News
Loading...

சீக்குப் பிடித்த சிவகங்கை நகராட்சி!

சீக்குப் பிடித்த சிவகங்கை நகராட்சி!

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உட்பட பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போர்புரிந்த எண்ணற்ற  தேசபக்தர்கள் வாழ்ந்த மண் சிவகங்கை. “வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை நகரம் இன்றைக்கு, ஊழல் பெருச்சாளிகளின் சீர்கெட்ட நிர்வாகத்தால் சீரழிந்து போயிருக்கிறது” என்று குமுறுகின்றனர் சிவகங்கை மக்கள். 

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க என பெரிய கட்சிகள் போட்டியிட்ட நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ச்சுனன், சேர்மனாக வெற்றிபெற்றார். காரணம்... மார்க்சிஸ்ட் கட்சி மீதான  நல்ல பெயரும், அர்ச்சுனன்  மீதான நல்ல இமேஜும்தான்.  ஆனால், பதவிக்கு வந்தபின், குறுகிய காலத்திலேயே அர்ச்சுனனின் இமேஜ் பஞ்சர் ஆனது.

“பதவிக்கு வந்த கொஞ்ச நாளிலேயே அர்ச்சுனன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள். சைக்கிள் ஸ்டாண்டில் போலி ரசீது அடித்து வசூலித்தார். எல்லா டெண்டர்களிலும் கமிஷன் வாங்க ஆரம்பித்தார். பல லட்சங்களில் பங்களா கட்டினார். அதன் காரணமாக, மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் முடியவில்லை. ஆங்காங்கே குளம்போல் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால், நகரில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. சிவகங்கையே சீக்குப் பிடித்துக்கிடக்கிறது.  ஒப்பந்த அடிப்படையில் 50 துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்துவிட்டு, 100  பேர் என கணக்குக் காட்டுகிறார்கள்.  இவர்களுக்கும் நான்கு மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை;  பி.எஃப். பணம் கட்டவில்லை. அரைகுறையாக ரோடுகள் போடப்படுகின்றன. தெருக்களில் ஹேவர் ப்ளாக் கற்கள் பதித்ததன் மூலம் பெரும் ஆதாயம் பார்த்துவிட்டார்கள்.  ஐந்து ஆண்டுகளில்  குவித்த கோடிகளைப் பாதுகாக்க அ.தி.மு.க-வில் அர்ச்சுனன் ஐக்கியமாகிவிட்டார்’’ என குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார், தி.மு.க-வின் நகரச் செயலாளர் ஆனந்த்.

சீக்குப் பிடித்த சிவகங்கை நகராட்சி!

‘‘2014-ல், போலி பில்களைக் காட்டி 50 லட்சம் ரூபாய் அளவுக்கு நகராட்சியில் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து, நகராட்சியில் உள்ள அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்தனர். பாரதிப் பூங்காவை ஆக்கிரமித்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டினார்கள். ‘கமிஷன்’ அடிப்பதில் குறியாக இருந்ததால், தரமின்றி கட்டப்பட்டு, அது தற்போது  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. சேர்மனை ஆதரித்த சில கவுன்சிலர்கள் நல்ல ஆதாயம் அடைந்தார்கள். பல வார்டுகளில் இன்னும் முழுமையாகக் குடிநீீர் கிடைப்பதில்லை.  பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை. சாலையெங்கும் புழுதி பறக்கிறது. நகரின் நடுவே மிகப்பெரிய தெப்பக்குளம் உட்பட பல நீர்நிலைகள் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டன. அவை, இப்போது, பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன” என நொந்துபோய் சொல்கிறார்கள்  சிவகங்கைவாசிகள்.

சீக்குப் பிடித்த சிவகங்கை நகராட்சி!

குற்றச்சாட்டுக்கள் குறித்து நகராட்சித் தலைவர் அர்ச்சுனனிடம் பேசினோம். “கடந்த ஐந்து ஆண்டுகளில் 70 கூட்டங்கள் நடத்தி,  2,107  தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீரை சேமிக்க 3 நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டினேன். தற்காலிக சுகாதாரப் பணியாளர்களை முறைப்படுத்தி ஆண்டுதோறும் அரசு நிர்ணயிக்கும் ஊதியத்துக்கு அமர்த்தினோம். அவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்தோம். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று சொல்வது தவறான தகவல். தெருவிளக்குகளில் 700 எல்.ஈ.டி பல்புகள் பொருத்தி உள்ளோம். முதல்வர் வழங்கிய ரூ.25 கோடி சிறப்பு நிதியில், ரூ.9 கோடிக்கு சாலைகள் போட்டிருக்கிறோம். ரூ.11 கோடிக்கு இடைக்காட்டூரில் இருந்து வரும் தண்ணீர்க் குழாய்களை மாற்றியுள்ளோம். எல்லா தெருக்களிலும் ஹேவர் ப்ளாக் பதித்து உள்ளோம். பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படத் தொடங்கும்” என்றார் அர்ச்சுனன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.