News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’னு நம்மாளுங்க சும்மாவா சொல்லி வச்சாங்க? எல்லாம் தெரிஞ்சு தான் பாடி வச்சாங்க. காவிரி டெல்டாவுல எங்கேயாவது கிரிக்கெட் டோர்னமென்ட் நடந்தா, ‘என்னடா இவ்வளவு பெரிய கிரிக்கெட் கிரவுண்டு’ன்னு நினைக்க வேண்டாம்; அது வறண்டு கிடக்கும் காவிரி ஆறாக இருக்கலாம். திடீரென மனைவி மரியாதை தருவதால், நாம் இருப்பது மாமியார் வீடென நினைக்க வேண்டாம்; தீபாவளி நெருங்கி வரலாம். சென்னை கிரீம்ஸ் சாலையில் எலுமிச்சை, பூசணி, பூ, திருநீறுன்னு விக்கிறாங்களே, புதுசா அங்காளம்மன் கோயில் கட்டிட்டாங்களான்னு ஆச்சரியப்பட வேண்டாம்; அங்கு ஏதாவது பெரிய ஹாஸ்பிட்டல் கூட இருக்கலாம். 

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா படைக்கும் நடுவுல போர் நடக்கும் சிரியாவில் கூட உள்ளே நுழைந்து  நாட்டை நடந்தே கடந்து விடலாம். தினந்தோறும் பூக்கள் மலர்வதற்குப் பதிலாக அணுகுண்டுகள் வெடிக்கும் பாலஸ்தீனத்துக்குள் கூட பத்து நாள் எந்தக் கவலையுமின்றி பாதுகாப்பாய் வாழ்ந்து விடலாம். 

இரவு பதினோரு மணிக்கு மேல் நியூயார்க் நகர இருட்டு வீதிகளில் கூட நெஞ்சை நிமிர்த்தி நடைபயணம் போகலாம். ‘இருமுகன்’ லவ்வாகவோ ‘ரெமோ’ நர்ஸாகவோ கொஞ்சம் நரையிட்டு ‘அவ்வை ஷண்முகி’யாகவோ வேடமிட்டு டெல்லி, மும்பை மாநகரங்களில் அதிகாலை நேரங்களில் ரயிலுக்கு நிற்கலாம். கொஞ்சம் தைரியமிருந்தால் தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளில் கர்நாடக பார்டர் வரை சென்று காத்து வாங்கி வரலாம். 

பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில்கூட உள்ளே புகுந்து ‘பாரத் மாதா கி ஜே’ சொல்லி வரலாம். அசட்டுத் துணிச்சலில் மனைவி முன் ‘அம்மாவின் சமையல்தான் அருமை’யென சொல்லிவிடலாம். நெஞ்சை இரும்பாக்கி இலங்கைக் கடற்படையினர் கண்ணுக்குப் படும் தூரத்தில் நின்று கடலில் கொஞ்ச நேரம் மீன்பிடிக்கலாம். பின் விளைவுகளை யோசிக்காமல் அக்கா, தங்கை குழந்தைகளுக்கு பாவாடை சட்டையும் பேன்ட் பனியனும் வாங்கித் தந்து விடலாம். பாம்பு பிரியாணி, பூச்சி பொரியல் என வாழும் பியர் கிறில்ஸ்சுடன் ரெண்டு நாள் தைரியமாக ஊர் சுற்றலாம். 

ஆனால் எந்தப் பக்கமிருந்து எந்த நேரத்தில் எது வந்து தாக்குமென தெரியாமல் சென்னை விமான நிலையத்தில் பத்து நிமிடம் கடத்துவதுதான் மிக பயமாய் இருக்கிறது. ‘(அடி) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு வந்து கொடுக்கும்’ என்பது சென்னை விமான நிலைய மேற்கூரை விஷயத்தில் மட்டும்தான் சரியாக நடக்கிறது.

நம்ம நாட்டுல பணக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை கஷ்டம்! ஒவ்வொரு நாளும் பல வேஷம் போடணும். ஒருநாள் ‘சமூக சேவகன்’னு சொல்லி ஏழை, எளியவர்களுக்கு வேட்டி-சட்டை தரணும். ‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்’னு ஒருத்தன் எதையாவது எதிர்பார்த்து விருது தர்றதுக்கு பாராட்டு விழா நடத்த, கூச்சமே படாம ரொம்ப ரொம்ப எளிமையானவனா ‘இப்ப நான் என்ன செஞ்சுட்டேன்னு இப்படி ஒரு பாராட்டு விழா’ன்னு போய் நிற்கணும். 

அங்காளம்மன் கோயில்ல அன்னதானம் பண்றதுல இருந்து ஏதாவது பள்ளிக்கூடத்துக்கு பென்ச் வாங்கித் தர்றது வரை நன்கொடையாளரா நிரப்பி விடணும். ஏதாவது உப்புமா எழுத்தாளர்கிட்ட மொத்தமா நாலு புத்தகத்தை வாங்கி தானொரு எழுத்தாளருன்னு காட்டிக்கணும். ஓட்டு போட க்யூவுல நிற்கணும். தன்னோட பிறந்த நாளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி நல்லவனா காட்டிக்கணும். பல ஆயிரம் மதிப்புள்ள சட்டை போட்டு வர்றப்ப, ‘புள்ளைக்கு பேரு வைங்க’ன்னு வருவாங்க... பொசுக்குன்னு புள்ளை சூச்சூ போயிட்டா பொறுமையானவனா புன்சிரிப்போடு பல்லைக் காட்டணும். 

நாட்டுக்குள்ள வெள்ளம் தண்ணி வந்தாக்கா, வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு வெள்ளத்துல இறங்கி தனக்கு நல்ல உள்ளம்னு காட்டணும். தொழிலாளர்கள் சம்பாதிச்சுக் கொடுத்த காசுல கொஞ்சத்தை எடுத்து தொழிலாளர் நலனுக்கு செலவு செஞ்சு, தான பிரபுவா உயர்ந்து நிற்கணும். உண்மையாலுமே நாட்டுல பணக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை வேஷம் போடணும்! ஆனா ஏழைக்கு ‘மிடில் கிளாஸ்’ வேஷமும், மிடில் கிளாஸ் மக்களுக்கு ‘பணக்காரன்’ என்கிற வேஷமும் போதுமானதா இருக்கு.    

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.