News
Loading...

குத்துச்சண்டை போட்ட கணித மேதை

குத்துச்சண்டை போட்ட கணித மேதை

*தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர் வெங்கட்ராமன் என்றாலும், வீட்டில் ‘சாமா’ என்பதுதான் செல்லப் பெயர். அதைக் கேட்ட அவரது குரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ‘‘சாமிநாதன் என்ற பெயரை வைத்துக் கொள்’’ என்றார். குருவின் பேச்சைத் தட்டாமல் உடனே உ.வே.சா.வும் தன் பெயரை மாற்றிக் கொண்டார். 90 நூல்களை அச்சிட்டு 3000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளை சேகரித்து தமிழின் தொன்மை காத்த நம் மொழியின் முன்னோடி அவர். 

*கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு (கோபாலஸ்வாமி துரைசாமி நாயுடு), தமக்கு வருகின்ற கடிதங்களை எல்லாம் தினசரி 2 மணி நேரம் படித்து, ஒவ்வொன்றிற்கும் பதில் எழுதி வந்தார்.  பாராட்டு, மரியாதை, முகஸ்துதி, உண்மை என கடிதத் தன்மைக்கு ஏற்ப தலைப்பிட்டு தனித்தனி கோப்புகளில் சேமித்தார். அவருடைய வாழ்வு முழுவதும் பெற்ற ஆயிரக்கணக்கான கடிதங்கள் இன்று அவரின் ‘பிரசிடென்ட் மாளிகை’யில் வைக்கப்பட்டுள்ளன.


*இன்றைய இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிர்லா பிறந்து வளர்ந்த சிறிய கிராமத்தில் இவருக்கு சொத்தாக இருந்தது 2 ஒட்டகங்கள்தான்.   இவற்றை மூலதனமாகக் கொண்டே தன் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பினார். கல்வி கற்காத பிர்லாவின்  உழைப்பும் நம்பிக்கையும்தான் இவரை பிஸினஸ் ராஜாவாக்கியது. 

*நேருவுக்கு வருமான வரியைக் கணக்கிட, ‘ஆனந்த பவன்’ மாளிகை மதிப்பை 36 ஆயிரம் ரூபாய் என்று குறித்தனர். இது நேருவுக்கு தெரிய வந்ததும் அந்தக் குறிப்பில் தன் கையினாலேயே மதிப்புத் தொகையை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மாற்றி எழுதினார்.

*புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸிற்கு தான் எழுதியதிலேயே மிகவும் பிடித்த நாவல் எது தெரியுமா? 1850ம் ஆண்டில் வெளிவந்த ‘டேவிட் காப்பர்ஃபீல்ட்’ என்ற நாவல்தான் அது. 1849-1850ம் ஆண்டு காலங்களில் 20 பகுதிகளாக மாத இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் 165 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சலிக்கவில்லை என்றால் அது சிறந்த படைப்புதானே!

*விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு 1921ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு, ஐன்ஸ்டீன் 16 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த காலம், இடம், பொதுத்தொடர்பு தத்துவத்திற்காகக் கொடுக்கப்படவில்லை. ஐன்ஸ்டீனின் புகைப்பட மின்சார இணைப்புத் தத்துவத்திற்காக வழங்கப்பட்டது.

*இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1940 - 1945) இங்கிலாந்தின் பிரதமராக  இருந்த சர்ச்சிலுக்கு அபார வெற்றி கிட்டியது. காரணம் அவரது தாயார் ஒரு அமெரிக்கர். அதனால் சர்ச்சிலை பாதி அமெரிக்கர் என்றே அழைப்பார்கள். அதன் பிரதிபலனாய் இங்கிலாந்துக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் அமெரிக்காவே இங்கிலாந்திற்கு சப்ளை செய்தது. 1953ம் ஆண்டு தனது வாழ்நாள் இலக்கியப் பணிகளுக்காக நோபல் பரிசும்கூட பெற்றவர் இவர். 

*தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931ம் ஆண்டில் வெளியானபோது, அதில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்தும், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும் பாடல்களை எழுதியவர் வெள்ளைச்சாமி (எ) மதுரை பாஸ்கரதாஸ். படிப்பறிவற்று  சுயமாக பாடலெழுதியவரை ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி அவைக்கவிஞராக அங்கீகரித்ததால் ‘மதுர பாஸ்கரதாஸ்’ என புகழ் பெற்றார்.

*கர்நாடக மாநிலத்தில் பிறந்த கணித மேதை சகுந்தலா தேவி, ஒருசமயம் ஜெர்மனியிலுள்ள மெர்சிடஸ் பென்ஸ் கார் தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றிருந்தார். இவரது திறமையை சோதிக்க நினைத்த நிர்வாகி,  கணினியோடு போட்டி யிட்டு வென்றால், ஒரு பென்ஸ் காரை பரிசளிப்பதாக வாக்களித்தார். கணினி விடை தருவதற்குள், அக்கேள்வி தவறு என்று கூறிய சகுந்தலா, உடனே விடையையும் சொல்லி கணினியைத் தோற்கடித்து, பென்ஸ் காரை வென்றார். மனிதக் கணினி என்ற பெயரோடு 1982ம் ஆண்டு கின்னஸ் நூலிலும் இடம் பெற்றார் இவர்.

*கணிதத்தில் புதுக்கண்டுபிடிப்புகளையும், தத்துவங்களையும் உலகத்திற்குத் தந்த கிரீஸ் நாட்டைச் சேர்ந்த  பிதாகரஸ் (கி.மு 570 - கி.மு 495) கணக்கில் மட்டுமல்ல, குத்துச்சண்டை போடுவதிலும் தீரர்.

*தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லுக்கு தேவையான பண உதவிகளை அவருடைய மாணவி மெபல் ஹப்பர்ட்  வழங்கினார். காது கேளாதவர்களுக்கு என ஒரு பள்ளியை நடத்தி வந்த பெல், அவர்களுக்கு காது கேட்கச் செய்வதற்கான கருவியைக் கண்டறியும் முயற்சியில்தான் 1876ம் ஆண்டு தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.  

*இந்தியாவின் முதல் பேராசிரியர் யார் தெரியுமா? தாதாபாய் நெளரோஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரர்தான். மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில், நெளரோஜி கணிதப் பேராசிரியராக 1853ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

*நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடன்  நாட்டைச் சேர்ந்த ரசாயனத்துறை அறிஞரும்கூட. ‘டைனமைட்’ என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்துப் பெரும் பொருள் ஈட்டி ‘மரண வியாபாரி’ என மக்களால் கூறப்பட்ட இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

*செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக, முதன்முதலில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி டுனன்ட், தொடக்கத்தில் எழுத்தாளராக இருந்தவராவார். பிற்காலத்திலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக எழுதி சமாதானக் காவலராகவும் உயர்ந்தார்.

*நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே, முதல் உலகப்போரில் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.