News
Loading...

தூய காற்று தரும் எந்திரம்!

தூய காற்று தரும் எந்திரம்!

சீனாவின் தொழில்வளர்ச்சி எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறதோ அதே அளவு காற்று மாசுபாடும் அதிகரித்து வருகிறது. காற்று மாசு குறித்த ஆய்வில் காற்றில் 49 சதவிகித மாசு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ‘பார்டிகுலேட் மேட்டர்’ என்னும் அளவீட்டின் படி அளக்கலாம். சீனாவில் பிஎம் 2.5 அளவீட்டின் படி 170 சதவிகிதம் மாசுக்கள் காற்றில் கலந்துள்ளன. 

அதாவது குழந்தைகள் வெளியில் வந்து விளையாட முடியாத, ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும் அளவு ஆபத்து! சாலையில் பனி போல காற்றில் தூசிகள் கலந்திருக்க, மக்கள் முகமூடி அணிந்து நடக்கும் காட்சி அங்கு சாதாரணம். இது சீனாவுக்கு மட்டுமான கதி அல்ல, வளர்ச்சிக்கு எல்லோரும் தரும் விலை! இதை மாற்றும் அரிய கண்டுபிடிப்பு... மாசுக்களை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம்.

காற்று அளவுகோலான பி.எம் என்பது பல்வேறு செயல்பாடுகளின் (தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை, குப்பைகள் எரிப்பது) வழியே மாசுபடும் காற்றில் உள்ள திட - திரவ சேர்மங்களின் அளவைக் குறிப்பிடுவதாகும். பி.எம் 10  மைக்ரோ மீட்டர் அளவு காற்றில் உள்ள மாசுக்களின் அடர்த்தி இருந்தால் உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறைவு. ஆனால் அதுவே இன்னும் நுட்பமாக பி.எம் 25 மைக்ரோமீட்டர் அளவில் இருந்தால் (தலைமுடியின் அளவில் 1/30) நம் உள்ளுறுப்புகளில் (நுரையீரல்) மோசமான நோய்களை ஏற்படுத்தும். 

இந்த மாசுபட்ட காற்றை உறிஞ்சி, சுத்தம் செய்து, தூய காற்றை வெளியிடும் எந்திரம் ஒன்றை நெதர்லாந்து நாட்டின் டான் ரூஸ்கார்ட் என்பவர் உருவாக்கியிருக்கிறார். பொது இடங்களில் நிறுவ முடிகிற இந்தக் காற்று சுத்திகரிப்பு எந்திரம், 23 அடி உயரத்தில், பார்க்க க்ரோம் நிறத்தில் சிறிய கட்டிடம் போலவே தோற்றமளிக்கிறது. 

இதில் அயனியாக்கம் முறையில் அசுத்தக் காற்று உள்ளிழுக்கப்பட்டு சுத்திகரித்து தூய காற்றாக வெளியே வருகிறது. கால்பந்து மைதான அளவு இடத்தில் 36 மணி நேரத்தில் 70-80 சதவிகித அளவு காற்றினை தூய்மைப்படுத்த முடியும். இது ஒரு நாள் முழுக்க செயல்பட ஆயிரத்து 400 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 

‘‘இதை ராட்டர்டாம் நகரில் சோதித்துப் பார்த்ததில் முழு திருப்தி’’ என்கிற ரூஸ்கார்டுக்கு இன்னும் சவால்கள் காத்திருக்கின்றன. சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சகம்  இவர் கண்டுபிடித்த எந்திரத்தை பெய்ஜிங் நகரில் இப்போது ஒரு பூங்காவில் நிறுவச் சொல்லியிருக்கிறது. காற்றை சுத்திகரிப்பதில் திறம்பட செயல்பட்டால் மற்ற பெரிய நகரங்களிலும் நிறுவப்படும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.  

‘‘காற்றை சுத்திகரிப்பதற்கான இயந்திரம் நிறுவுதல் என்பது நாங்கள் சந்திக்கும்  மோசமான அறிகுறி. இது நாங்கள் காற்று மாசுபாட்டை எதிர்த்து செயல்படவேண்டிய அவசியத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது’ என வருத்தம் தோய பேசுகிறார், சீன சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பிரிவான சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்கள் அமைப்பின் கூடுதல் இயக்குநரான லீ க்யூசெங்.

இதற்கு ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறையில் பொதுமக்களிடம் 83 லட்சத்து 80 ஆயிரத்து 931 ரூபாய் திரட்டியிருக்கிறார்கள். காற்றை சுத்தப்படுத்தும் எந்திரம் கண்டுபிடிப்பதற்கான ஐடியா, சீனாவின் பெய்ஜிங் நகருக்கு வந்தபோதுதான் ரூஸ்கார்டுக்கு திடீரென தோன்றியது. அங்கு 1 ஆண்டிற்கு மேலாக குழந்தைகள் வெளியில் வந்து விளையாடாமல் இருந்தார்கள். அங்கு மட்டுமில்லாது, புதுடெல்லி, மும்பை, சாண்டியாகோ, மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று காற்று மாசுபடுதலை ஆராய்ந்திருக்கிறார் அவர். 

‘‘என்னிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதிலில்லை. ஆனால் நான் உருவாக்க முனைகிற சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து உங்கள் முன் வைக்கிறேன்’’ என தனது பணிகளைக் குறித்து பணிவாகப் பேசும் ரூஸ்கார்ட் வரிசைப்படுத்தி வைத்திருக்கும் எதிர்காலப் பணிகள் ஆச்சர்யப்படுத்துகின்றன. ‘சூழல் மாசுபாட்டிற்கு இது தற்காலிகத் தீர்வு தரலாம். நிரந்தரமல்ல’ என்பதை மனதில் கொள்வதே இயற்கை சூழல் இயல்புக்குத் திரும்ப ஒரே வழி. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.