News
Loading...

தொழிலால் வரும் துயரம்

தொழிலால் வரும் துயரம்

தொழில்தான் வாழ்க்கை நடத்த உதவுகிறது. ஆனால், நம்மை வாழ வைக்கும் தொழிலே சமயங்களில் நோய் கொடுக்கும் மூலகாரணியாகவும் மாறிவிடுகிறது. அதனால்தான் தொழிலால் வரும் நோய்களுக்கு Occupational hazards என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். தொழில் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் சசிகுமார் முத்து.

‘‘பொதுவாக ரசாயனம் சார்ந்த இடங்களில் வேலை செய்கிறவர்களுக்கு சரும நோய்கள் அதிகளவில் ஏற்படும். சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வேலை செய்பவர்களின் உடலில் படும்போது Dermatitis  பாதிப்பை உண்டு பண்ணும். இதை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் புண்ணாக மாறி நாளடைவில் புற்றுநோயாகும் அபாயம் உள்ளது. 

நச்சுத்தன்மை உள்ள ரசாயனங்களால் நரம்புகள் பாதித்தல், ரத்த ஓட்டம் குறைதல், வயிற்றுவலி, உணர்வு குறைதல், நரம்பில் இருந்து மூளைக்குப் போகும் சிக்னல் குறைதல், வெயில் தாக்கத்தினால் தோலில் ஏற்படுகிற Melanoma Cancer போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

இவையெல்லாம் தோல் மூலம் ஏற்படுகிற பாதிப்புகள். நுரையீரலைப் பொறுத்தவரை நச்சுத்தன்மை உள்ள கெமிக்கல்ஸ் நடுவே பலமணி நேரம் வேலை செய்வதால் முதலில், மூச்சடைப்பு உண்டாகும். அதைத் தொடர்ந்து இருமல், தொடர் இருமல் ஏற்படும். இதை எக்ஸ்-ரே மற்றும் சுவாசக்குழாயில் கேமரா செலுத்தி பார்த்தல் போன்றவற்றால் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, ரசாயனங்கள் அதிகளவில் பயன்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறவர்கள் கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளைப் பாதுகாக்க கிளவுஸ், மாஸ்க், ஷூ ஆகிய பாதுகாப்பு உபகரணங்களைக் கண்டிப்பாக வேலை நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும். 

ரசாயனங்கள் உடலில் பட்டால் உடனடியாக அந்த இடத்தை எவ்வாறு சுத்தம் செய்வது அவற்றின் வீரியத்தை எவ்வாறு குறைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அவற்றால் ஏற்படுகிற பாதிப்புகளைக் குறைக்கலாம். தொழிற்சாலைகளில் பெரும்பாலான விபத்துக்கள் நச்சுப்பொருட்களால்தான் ஏற்படுகின்றன. 

லட்சத்தில் மூன்று பேர் நச்சுப்பொருட்கள் உண்டாகும் பாதிப்பு களால் உயிரிழக்கும் நிலை தொடர்கிறது. அதேபோல், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பலர் Choronic Diseases எனப்படும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். எனவே, இந்த நோய்களின் தன்மையைப் பொறுத்தும், அவற்றிற்கு செய்யப்படும் சிகிச்சைகளின் செலவைப் பொறுத்தும் தங்களைப் பாதுகாத்து கொள்வது நல்லது.

உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் ரசாயனங்களால் ஆஸ்துமா போன்ற நோய்கள் எல்லோருக்கும் வரக்கூடியவை. இதனால் நுரையீரலில் உள்ள சிறுசிறு பாதைகள் அடைக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிற பிரச்னையையும் நிறைய பார்க்கிறோம். ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு தொழிற்சாலையில் சேர்ந்த பிறகு இப்பிரச்னை அதிகரிக்கும். இவர்கள் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கவே கூடாது. இல்லாவிட்டால் சில நச்சுவாயுக்களை சுவாசிக்க வேண்டி யிருக்கும். கார்பன் மோனாக்ஸைடு வாசனையைக் கொஞ்சமும் உணர முடியாது என்பதால் கவனம் தேவை.


அதேபோல் தோல் பொருட்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்னென்ன நச்சு வாயுக்கள் நடுவே வேலை செய்கிறோம், அவை வெளியேறினால் உடனடியாக உயிரைப் பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், அங்கிருந்து எவ்வாறு பத்திரமாக வெளியேறுவது என்பதற்கான வழிமுறைகளை நன்றாக அறிந்து இருக்க வேண்டும். 

ஆஸ்பெஸ்டாஸ், சிலிகான் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை ஆஸ்துமா பெருமளவில் தாக்குகிறது.தொழிற்சாலைகளினால் அதில் பணிபுரிகிறவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் வசிக்கும் குடும்பத்தினரும் அதற்கு இணையான நோய்த் தாக்கத்துக்கு ஆளாகின்றனர். தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

 எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம். ஆரம்பநிலையிலேயே மேற்கொண்டு, என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

தற்போது தொழிற்சாலைகளில் நானோ டெக்னாலஜி மூலம் நிறைய பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். நானோ என்பது அணுவைவிட மிக சிறியது. இது யார் உடலில் எந்த உறுப்புக்குள் சென்றுவிட்டாலும் கண்டுபிடிப்பது சிரமம். 

அதனாலும் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். முக்கியமாக, ரசாயனங்களின் பாதிப்பால் வரும் டெர்மடைட்டிஸ் பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிட்டால் நோய் மேலும் பரவாது.’’
தொழிற்சாலைகளினால் அதில் பணிபுரிகிறவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் வசிக்கும் குடும்பத்தினரும் அதற்கு இணையான நோய்த் தாக்கத்துக்கு ஆளாகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.