் மற்றும் f/2.0 aperture, படங்களின் தெளிவினை உறுதி செய்கின்றன. இதில் உள்ள ஷட்டரின் வேகம், வேறு எந்த ஸ்மார்ட் போன் கேமராவிலும் காண இயலாததாகும். இந்த கேமராக்களில் தரப்பட்டிருக்கும் HDR+ தொழில் நுட்பம், படம் ஒன்றை ஷூட் செய்கையில், அதனைப் பல சிறிய படங்களாகப் பிரித்து அறிகிறது. மிகச் சிறந்த படத்தினைத் தருகிறது. மிகச் சிறந்த படத்தினை அறிந்து தேர்ந்தெடுக்க, இந்த போனில் தரப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. அதே போல, விடியோ படங்களை பதிந்து தருவதிலும், இதன் சிறப்பான திறன் வெளிப்படுகிறது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. 

விடியோ அழைப்பிற்கு 'Duo calling' மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கு 'Allo' செயலிகள் இந்த ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ளன. 
இந்த போன்களில் தரப்பட்டுள்ள இன்னொரு தனி வசதி, படங்கள் மற்றும் விடியோக்களை, க்ளவ்ட் தேக்ககத்தில் (Cloud Storage) பதிந்து கொள்வதாகும். இவ்வாறு பதியப்படும் இந்த பைல்களுக்கான அளவிற்கு எல்லையே இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம். மேலும், அதே 4K பண்புகளுடன் படங்களும், விடியோக்களும் சேவ் செய்யப்படுவது, இந்த போன்கள் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு வசதியாகும்.

ஒவ்வொரு மாடல் போனும், 32 மற்றும் 128 ஜி.பி. தேக்ககம் கொண்டதாகக் கிடைக்கிறது. ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதனை அதிகப்படுத்த முடியாது. தேக்ககத்தில் மேற்கொண்டு இடம் இல்லாத நிலை ஏற்பட்டால், அதில் உள்ள போட்டோக்களும் விடியோக்களும் நீக்கப்பட்டு இடம் உண்டாக்கப்படும். போட்டோக்களும் விடியோக்களும் நீக்கப்படுகின்றனவே எனக் கவலை வேண்டியதில்லை. அனைத்தும் கூகுள் க்ளவ்ட் ஸ்டோரேஜ் இடத்தில் பாதுகாப்பாக பதியப்பட்டு இருக்கும். 

அறிமுகமான ஸ்மார்ட் போன்களில் உள்ள, வெளியே எடுக்க முடியாத பேட்டரிகளின் திறனும் குறிப்பிடத்தக்கது ~ (2,770mAh மற்றும் 3,460mAh). ஏழு மணி நேரம் மின்சக்தி வழங்குவதற்கான மின்னோட்டத்தை, 15 நிமிடங்களில் சார்ஜ் செய்து உருவாக்கிக் கொள்ளும் தொழில் நுட்பத்தை இந்த பேட்டரிகள் கொண்டுள்ளன.

போன் முழுமையும் அலுமினியம் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட கவசம் பாதுகாக்கிறது. பிக்ஸெல் போனில் 5 அங்குல திரையும், எக்ஸ்.எல். மாடலில் 5.5 அங்குல திரையும் உள்ளன. திரைக்கு 2.5 D கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சற்று உயரத்திலிருந்து கீழே போட்டாலும், போனின் திரைக்குச் சேதம் எதுவும் ஏற்படாத வண்ணம் இது பாதுகாக்கிறது. இந்த திரைகள் AMOLED டிஸ்பிளே கொண்டவையாக உள்ளன. Daydream VR சாதனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்த டிஸ்பிளே தேவை. புனையுருவாக்கக் காட்சிகள் இந்த வகை காட்சித் தோற்றத்தில் தான் கிடைக்கும். எல்.சி.டி. திரையைக் காட்டிலும், இதன் காட்சித் தோற்ற மாற்றங்கள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும். 

போனை இயக்க Pixel Imprint விரல் ரேகை உணரி தரப்பட்டுள்ளது. போனின் பின்புறமாக இது உள்ளதால், ஆட்காட்டி விரலின் ரேகை வழி, போனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். கட்டை விரல் ரேகை தேவையில்லை. விரல் ரேகை உணரப்பட்டவுடன், விரல் ரேகை ரீடர், ஒரு சிறிய மினி பேட் ஆக மாறுகிறது. இதனை கூகுள் Pixels Imprint என அழைக்கிறது. இதில், விரலால் தடவினால், செயலிகள், டெக்ஸ்ட், இமெயில் அன அனைத்தையும் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்தத் திரை Pixel Launcher ஆகும். இதில் செயலிகள் மற்றும் விளையாட்டுகள் காட்டப்படும். நாள், நேரம், சீதோஷ்ண நிலை அனைத்தும் வலது மேல் பகுதியில் காட்டப்படுகின்றன. கூகுளின் லோகோ 'G' தொட்டவுடன், கூகுள் தேடல் டூல் கிடைக்கிறது. 

இதே அறிமுக விழாவில், கூகுள் வை பி, கூகுள் குரோம்காஸ்ட் அல்ட்ரா, கூகுள் ஹோம், கூகுள் ட்ரீம் வியூ வி.ஆர்., ஆகிய சாதனங்களும் இயக்கிக் காட்டப்பட்டன. இந்த சாதனங்களின் அறிமுகம், நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒருங்கிணைத்து இயக்கி மகிழலாம் என்பதைத் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி, தன்னுடைய சாதனங்களின் இயக்கக் கட்டுப்பாடு தன்னிடத்தில் மட்டுமே இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது. 

உலக அளவில், பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் இயக்கமே இயங்குகிறது. மிக அதிக அளவில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம், தொடர்ந்து தன் சாப்ட்வேர் செயலிகளைப் பதிந்து, போன்களை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, அதன் இயக்க முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த கூகுள் அனுமதித்து வருகிறது. 

எடுத்துக் காட்டாக, சாம்சங் சில ஸ்மார்ட் போன்களில், Samsung Pay போன்ற தன்னுடைய சாப்ட்வேர் செயலிகளை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும்படி, தயாரித்துத் தன் போன்களில் இணைத்து தருகிறது. ஆப்பிள் தன் ஐபோன்களில், கூகுள் செயலிகளுக்கு இணையான செயலிகளைத் தயாரித்து பதிந்து தருகிறது. கூகுள் செயலிகள் எதற்கும் இடம் இல்லாமல் செய்துவிட்டது. கூகுள் மேப் செயலி முன்பே நீக்கப்பட்டுவிட்டது. 

எனவே, கூகுள் தன் தயாரிப்புகளைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க விரும்புகிறது. அமெரிக்காவில், இந்த ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திடும் உரிமையை, வெரிஸான் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கியுள்ளது. ஆப்பிள், தன் புதிய ஐபோன்களுக்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனத்தினை மட்டுமே அனுமதித்ததன் எதிரொலியாக, கூகுள் நடவடிக்கை அமைந்துள்ளது. 

ஹார்ட்வேர் மற்றும் அதனை இயக்கும் சாப்ட்வேர் ஆகிய இரண்டையும் தான் மட்டுமே வடிவமைத்து இயக்கினால், இன்னும் பல புதிய வசதிகளைத் தர முடியும் என கூகுள் திட்டமிடுகிறது. தொடக்கத்திலிருந்து ஆப்பிள் இதனைத்தான் மேற்கொண்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனமும் அதே கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. 

பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள் இரண்டிலும், ஆண்ட்ராய்ட் 'நகட்' இயக்க முறைமையின் பதிப்பு 7.1 தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வரும் முதல் ஸ்மார்ட் போன்கள் இவை தான். இதனுடைய பயனர் இடைமுகத்தினை (User Interface) கூகுள், இந்த போன்களுக்கானதாக மாற்றி அமைத்துள்ளது. இந்த இயக்க முறைமை தொடர்ந்து இலவசமாக அனைத்து பிக்ஸெல் போன்களிலும் மேம்படுத்தப்படும். 

கூகுள் பயன்படுத்தும் தொழில் நுட்பம், வடிவமைத்த செயலிகளின் திறன், பிக்ஸெல் ஸ்மார்ட்போன்கள் மூலம் நம் விரல்களுக்கு மாற்றப்படுகிறது. ஒவ்வொரு தொடுதலும், ஒவ்வொரு தொடர்பும், ஒவ்வொரு கணமும் நம்மை உற்சாகப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் மக்களிடம் பரவலாகக் கிடைக்கும்போது நாம் அனைவரும் இதனை அறிந்து கொள்ளலாம். 

கூகுள் கூட்டிய இந்த காட்சி அரங்கில், புதிய ஸ்மார்ட் போன்களும், வேறு சில சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த Andromeda, Huawei tablet மற்றும் Chromebooks குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. வரும் காலங்களில், இவற்றையும் தன் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைத்து கூகுள் தரும் என எதிர்பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.