News
Loading...

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...


நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றதும் பெரிய பெரிய கனவெல்லாம் கண்டார்கள் தூத்துக்குடிக்காரர்கள். அடுத்தடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே மேயர்களாக இருந்துள்ளனர் என்றாலும், மாநகர மக்களின் கனவுகள் இதுவரை நிறைவேறவில்லை. ஒரு காலத்தில் விலைமதிக்க முடியாத முத்துக்களை ஏற்றுமதி செய்த ஊர், தூத்துக்குடி. உப்பு உற்பத்தி, வெற்றிலை, கருப்பட்டி, மீன்பிடித்தல், விவசாயம், தொழிற்சாலைகள் என பல துறைகளிலும் சிறந்து விளங்கியதால், துறைமுகம், விமானநிலையம், நான்குவழிச்சாலை போன்ற வசதிகள் கூடுதலாக கிடைத்தன. தூத்துக்குடி நகராட்சிக்கு, 2008-ல் மாநகராட்சி அந்தஸ்தை கொடுத்தது தி.மு.க அரசு. 

தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி ஆதரவுடன் சத்துணவு ஆயாவான கஸ்தூரிதங்கம் முதல் மேயராக வந்தார். கழிவுநீர்,  மழை நீரை வெளியேற்றுவதற்காக பக்கிள் ஓடைத் திட்டம், குடிநீர் தேவைக்காக நான்காவது பைப்லைன் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தார் அந்த மேயர்.

அதற்குள் அடுத்த  தேர்தல் வந்து 2011-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நர்சரி பள்ளி ஆசிரியையான சசிகலா புஷ்பா மேயர் ஆனார். தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, வி.வி.டி சிக்னல் அருகே மேம்பாலம், 1-வது ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை, 2-வது கேட்டில் மேம்பாலம், நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், நான்காவது பைப்-லைன்திட்டம், கனரக வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கும் வகையில் ட்ரெக்ஸ் டெர்மினல் திட்டம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற இடத்தில் இருந்தார் சசிகலா புஷ்பா. 

ஆனால் தனிநபர் நீதிமன்ற வழக்கு, வியாபாரிகள் எதிர்ப்பு, குறுகலான சாலை போன்ற பல காரணங்களால் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மூன்று வருடங்கள் ஓடிய நிலையில், 2014-ல் சசிகலா புஷ்பாவை எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. மாவட்டச் செயலாளரான எஸ்.பி.சண்முகநாதனின் ஆதரவோடு, சசிகலா புஷ்பாவின் முன்முயற்சியால் மேயர் ஆனார், அந்தோணி கிரேஸி.

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

அந்தோணி கிரேஸி காலத்திலும் ஜெயலலிதாவின் வாக்குறுதித் திட்டங்கள் எதுவும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. அதற்குள் அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. 

ஒரு காலத்தில், தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் போன்று தொப்பி வைத்துக் கொண்டு உலாவந்த எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான ராஜேந்திரனின் மனைவிதான் அந்தோணி கிரேஸி. தூத்துக்குடி ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்த இவரது கணவர் ராஜேந்திரன் மூலம் கருப்பசாமி பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் அறிமுகமானதைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தார் அந்தோணி கிரேஸி. 

தி.மு.க மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இவரும் பதவி என்கிற மேகக் கூட்டத்துக்குள் நுழைந்து கரைந்து போனார்.

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

“அந்தோணி கிரேஸியின் மகன் கவியரசு, நிழல் மேயராக வலம்வந்தார். ஒப்பந்தக்காரர்களிடம் கணக்கு, வழக்கு உள்ளிட்ட எல்லாவிதமான அடிப்படை தேவைகளுக்கும் இவர் மூலமே டீலிங்  நடந்தது. மேயர் நாற்காலியில் அமர்ந்தவுடன், மாநகராட்சியின் வருமானத்தைப் பெருக்குவதற்காக(?) ஸ்டெர்லைட் ஆலைக்கான சொத்துவரியை அதிகரிக்கும்  தீர்மானம் கொண்டு வந்தார் மேயர்.  ஆனால், பலகட்ட ‘பேச்சுவார்த்தை’களுக்குப் பிறகு மற்ற தொழிற்சாலை நிர்வாகம் எப்படிக் கொடுக்கிறதோ அப்படியேக் கொடுத்தால் போதும் என விட்டுக் கொடுத்தார் மேயர்.  புதிதாக மாநகராட்சி எல்லைக்குள் இணைக்கப்பட்ட பல பகுதிகளுக்கு லாரிகள் மூலமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ’மக்களுக்கு கொடுக்கிறோம் என சொல்லிக் கொண்டு வெளியில் தண்ணீரை விற்கிறார்கள்’ என குற்றம்சாட்டி அ.தி.மு.க பிரமுகர்களே போராட்டத்தில் குதித்த சம்பவமும் நடந்தது.

கடந்த காலங்களில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை கிடைத்த தண்ணீர் இப்போது ஒன்பது அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. இந்த நிலையில், தண்ணீர் வரியை மூன்று மடங்காக உயர்த்திவிட்டார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முன்னேறுவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். 

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

தி.மு.க ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம், ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மழைநீர், கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்காக புதிதாக ஒரு கால்வாய்த் திட்டத்தை சுமார் ஏழு கோடியில் கொண்டு வந்தார்கள். ரோட்டின் உயரத்தைவிட உயரமாக கட்டப்பட்டு விட்டதால் டெக்னிக்கல் கோளாறு காரணமாக அடுத்தகட்டத்துக்கு தாண்டாமல் நிற்கிறது.  

“புதிய, பழைய பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் டூவீலர் பார்க்கிங்கில் முறைகேடுகள் நடக்கின்றன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தூத்துக்குடியில் கழிவறை, டூவிலர் ஸ்டாண்ட் உள்ளிட்ட சகலவிதமான மாநகராட்சி ஒப்பந்தங்களை ஒருசில குறிப்பிட்ட நபர்கள்தான் வைத்திருக்கிறார்கள்.

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளத்தின்போது, கடலுக்குச் செல்ல வேண்டிய வெள்ளநீர், ஆங்காங்கே உள்ள ஆக்கிரமிப்புக்களால், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உட்பட மாநகரின் பல பகுதிகளை மூழ்கடித்தது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டிய வேளையில், மாவட்ட கலெக்டர் ரவிகுமாரும் மேயர் அந்தோணி கிரேஸியும் முட்டிக் கொண்டார்கள். 

பாதிக்கப்பட்ட சாதாரண பொது ஜனம் முதல், மேலிட நிர்வாகம் வரையில் அத்தனை தரப்புக்கும் பதில் சொல்லியே சோர்ந்து போன கலெக்டர், ’தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறதா இல்லையா என்று  தெரியவில்லை’ என பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாகக் கொதித்து விட்டார். ‘கடலுக்குப் போகிறத் தண்ணீரை ஊருக்குள் திருப்பிவிட்டது இந்த கலெக்டர்தான்’ என பதில் சொல்லி பத்திரிகைகளுக்கு இரைபோட்டார் மேயர்.  இவர்களின் மல்லுக்கட்டுக்கு நடுவே பல தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் நகருக்குள் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற களத்தில் நின்றனர். 

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

அந்த சமயம் நடத்தப்பட்ட மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில் ’தண்ணீரை வெளியேற்ற செலவு செய்த வகைக்கு ரூ.4 கோடியே 35 லட்சம் என்றும், ப்ளீச்சிங் பவுடர், உபகரணங்கள் வாங்கிய வகையில் ரூ.2 கோடியே 48 லட்சம் என்றும் தீர்மானம் மூலம் அனுமதி வாங்கியது மேயர் தரப்பு. அவசர தேவையைக் கருத்தில்கொண்டு முதலில் நான்கு கோடி பிறகு நாற்பது கோடி என பல கோடிகளை கொட்டியது அரசு. போதிய நிதி இல்லாமல் பெரிய அளவில் எதுவுமே செய்ய முடியாமல் போன மாநகராட்சி நிர்வாகத்துக்கு வெள்ள நிவாரணம் உண்மையில் ஒரு நிவாரணிதான்.   

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை அள்ளும் காண்ட்ராக்டை தென்காசி, தேனி, பெரியகுளம் ஊர்களைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்களே எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் செய்தால்தான் மாநகராட்சிக்கு லாபம் (?) அதிகமாம்.

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

விரிவாகிக் கொண்டே போகிற நகரம் என்பதால் அப்ரூவலுக்காக முயற்சி செய்கிறவர்கள் அதிகம். மாநகராட்சியை அடிக்கடி சுற்றுவார்கள். அப்படி வருகிற பலர், இவர்கள் சொல்கிற கட்டண விகிதத்தைப் பார்த்துக் குழம்பிப்போனார்கள்.  

முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என எதிர்பார்த்தால் அத்தனை தடைகளும் அந்த திட்டங்களுக்குள் கொட்டிக்கிடக்கிறது. என்ன செய்வார்கள் பாவம்? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப கிடைப்பதை மட்டும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலமும் நேரமும் கடந்து போச்சு அவ்வளவுதான்” என்றார் மாநகராட்சி அதிகாரி ஒருவர் 

துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் முக்கிய பெரிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்ந்தெடுத்தது. அந்த லிஸ்டில் தூத்துக்குடியும் இருந்தது.  ஆனால் அது குறித்து அடுத்தடுத்து வெளிவந்த அறிக்கையில் தூத்துக்குடி பெயர் காணாமல் போய்விட்டது. பெயரளவில் மாநகராட்சி என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கும் தூத்துக்குடி இன்னும் அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி நிற்கும் சாதாரண நகரமாகத்தான் உள்ளது. இனி வரப்போகும் மக்கள் பிரதிநிதிகளாவது, நகரத்துக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவார்களா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.