
2011-ல் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் நாற்காலியில் அமர்ந்த அ.தி.மு.க-வின் விஜிலா சத்யானந்த், 2014-ல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் புவனேஸ்வரி மேயர் பதவிக்கு வந்தார். “இந்தப் பொறுப்பு அம்மா என் மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்தது. அதனால் அம்மாவின் பெயருக்கு எந்தவிதக் களங்கமும் ஏற்படாத வகையில் செயல்படுவேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாத மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவேன்” என்று மேயராகப் பொறுப்பேற்றபோது புவனேஸ்வரி உறுதி அளித்தார். அதில், அவர் கடைசிவரை உறுதியோடு இருந்தாரா?
பவர் பாலிட்டிக்ஸ்!
“மேயர் புவனேஸ்வரிக்கும், துணைமேயர் கணேசனுக்கும் இடையே பவர் பாலிட்டிக்ஸ். கணேசன், பொறுப்பு மேயராக இருந்தபோது சாலைப் பணிகளுக்காக ரூ.40 கோடி அனுமதி வழங்கி இருந்தார். அந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி, புவனேஸ்வரி மேயரானதும் பணிகளை நிறுத்தினார். இந்த விவகாரம் அமைச்சர் ஓ.பி.எஸ் வரை கொண்டுசெல்லப்பட்டது. அதன் பிறகுதான், அந்தப் பணிகளை புவனேஸ்வரி அனுமதித்தார். ஆனாலும், இந்த மோதல் தொடர்கிறது. இருவருமே பிறரைத் தூண்டிவிட்டு வழக்குகளைப் போட வைத்து அசிங்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மக்களை மறந்த மேயர்!
தாமிரபரணி ஆற்றில் மாநகராட்சிக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. பெரிய வர்த்தக நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்றவற்றின் எண்ணெய் கழிவுகளும் நேரடியாகக் கலக்கின்றன. அவற்றைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கொக்கிரக்குளம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீருக்கு அல்லாடும் அவலம் இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க மாநகராட்சி மேயரோ, அதிகாரிகளோ ஆர்வம் காட்டவில்லை” என்று நொந்துகொண்டனர் சமூக ஆர்வலர்கள்.

கிடப்பில் திட்டங்கள்
நம்மிடம் பேசிய தி.மு.க நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப், ‘‘பாபநாசம் அணையில் இருந்து நெல்லைக்கு குடிநீர் கொண்டுவர ரூ.272 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்ததோடு சரி. எந்தப் பணியும் நடக்கவில்லை. பாளையங்கோட்டையில் உள்ள இலந்தைக்குளத்தில் ‘தீம் பார்க்’ அமைக்க கடந்த முறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதை முடக்கிப்போட்டு விட்டார்கள். நயினார் குளத்தில் படகுக்குழாம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றார் காட்டமாக.
பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும்
‘‘கட்டடங்களுக்கான அனுமதி, குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல் என எந்த வேலையாக இருந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே நடக்கிறது. அம்மா உணவகத்துக்காக ஆவின் பால் கொள்முதல் செய்ததில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்களின் முறைகேடுகளால் மீண்டும் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கவே அவமானமாக இருக்கிறது’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.
போடாத சாலைக்கு நிதி
நல்ல நிலையில் இருந்த பல சாலைகளைப் புதிதாகப் போட டெண்டர் விடப்பட்டது. சாலைகளைப் போடாமலேயே அதற்கான பணமும் ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளவில்லை. சங்கரபாண்டியன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இது குறித்து வழக்குத் தொடர்ந்தார். உரிய விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மாநகராட்சியில் அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால், இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
கோடிக்கணக்கில் முறைகேடு
நெல்லை மாநகராட்சியின் ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் பிரம்மா, “மாநகராட்சியில் காலிமனைத் தீர்வை, சொத்துவரி, கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் அனுமதி இல்லாமல், ரசீது போடாமல் பணம் மட்டும் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
மேலப்பாளையத்தில் 398 கட்டடங்களுக்கு எந்த ஆவணமும் இல்லாமல் கட்டுமான அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. காலிமனைத் தீர்வை செலுத்துபவர்களிடம் பணம் வசூலித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமல் ரசீது மட்டும் போடப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டுபிடித்து ஆதாரத்துடன் போலீஸில் புகார் செய்தேன். மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தச்சநல்லூரைச் சேர்ந்த பட்டம்மாள் இறந்தது தொடர்பாக அவரது வாரிசுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள், இரு விதமாக சான்று கொடுத்து உள்ளனர். பட்டம்மாள் மறைந்த தினமாக இரண்டு வெவ்வேறு தேதிகளைக் குறிப்பிட்டு உள்ளனர். இரண்டு சான்றுகளிலும் அதிகாரி கையெழுத்துப் போட்டு உள்ளார். பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு கட்டடம் கட்ட 1,405 சதுர அடி, 1,200 சதுர அடி என இரு வேறு பிளான்களுக்கு ஒரே அதிகாரி அனுமதி கொடுத்து இருக்கிறார். பணியின்போது இறந்த துப்புரவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கக் கூட இரக்கமே இல்லாமல் 3 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். பணம் கொடுக்காததால் 202 சுகாதாரப் பணியாளர்களின் காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன’’ என்றார்.
கோபுரத்தை மறைக்கும் கட்டடங்கள்

“நெல்லைக்கு பெருமை சேர்க்கும் நெல்லையப்பர் கோவிலின் ராஜகோபுரம் 9 மீட்டர் உயரம். நான்கு ரதவீதிகளிலும் நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் வகையில், கட்டடம் கட்டக்கூடாது என 1994-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 81 கட்டடங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளன. கட்டடம் கட்டியவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் நெல்லையப்பருக்கே வெளிச்சம்’’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்
பெயர் பலகை ஊழல்
மாநகராட்சியில் ஒவ்வொரு தெருவுக்கும் பெயர் பலகை வைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் தொகையை விடவும் கூடுதலாக ஒப்பந்ததாரருக்குப் பணம் கொடுக்கப்பட்டது. இதனால், மாநகராட்சிக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், இந்த விவகாரம் சர்ச்சையானது. இதில் தலையிட்ட மாவட்ட ஆட்சியர் கருணாகரன், உடனடியாக 294 பெயர்ப்பலகைகளை அகற்ற உத்தரவிட்டதுடன், துறைரீதியான விசாரணைக்கும் பரிந்துரைத்தார்.
ஸ்கேடா ஊழல்!
மேயரும் அதிகாரிகளும் குடிநீர் திட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் பிரம்மா, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ‘‘குடிநீர் விநியோகம் செய்வதைக் கண்காணிக்கவும், பராமரிக்கவும் ‘ஸ்கேடா’ (சூப்பர்வைசிங் கன்ட்ரோல் அண்ட் டேட்டா அக்கொயேஷன்) என்கிற கருவி பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மண்டல அலுவலகங்களும் இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ரூ.3.15 கோடி செலவில் இந்தக் கருவி வாங்கப்பட்டது. ஆனால், வாங்கிய சில வருடங்களிலேயே பழுதடைந்து விட்டது.
எந்த உபயோகமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் கருவியைப் பராமரித்ததாக ஆண்டு தோறும் பல லட்சங்கள் பில் போடப்பட்டு இருக்கிறது. செயல்படாத கருவியைப் பராமரிக்க பல லட்சங்கள் செலவிட்டதாகக் கணக்குக் காட்டி இருக்கிறார்கள். முறைகேடுகள் தொடர்பான பல ஃபைல்கள் காணாமல் போயிருக்கின்றன. அது பற்றி விசாரணை நடத்தவேண்டும்.
அடிபம்பில் முறைகேடு

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல அடிபம்புகள் செயல்படாமல் உள்ளன. ஆனால், 400 அடிபம்புகளை பராமரிப்புச் செய்ததாக பில் போட்டு பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையில் சுமார் 30 லட்சம் மோசடி நடந்துள்ளது. அடிபம்புகளே இல்லாத இடங்களில், அவற்றைச் சரி செய்ததாக பில் போட்டிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகள் முழுவதும் இதுபோன்ற வேலைகள் மட்டுமே நடந்தது” என்று நொந்துகொண்டார், மாநகராட்சியில் பணியாற்றும் நேர்மையான அதிகாரி ஒருவர்.
இதனால்தான் இந்தமுறை புவனேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையா?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.