News
Loading...

முன்னேற்றம் இருக்கிறதா?

முன்னேற்றம் இருக்கிறதா?

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி இருக்கிறதா? இதுதான், ‘இன்றைய தமிழகம்’ அறிந்துகொள்ளத் துடிக்கும் விஷயம். 

சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வால் செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோவில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு 19 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் இரண்டு முறை விசிட் அடித்துவிட்டார். எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து போனார்கள். இவர்களில் கில்மானி நுரையீரல் சிகிச்சை மருத்துவர், டாக்டர் அஞ்சன் டிரிக்கா மயக்கவியல் மற்றும் தீவிர தொற்று நோய் மருத்துவர். டாக்டர் நிதிஷ் நாயக், இதயநோய் மருத்துவர். இவற்றை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தாலே, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சாதாரணமானது இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அதை உணர்ந்துதான், தன் அறிக்கைகளை கொஞ்சம் விரிவாக வெளியிட ஆரம்பித்தது அப்போலோ. ‘ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதித்த எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் அறிவுறுத்திய மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்தால் போதும்’ என்றனர். 

அக்டோபர் 6-ம் தேதி வெளியான அப்போலோ அறிக்கையில், தீவிர சிகிச்சை, இதய நோய், நுரையீரல் நோய் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஜெயலலிதா இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, சர்க்கரை நோய் மற்றும் அதிகமான சளிப் பிரச்னை இருப்பது பொதுவில் அனைவரும் அறிந்ததுதான். அதற்குத் தகுந்தாற்போல, சிகிச்சை முறை வரையறுக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி, நெபுலைசர்கள் (Nebulizer), நுரையீரல் சளியை (Lung congestion) அகற்ற மருந்துகளும், தொற்றுகளுக்கான நோய்க்கொல்லி மருந்துகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டன. 

‘‘தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் கண்காணிப்பில் முதலமைச்சர் இருந்து வருகிறார். மேலும், வலி நிவாரணங்களுக்கான, ‘பாஸிவ் பிசியோதெரபி’ (passive physiotherapy) சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அவர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு கண் முழித்தார். அக்டோபர் 8-ம் தேதிக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ‘‘டிரிக்கியடாமி’ (Tracheotomy) என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. அது தொண்டையில் ட்யூப் செலுத்தி, மூச்சுக்குழாய் அடைப்பை சரியாக்கும் அறுவைச் சிகிச்சை. இதையடுத்துத்தான். ‘டிரிக்கியடாமி’ சிகிச்சையை ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆன இரண்டு நாட்களில் ஆரம்பித்திருந்தால், இந்தநேரம் எல்லாம் சரியாகி இருக்கும். ஆனால், அவருடைய உடல்நிலை, வீரியமான மருந்துகளை தாங்கும் நிலையில் அப்போது இல்லை. அதனால்தான், அதை உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் இப்போது செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், அவருக்குச் சிசிக்சை அளிக்கும் டாக்டர்களிடம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நெருக்கமானவர்கள்.

முன்னேற்றம் இருக்கிறதா?

இந்தத் தகவலுக்குப் பிறகுதான், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், மகராஷ்டிராவில் இருந்து கிளம்பி சென்னை வந்தார். பொறுப்பு முதல்வர் நியமனம் மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை பிரித்துக் கொள்வது பற்றிய பேச்சு எழுந்தபோது, ‘‘அம்மா விரைவில் வந்துவிடுவார். அதனால், அதுவரை காத்திருக்கலாம்’’ என கவர்னரிடம் அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

‘‘9-ம் தேதி காலை, ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இதயத்துடிப்பு சீரற்ற முறைக்குப் போனது. அதை, அரை மணிநேரம் போராடி டாக்டர்கள் சரிசெய்தனர். நுரையீரல் சுவாசப் பிரச்னையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்ததால், அவரை மூன்றாவது மாடிக்கு மாற்றலாமா என்று டாக்டர்கள் யோசனை செய்தனர். அங்கே, ஸ்பெஷல் வசதிகளுடன் ஏற்கெனவே அறை தயாராக இருக்கிறது. ஆனால், 9-ம் தேதி நடந்த ரத்தப் பரிசோதனையில், சிறுநீரக கிரியாட்டின் அளவு அதிகமாக இருந்தது. கிட்னியின் செயல்பாடுகளில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அதற்கான ட்ரீட்மென்ட் பாணியை மாற்றியுள்ளனர். சர்க்கரை அதிகமானதால், ஜெயலலிதாவின் முக அமைப்பில் சிறு சிறு மாறுதல்கள். அதற்கு தற்போது, பிசியோதெரப்பி முறையில் சிகிச்சை தரப்படுகிறது. வீரியமான புது மருந்துகள், நவீன சிகிச்சைகளை உள்வாங்குவதில், ஜெயலலிதா உடல்நிலை தடுமாறுகிறது. அதனால், தற்போது நிறைய காலஅவகாசம் எடுத்துக்கொண்டு, பொறுமையாக குறைந்த அளவிலான மருந்துகளையே ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் கொடுக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.