News
Loading...

டெக்னாலஜி வில்லன்

டெக்னாலஜி வில்லன்

அறிவியல் வளர்ச்சியில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளுக்கும் பஞ்சம் இல்லை. நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட தொலைக்காட்சி, கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் போன், ஐபாட் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் நன்மைகளைத் தாண்டி பல பக்க விளைவுகளையும் உருவாக்கி வருகிறது. அதிலும், குழந்தைகளிடம் இந்த நவீன கருவிகள் அதீதமான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. குழந்தைகள் நல உளவியல் மருத்துவரான முகமது கிஸார் இதுபற்றிப் பேசுகிறார்...

‘‘இன்று ஒரு வயது குழந்தை கூட ஏதோ ஒரு வகையில் இந்த சாதனங்களைப் பயன்படுத்துகிறது. சின்னஞ்சிறு வயதிலேயே இதுபோல தொழில்நுட்ப சாதனங்களின் தொடர்பு ஏற்படுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. 
பிறந்தவுடனேயே மனித மூளை முழு வளர்ச்சியை அடைந்துவிடுவதில்லை. 

கிட்டத்தட்ட 4 வயது வரை வளரும் நிலையில்தான் மூளை உள்ளது. முக்கியமாக ஒன்றரை வயது வரை மனித மூளையை சுற்றியுள்ள கவசமான மண்டை ஓடு மிகவும் மிருதுவாகத்தான் இருக்கும். எனவே, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வலை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குழந்தைகளின் கேட்ஜெட் பயன்பாட்டு நேரம் அதிகரிக்க அதிகரிக்க குழந்தையின் மொழி அறிவுத்திறனில் தாமதம், கல்வியில் செயல்திறன் பாதிப்பு, உடல்பருமன் மற்றும் கவனக்குறைபாடு ஆகிய பிரச்னைகளும் கூடவே அதிகரிக்கறது. எனவே. பயன்பாட்டு நேரத்தை குழந்தைகள் 2 மணிநேரத்துக்கும் மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த 2 மணி நேரத்திலும் உபயோகமான கல்வி மற்றும் தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கல்வி தொடர்பான தகவல்களைப் பெறும்போது பெற்றோரும் உடன் அமர்ந்து குழந்தைகளுடன் இணைந்து கொண்டால் இருவழி தொடர்பு ஏற்பட்டு அது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். 

பெரும்பாலான குழந்தைகள் இந்த சாதனங்களை உபயோகிக்கும்போது தங்களை அறியாமலே நொறுக்குத் தீனிகளை உண்கிறார்கள். அப்போது அவர்களின் கவனம் முழுவதும் சாதனங்களிலேயே இருப்பதால், உடல்ரீதியான செயல்பாடுகள் இல்லாமல் மிக சீக்கிரமே உடல்பருமன் வந்து மற்ற சிக்கல்களுக்கும் ஆளாகிறார்கள். 

இதேபோல தொடர்ந்து மொபைல்போன் போன்ற சாதனங்களை உபயோகிப்பதால் கையில் உள்ள நரம்பு, தசைகள், தசை நார்கள் பாதிக்கப்பட்டு Carpel tunnel syndrome எனும் பாதிப்பும் வரலாம். தொடர்ந்து கண்ணால், இந்த சாதனங்களை உற்று நோக்குவதால் வலிப்பு நோய் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகள் மனித ஆற்றலுக்கும் மீறிய நிகழ்வுகளை காண்பதால் இயல்பான வாழ்க்கையில் உண்மைக்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடுகிறார்கள். 

உதாரணமாக, வாகன பந்தயங்கள் போன்ற நிகழ்வுகளை பார்த்துவிட்டு உண்மையில் அதுபோலவே வாகனம் ஓட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் இயல்பு வாழ்க்கையில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். கற்பனை, செயற்கையான செயல்களையே உண்மையென்று நம்பி, உண்மை நிலையை மறந்து விடுகின்றனர். நுண்ணறிவு திறன் என்பது அறவே மங்கிவிடுகிறது.

நவீன சாதனங்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் சமூகம் சார்ந்த உறவுகள், விளையாட்டுகள் இல்லாமலும் ஆகிவிடுகிறது. அதிகம் தனிமையாகவே இருப்பதால் ஊருடன் ஒட்டி வாழும் இயல்பான குணமும் இன்றி ஆகிவிடுகிறார்கள். 

இதனால் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்தாலும் பிறருடன் சேர்ந்து அதை எதிர்கொள்ள தெரியாமல் திணறுகிறார்கள். இந்த குணம் அதிகமாக அதிகமாக மன அழுத்தம், மனசோர்வு போன்ற மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். இதுபோல் நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளை விவரித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்’’ என்பவர் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

‘‘நவீன சாதனங்களை குழந்தைகள் குறைக்க வேண்டும் என்றால் முதலில் பெற்றோர் குழந்தைகள் முன்பு அதிக நேரம் உபயோகித்துக் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் பெற்றோர்களைப் பார்த்துதான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். பெரியவர்களும் தேவைக்கு மட்டுமே அதை உபயோகித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கல்வி சம்பந்தமான பயனுள்ள விஷயங்களை அவர்கள் பார்க்கும்போது, நாமும் அவர்களுடன் இருந்து அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

முக்கியமாக இணையதளங்களில் படிப்பதற்கும், பள்ளிக்கு சென்று படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதை மூன்று வகைகளில் குழந்தைகள் உள் வாங்குகின்றன. ஒன்று, கண் வழியே பார்த்து அது மூளைக்குப் போய் பிரதிபலிக்கிறது. அடுத்து வாயினால் சொல்வதைக் காதால் கேட்கிறார்கள். மூன்றாவது தொடு உணர்ச்சியினால் கற்கிறார்கள். பார்ப்பது கேட்பது, தொடுவது எல்லாமே மூளைக்குப் போய் அது வெளிப்படுகிறது. 

டிஜிட்டல் திரைகளில் படிக்கும்போது ஒருவழி தகவல் தொடர்பாக மட்டுமே இருப்பதால் மூளை எந்தவித செயலையும் பிரதிபலிப்பதில்லை. தொடர்ந்து மந்தமாகிவிடும். அதனால், குழந்தைகள் நவீன சாதனங்கள் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும்’’ என்கிறார்.

நவீன சாதனங்களுடன் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் சமூகம் சார்ந்த உறவுகள், விளையாட்டுகள் இல்லாமலும் அவர்களுக்கு ஆகிவிடுகிறது. தனிமையில் அதிக நேரத்தை செலவழிப்பதால் ஊருடன் ஒட்டி வாழும் இயல்பான குணமும் இன்றி ஆகிவிடுகிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.