News
Loading...

இணையவெளியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க

இணையவெளியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க

விரல் நுனியில் தொழில் நுட்பம் தரும் வசதிகளை நாம் கொண்டிருக்கிறோம். அவை நம் வர்த்தகத்தின் வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் பெரும் அளவில் மாற்றி உள்ளன. இந்த உலகில் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்களை வர்த்தகத்திற்கென இணைப்பதில், தகவல் தொழில் நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையாகக் கொண்டு செல்வதில், இந்த தொழில் நுட்பம் நமக்கு உதவிடுகிறது.

ஆனால், அதே நேரத்தில், ஏமாற்றும் வழிகளைக் கையாள, ஏமாற்றுபவர்களுக்கு இந்த தொழில் நுட்பம் உதவி வருகிறது. இந்தத் திருடர்களும் இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பல புதிய வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை பல வடிவங்களில், வழிகளில் இருந்தாலும், phishing மற்றும் open wi-fi networks என்ற இரண்டு வழிகள் தான் பெரும்பாலான ஏமாற்று வழிகளாக உள்ளன.

Phishing எனப்படும் திருட்டு வழியின் தொடக்கம், நமக்குப் பழக்கப்பட்ட மின் அஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது இணைப்பு கோப்பு போல நம்மிடம் வருகிறது. அதில் தரப்பட்டுள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்திட நம்மைத் தூண்டுகிறது. கிளிக் செய்தால், நாம் இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறோம். இது பார்ப்பதற்கு பிரபலமான, நம்பிக்கை கொள்ளக் கூடிய நிறுவனத்தின் இணைய தளம் போலத் தோற்றமளிக்கும். ஆனால், அது போலியானது மட்டுமின்றி, ஆபத்தனாதும் கூட. இதில் பயனாளரைப் பதிவு செய்திடத் தூண்டும் வகையில் சில வாக்குறுதிகளை, பரிசுகளைக் காட்டும். 

பயனாளர் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், கிளையின் பெயர், யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைக் கேட்கும். இல்லை எனில், கிளிக் செய்தவுடன், மோசமான ஒரு குறியீடு உங்கள் பிரவுசரில் பதியப்படும். இந்தக் குறியீடு, இதன் பின், நீங்கள் தரும் லாக் இன் பெயர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை, திருடர்களுக்கு அனுப்பி வைக்கும். அவர்கள் உங்களின் வங்கி கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் உள்ள பணத்தை எளிதாக மாற்றி எடுத்துக் கொள்வார்கள். மாற்றப்படும் அக்கவுண்ட்கள் பெரும்பாலும் போலியானவையாக அல்லது தற்காலிகக் கணக்குகளாக இருக்கும்.

இந்த இணையத் திருடர்களிடமிருந்து தப்பிக்க, நம்மைக் காத்துக் கொள்ள கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படுவது நல்லது.
ஏதேனும் ஒரு மின் அஞ்சலில், இணைய முகவரியினைத் தந்து அதில் கிளிக் செய்திடும்படி கேட்டுக் கொண்டால், அதில் கிளிக் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக, அந்த முகவரியை, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து செயல்படுத்தவும்.

அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது முகவரிகளிடமிருந்து லிங்க் அல்லது இணைப்பு கோப்பு வந்தால் அவற்றைச் செயல்படுத்த வேண்டாம். இணைப்பினை அழித்துவிடவும். 

நிறுவன முகவரி, அல்லது இணையத்திற்கான செயலிகளைத் தரும் நிறுவன முகவரி, வங்கி முகவரி என ஏதேனும் தரப்பட்டால், முகவரியின் தொடக்கத்தில் 'பூட்டு' ஐகான் ஒன்று இருப்பதனை உறுதி செய்திடவும். அந்த முகவரியில், “http” என்பதற்குப் பதிலாக, “https” என உள்ளதா எனக் கவனிக்கவும். 
ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுக்கும் செயலிகளை, அவ்வப்போது அப்டேட் செய்திடவும். இவை உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்றால், உடனே இன்ஸ்டால் செய்து, மேம்படுத்தவும்.

வங்கியிலிருந்து அறிக்கைகளைப் பெற்று, அவற்றை அலட்சியப் படுத்தாமல், என்ன என்ன நிதிப் பரிமாற்றங்கள் ஆகியுள்ளன; அவை அனைத்தும் உங்களுக்குத் தெரிந்தே நடைபெற்றுள்ளதா எனக் கண்காணிக்கவும். 
மின் அஞ்சல் வழியாக, உங்களைப் பற்றிய, உங்கள் வங்கி கணக்கு குறித்த தகவல்களை அனுப்புவதைத் தவிர்க்கவும். 

பாப் அப் திரைச் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டாம்; அதே போல, அந்தக் கட்டங்களில், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பதிய வேண்டாம். 
ஏதேனும் ஒரு வங்கியிலிருந்து, அல்லது இணைய தளத்திலிருந்து, அவை கேட்கும் தகவல்களைத் தராவிட்டால், உங்கள் அக்கவுண்ட் தற்காலிகமாக முடக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்ற தகவல்கள் இருந்தால், தகவல்களை அப்டேட் செய்திட வேண்டாம். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தினைத் தொடர்பு கொள்ளவும். 

பிஷ்ஷிங் அஞ்சல்களுடன், மால்வேர் எனப்படும் கெடுதல்களை உண்டாக்கும் அல்லது கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் செயலிகளை அனுப்புவது தற்போது அதிகரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில், இது போன்ற திருட்டுத் தனமான முயற்சிகள் 11,592 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஆண்டு தோறும் 20% அதிகரித்து வருவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாம் பயணத்தில் இருக்கும்போது, வை பி இணைப்புகளில் இணையம் பார்த்துச் செயல்படுவது எளிதான வழியாக இருக்கலாம். ஆனால், அது மிகக் கவனத்துடன் கையாள வேண்டிய ஒன்றாகும். 

இத்தகைய நெட்வொர்க்குகளில் இணைந்துள்ள வேறு ஒரு கம்ப்யூட்டரின் வழியாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தனிநபர் தகவல்களைத் திருடும் வாய்ப்புகள் இதில் அதிகம். எனவே, அத்தகைய வை பி நெட்வொர்க்குகளில் செயலாற்றுகையில், நிதி பரிமாற்ற விபரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற வயர்லெஸ் இணைப்புகள், இணையத் திருடர்களுக்கு எளிதான வாசல்களாகும். எனவே, இவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும்.

எப்போதும் நம் பெர்சனல் தகவல்கள் திருடப்படலாம் என்ற கவனத்துடன் இணைய வெளியில் உலா வருவதுதான் நல்லது. எப்போது, தேவையில்லாமல் நம்மை அச்சுறுத்தி, தகவல்கள் கேட்கப்படுகின்றனவோ, உடனே அதிலிருந்து உங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். இலவசமாகத் தருகிறோம், உடனடியாகப் பணம் ஈட்டலாம், அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு என்றெல்லாம் வரும் அஞ்சல்கள், செய்திகளை மொத்தமாக அழித்துவிடுங்கள். 

இதில் சிக்கிக் கொண்டால், நம் பணத்தை இழப்பதுடன், நிம்மதியையும் இழக்க வேண்டியது வரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.