News
Loading...

மேயர் நாற்காலி யாருக்கு?

மேயர் நாற்காலி யாருக்கு?

தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12. முன்பெல்லாம் மேயர்களுக்கென்று தனியாகத் தேர்தல் நடக்கும். இப்போது கவுன்சிலர்கள் சேர்ந்துதான் மேயரை தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கவுன்சிலர் சீட் கிடைத்த ஒருவருக்குத்தான் மேயர் சான்ஸ் அடிக்கும். அ.தி.மு.க கவுன்சிலர் வேட்பாளர்களில் யாருக்கெல்லாம் மேயர் வாய்ப்பு என்பதில் நடக்கும் மல்லுக்கட்டுப் பற்றிய அலசல் இது..!    

சென்னை

சிட்டிங் மேயரான சைதை துரைசாமிக்கு கவுன்சிலர் சீட் வழங்கப்படவில்லை. அடுத்துக் களத்தில் இருப்பவர்கள் பாலகங்கா, ஜே.சி.டி பிரபாகரன், நீலாங்கரை முனுசாமி ஆகிய மூவரும்தான். பாலகங்கா 2001-ல் நடந்த தேர்தலிலேயே ஸ்டாலினை எதிர்த்து நின்று தோற்றவர். மேயர் கனவு நீண்ட நாள் பெண்டிங்கில் இருக்கிறது. கடந்த முறை ஸ்டாலினை எதிர்த்து நின்று தோற்ற சைதை துரைசாமிக்குத்தான் மேயர் சீட் வழங்கப்பட்டது. அதனால், இந்த முறை ஸ்டாலினை எதிர்த்து தோற்ற ஜே.சி.டி பிரபாகரனுக்கு சான்ஸ் அடிக்கலாம் என்கிறார்கள். நீலாங்கரை முனுசாமி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த சமுதாயத்து ஆதரவைக் குறி வைத்து அவருக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிட்டிங் கவுன்சிலர்களான சண்முகவள்ளி, கண்ணகி பாஸ்கரன், சண்முகப்பிரியா, சுகந்தி அசோக் ஆகியோருக்கும் எந்த கோஷ்டியிலும் சேராத லெட்சுமிக்கும் சீட் கிடைத்துள்ளது. சண்முகவள்ளி நன்கு படித்தவர், அவர் தந்தை ஆரம்பகால கட்சிக்காரர் என்றாலும் அமைச்சர் செல்லூர் ராஜூவை மதிக்காதவர் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் என்கிறார்கள். சண்முகப்பிரியா, ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் என்பதாலும் சொந்த சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதித்தவர் என்பதாலும் சான்ஸ் கம்மி. கண்ணகி பாஸ்கரன் செலவு செய்ய மாட்டாராம். லெட்சுமி, வார்டில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார். அ.தி.மு.க லிஸ்டில் உள்ள ஒரே பிராமண வேட்பாளர் இவர்தான். யாரும் எதிர்பாராத வகையில் இவருக்கு மேயர் லக் அடிக்கும் என்கிறார்கள். மண்டலத் தலைவராக இருந்த சண்முகவள்ளியும் கல்விக்குழுத் தலைவராக இருந்த சுகந்தி அசோக்கும் தன்னை மதிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு சிபாரிசு செய்ய மாட்டார் என்கிறார்கள்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் மேயர் புவனேஸ்வரிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முன்னாள் நெல்லை மேயர் விஜிலா சத்யானந்தின் சகோதரி வெண்ணிலா ஜீவபாரதி புதிதாகக் களமிறங்குறார். 21-வது வார்டில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ராஜசெல்வத்தின் மகள் ஏ.ஆர்.ஆர்.பியூலா சத்யநேசி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருமே சைவப் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 44-வது வார்டில் நிற்கும் டாக்டர் அபாரூபா சுனந்தினி, தேர்தலில் போட்டியிடுவதற்காக  தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார்.

மேயர் நாற்காலி யாருக்கு?

தூத்துக்குடி

60 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் ஏழு தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வார்டு ஆக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 51-வது வார்டில் போட்டியிடும் என்.சின்னத்துரை கட்சியின் இளைஞர், இளம்பெண் பாசறையோட து.செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகளிடம் பரிச்சயமான நபர். மாவட்ட செயலாளர் சி.த.செல்லப் பாண்டியனுக்கு நெருக்கமானவர். இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். இல்லாமல் போனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவராக இருந்தாலும் பொது வார்டில் மூன்று முறை வெற்றி பெற்றும் இப்போது நான்காவது முறையும் போட்டியிடும் ஜெயக்குமாருக்கு இரண்டாவது வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள். 

கோவை 

புதுமுகம் ஷர்மிளாவுக்குத்தான் மேயர் வாய்ப்பு என்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கான்ட்ராக்ட் பணிகளை கவனித்து வரும் சந்திரசேகரின் மனைவிதான் ஷர்மிளா. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கானது என அறிவிக்கப்பட்டபோதே, ஷர்மிளாவுக்கு கவுன்சிலர் சீட்டை பெற்றுத் தந்துள்ளார் வேலுமணி. மாநகராட்சி துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்ட கட்சியின் சீனியர்களும் மேயர் வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். 

திருப்பூர்

மேயர் நாற்காலி யாருக்கு?

கடந்த ஆட்சியில் அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் அமைச்சர் ஆனந்தன். பாலியல் புகாரில் துவங்கி ஏராளமான புகார்கள் அவர் மீது அடுக்கடுக்காய் குவிந்தது. தொடர் புகாரால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர், மீண்டும் அமைச்சரானார். ஆனால் 2016 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெறவில்லை. அவர் மீதான் புகார்கள் அவரது வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதாலேயே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என சொல்லப்பட்டது. கடந்த ஆட்சியில் அமைச்சராக சைரன் வைத்த காரில் வலம் வந்த ஆனந்தன், மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி அமைச்சராகி விட வேண்டும் என்ற கனவு பொய்த்து போன நிலையில், மேயர் பதவிக்கு குறிவைத்து மன்னார்குடி குடும்பம் மூலம் முயற்சிசெய்து, சீட்டும் வாங்கியுள்ளார். தேர்தலில் வென்றால் இவர்தான் மேயர் என்கிறார்கள்.

ஈரோடு

மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஒரு அணியாகவும் அவருக்கு எதிராக ஒரு அணியும் செயல்படுவதால், இரண்டு தரப்புமே மேயர் பதவிக்குக் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறது. கே.வி.ராமலிங்கம் சட்டமன்ற தேர்தலில் தனக்கு உதவிய ராஜ்குமார் என்பவரது மனைவி லீலாவதியை மேயராக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். எதிர் அணியை சேர்ந்தவரும் தற்போதைய துணை மேயருமான கே.சி.பழனிச்சாமி, மேயர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமியை நாடியதாக சொல்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எடப்பாடிதான் சீனியர் அமைச்சர். அவரின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கே.சி.கருப்பணன் இதுவரை இதில் தலையிடவில்லை. அவர் யாருக்கு சிபாரிசு செய்கிறாரோ அவரையே எடப்பாடியும் சொல்வார் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் கருப்பணனின்  கண்ணசைவுக்காகக் காத்திருக்கிறது ஈரோடு மேயர் பதவி.

திருச்சி

மேயர் நாற்காலி யாருக்கு?

சமீபத்தில் அ.தி.மு.க-வில் சேர்ந்த சாருபாலா தொண்டைமானின் பெயர் யாரும் எதிர்பாராத வகையில் கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றது. இதனால் அடுத்த மேயர் சாருபாலாதான் என பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. ‘போலி மருத்துவர்’ சர்ச்சையில் சிக்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகி, வாய்ப்பு இழந்தவர் தமிழரசி. அவரும் கவுன்சிலர் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். சிட்டிங் மேயர் ஜெயாவும், மீண்டும் மேயர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார்.

தஞ்சாவூர்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான அறிவுடை நம்பிக்குத்தான் மேயர் பதவி என அடித்து சொல்கிறார்கள். இரண்டாவது வாய்ப்பு ஏ.ஜி.தங்கப்பனுக்கு இருக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தலைமைவரை நேர்காணலுக்கு போய் வந்தவர் தங்கப்பன். மூன்றாவது வாய்ப்பு, சிட்டிங் மேயரான சாவித்திரி கோபாலுக்கு. பெரும்பாலான சிட்டிங் மேயர்களுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதால் மீண்டும் மேயர் பதவி தனக்குக் கிடைக்கும் என்கிறாராம் சாவித்திரி கோபால்.

வேலூர்

மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்​கிறது. 7 வார்டுகளில் ஆதிதிராவிட பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க வென்றால் இந்த ஏழு வார்டுகளை சேர்ந்த ஒருவருக்குதான் மேயர் பதவி காத்திருக்கிறது. 60-வது வார்டு வேட்பாளர் அமல நிருபா பெயர் பலமாக அடிபடுகிறது. வட்டத் துணைச் செயலாளரான அமல நிருபாவின் கணவர் ஜெயப்பிரகாஷ், அமைச்சர் வீரமணியுடன் நெருக்கம். அவருக்கு அடுத்த இடத்தில் 56-வது வார்டு வேட்பாளர் மாலினி. இந்த ஏழு பேரில் அதிகம் படித்தவர். அந்த வகையில மாலினி ஜெயித்தால் அவரை ‘டிக்’ செய்யவும் வாய்ப்பு உண்டாம். 35-வது வார்டு மகேஸ்வரியும் மேயர் கனவில் வலம் வருகிறார்.

சேலம்

மேயர் நாற்காலி யாருக்கு?

40-வது வார்டில் நிற்கும் உமாராஜூக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் அமைச்சர் தங்கமணியின் பரிந்துரையில் எடப்பாடியிடம் பழக்கம் ஆனவர். 2-வது வாய்ப்பு 14-வது வார்டில் நிற்கும் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் ஐயப்பமணியின் மனைவி ராஜபிரியாவுக்கு. சிட்டிங் மேயர் சவுண்டப்பனும் காய் நகர்த்தி வருகிறார். சட்டசபை தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் தோற்ற சரவணனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

திண்டுக்கல் 

10-வது வார்டில் நிற்கும் தற்போதைய மேயர் மருதராஜின் மகள் பொன்.முத்துவின் பெயர், மேயர் வேட்பாளருக்கு பலமாக அடிபடுகிறது. மாவட்டச் செயலாளராக இருக்கும் மருதராஜ், தனது வாரிசை மேயர் ஆக்கி அரசியல் நடத்தலாம் என பலமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஒருவேளை பொன்.முத்து வெற்றிப் பெறமுடியாமல் போனால் 6-வது வார்டில் நிற்கும் மருதராஜின் மருமகள் நந்தினிதேவியை மேயர் ஆக்குவார். தன் குடும்பத்துக்குள்ளேயே மேயர் பதவி இருக்க வேண்டும் என மருதராஜ் சதுரங்கம் ஆடி வருகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.