News
Loading...

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.

உள்ளாட்சி தேர்தலை தடை செய்ய தி.மு.க. ஒருபோதும் விரும்பியதில்லை. தேர்தலில் அ.தி.மு.க. செய்ய முயன்ற அக்கிரமங்களை நீதிமன்றத்தின் மூலம் தி.மு.க. தடுத்து நிறுத்தியிருக்கிறது’’ என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதியும் வரவேற்றிருக்கிறார். ஆனால் அதை சொல்ல அவர்களுக்கு கொஞ்சமும் தகுதியில்லை. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது 2006 உள்ளாட்சியில் நடந்த தில்லுமுல்லுகளே சாட்சி. அப்போது தேர்தல் எப்படி நடந்தது? சின்ன ஃபிளாஷ்பேக். 

சென்னை மாநகராட்சியில் அப்போது 155 வார்டுகள் இருந்தன. 2006 அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றல், வாக்குப் பெட்டிகள் சூறையாடல் என வன்முறைகள் வெடித்ததால் அன்றையத் தினமே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை அவரது வீட்டில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி சந்தித்து முறையிட்டார். ‘தேர்தலில் தி.மு.க-வினர் திட்டமிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போட்டனர். அதனால் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என வழக்கு போட்டது

அ.தி.மு.க. வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்தனர். 115, 145, 147 வார்டுகளில் தி.மு.க.வினரிடம் இருந்து கைப்பற்றிய வாக்குச் சீட்டுகளையும் முத்திரைகளையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார் ஜோதி. 

இந்த வழக்கில் ‘தேர்தலை முழுவதுமாக ரத்து செய்ய இயலாது’ என நீதிபதி முகோபாத்யாயாவும் ‘99 வார்டுகளுக்கு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்’ என நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் மாறுபட்ட தீர்ப்பை 2007 ஜனவரி 12-ம் தேதி வழங்கினார்கள். இதனால் மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா அறிவிக்கப்பட்டு வழக்கை விசாரித்தார். ‘மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்றவர்கள் அதன் பலனை அனுபவிக்கவிடக் கூடாது. புகார்கள் வந்தபோது தனது சுண்டு விரலைக்கூட தேர்தல் ஆணையம் அசைக்கவில்லை. தன்னிடம் வந்த புகார்களை அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டதாக அலட்சியமாக கூறி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் தேர்தல் ஆணையர். ஏதோ ஒரு காரணத்துக்காகத் தனது கடமையை செய்யாமல் இருந்துவிட்டார்’ என தனது தீர்ப்பில் வறுத்தெடுத்தார் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா.  

‘99 வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்’ என நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சொல்லியிருந்த நிலையில் ‘99 வார்டுகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறு தேர்தலை சந்திப்பார்கள்’ என 2007 ஜனவரி 17-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் கருணாநிதி. 

முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் இல்ல திருமணத்தில் பங்கேற்ற கருணாநிதி, ‘‘இப்பொழுதெல்லாம் சில நீதிபதிகள் அளிக்கும் அவசரத் தீர்ப்பு உங்களுக்குத் தெரியும்’’ என பொடி வைத்தார். காலியாக உள்ள இடத்தையும் சேர்த்து 100 வார்டுகளுக்குத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் நீதிமன்ற படியேறிய நிலையில், ‘‘தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என நீதிபதிகள் நினைப்பது சரியல்ல. முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை’’ என அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி 2007 பிப்ரவரி 5-ம் தேதி கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரிந்தது. முதல்வர் அலுவலகத்தில் தபேதாராகப் பணிபுரியும் ஏழுமலையின் இல்லத் திருமணத்தைக் கருணாநிதி நடத்தி வைத்தார். அந்த விழாவில்தான் இப்படி காட்டமாகப் பேசினார் ஆற்காடு வீராசாமி. 

‘‘நீதிபதிகள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களைப்போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். எந்த நீதிபதியையும் குறிப்பிட்டு குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு நீதிபதிகள் நிற்க வேண்டும். முதல்வரை விமர்சிப்பதற்கும் அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பதற்கும் சட்டப்படி அதிகாரம் கிடையாது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைவிட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிக அதிகாரம் படைத்தவர்கள் என நான் எண்ணவில்லை. முதல்வரின் அதிகாரத்தை எல்லாம் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதல்வருக்கு இல்லாத பொறுப்பு உயர்நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டிருக்​கிறதா? உயர்நீதிமன்றம் சட்டப்படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அது சரியல்ல’’ என்றார். அதுமட்டுமா ‘‘நீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்​தாக மாறிவிடக் கூடாது’’ எனவும் கொதித்தார் ஆற்காடு வீராசாமி

‘‘நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் என்னென்ன தவறுகள் நடைபெற்றன என ஒவ்வொரு வார்டுக்கும் காரணம் எழுத வேண்டும். ஆனால், அவர் அப்படி காரணங்களை எழுதினாரா? இல்லையே. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருக்கிறது. எனக்குள்ள கவலை நீதிமன்றங்கள் கட்டப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்பதுதான். இப்படி நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படுமேயானால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்றார் ஆற்்காடு வீராசாமி.  அதன்பிறகு பேசிய கருணாநிதி, ‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதைத்தான் வீராசாமி செய்திருக்கிறார்’’ என்றார்.

ஆற்காடு வீராசாமியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நீதித்துறையில் அரசியல்வாதிகள் தலையிடுவதை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார்கள் வழக்கறிஞர்கள். வீராசாமியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. ‘‘செய்த குற்றங்களை மறைக்க நீதிபதிகளையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்தால், மக்கள் தண்டித்து விடுவார்கள்’’ என ரியாக்‌ஷன் காட்டினார் ஜெயலலிதா. கருணாநிதி சும்மா இருப்பாரா? ‘தனது அரசைக் கண்டித்ததால் நீதிபதி வீட்டுக்குத் தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா’ என பதிலடி கொடுத்தார். வீராசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மலர்களை தூவி வரவேற்றனர். நீதிபதிகள் நடந்து செல்லும் கோர்ட் வளாகப் பாதை முழுவதும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மலர்களைத் தூவினார்கள். இதற்காகக் கோயம்பேட்டில் இருந்து பூக்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. ‘தங்களது தலைவி முதல்வராக இருந்தபோது, அரசு நிகழ்ச்சிகளில் அவர் நடக்கும் பாதையில் மலர்களைத் தூவும்  கலாசாரத்தை செய்தவர்கள் இப்போது உயர் நீதிமன்றத்துக்குள்ளும் கொண்டு வந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் இது மிகவும் அசிங்கமான ஒரு நிகழ்ச்சி. சர்வாதிகார நாடுகளில்கூட நீதிமன்றங்களில் இதுபோன்று நடந்ததாக வரலாறு இல்லை’ என அறிக்கைவிட்டார் வீராசாமி.

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.

நீதிபதிகள் குறித்த விமர்சனத்துக்கு டிராபிக் ராமசாமி சும்மா இருப்பாரா. வழக்கும் போட்டார். ‘நீதிபதிகள் குறித்து அமைச்சர் பேசியிருப்பது வருத்தம் தருகிறது, தேவையற்ற பேச்சு’ என கூறிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், வழக்கை தள்ளுபடி செய்தது. ‘நீதித்துறையை விமர்சித்திருப்பது வேண்டுமென்றே கூறப்பட்ட கருத்துகள். விமர்சனம் என்ற பெயரில் தாக்கக் கூடாது. நீதிபதிகள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என கேட்டிருக்கிறார். நாங்கள் சாதாரண மனிதர்கள்தான். எங்களிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. அமைச்சரின் இந்தப் பேச்சு வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் கோர்ட் அவமதிப்பு வழக்கு என்ற ஆயுதத்தை கையில் எடுக்க விரும்பவில்லை’ என அந்த வழக்கில் சொல்லியிருந்தார் நீதிபதி ஏ.பி.ஷா.

தாங்கள் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு நீதிபதிகளையே எதிர்த்த தி.மு.க-தான் இன்றைக்கு எதிர்க் கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு தடை வாங்கியிருக்கிறது. அன்று நீதிமன்றம் படியேறி போராடிய அ.தி.மு.க. இப்போது நீதிமன்றத்தில் குட்டு வாங்கியிருக்கிறது. காலம் மாறுகிறது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறவே இல்லை. 2006 தேர்தலில் வெறும் 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த காரணமாக இருந்த ஜோதிதான் இப்போது ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க காரணமாக இருந்தார் என்பது ஆச்சரியம். 

‘உள்ளாட்சித் தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு ஒதுக்கவில்லை’ என சொல்லித்தான் உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. இப்போது வழக்கு போட்டது. இந்த வழக்கில் ‘தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது’ என சொல்லி தேர்தலை ரத்து செய்திருக்கிறார் நீதிபதி என்.கிருபாகரன். ‘எஸ்.டி. பிரிவினருக்குப் போதிய வாய்ப்பு வழங்கவில்லை என்பதை ஏற்க முடியாது. தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் தி.மு.க. விவாதித்து, இடஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அதை செய்யவில்லை’ என சொல்லியிருக்கிறது நீதிமன்றம். அதாவது எந்த காரணத்துக்காக தி.மு.க. வழக்கு போட்டதோ அதற்காக தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் தேதி அறிவிப்பு அவசரகதியில் வெளியிடப்பட்டது பற்றியே விவாதிக்கப்பட்டது. அதனால் தேர்தல் தேதி அறிவிப்பாணையை எதிர்த்துக் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது தி.மு.க. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது அடுத்த வேறு ஒரு வழக்கில் ஆஜர் ஆவதற்காக வழக்கறிஞர் ஜோதி நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். வழக்குக்கு சம்பந்தமில்லாத அவர் என்ன நினைத்தாரோ திடீரென எழுந்து, ‘‘மை லார்டு... இந்த வழக்கில் நான் குறுக்கிடலாமா?’’ என நீதிபதி கிருபாகரனைப் பார்த்துக் கேட்டார். அங்கிருந்த தி.மு.க., அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள் ‘‘வழக்குக்கு தொடர்பே இல்லாத ஜோதி ஏன் குறுக்கிடுகிறார்’’ என எதிர்த்தனர்.

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.

ஆனாலும் நீதிபதி கிருபாகரன் ஜோதியைப் பேச அனுமதித்தார். ‘‘தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் - 1994-ன் மூலம் இயற்றப்பட்ட விதிகளின்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகு சிறிது காலஅவகாசம் அளித்து பிரிவு 24(1)-ன்படி வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடவேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு, இடஒதுக்கீடு தொடர்பாக தனிப்பட்ட முறையில் சட்டத்தை போடாமல் விதிகளை போட்டிருக்கிறார்கள். இந்த விதிகளுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா? அதற்கான ஆதாரத்தை அரசு காட்ட முடியுமா? தொகுதி சீரமைப்பு, இடஒதுக்கீடு எல்லாம் அரசு செய்ய வேண்டியது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் செய்திருப்பது சட்டப்படி செல்லாது’’ என ஜோதி சொல்லிக் கொண்டே போனார். இடையில் குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்றார். அதற்குப் பதில் அளித்த ஜோதி, ‘‘நீங்கள் தவறு செய்துவிட்டு அதை நிவர்த்தி செய்துகொள்ள ‘நீதிமன்றம் தலையிட முடியாது’ என்கிற காரணத்தைச் சொல்ல முடியாது’’ என்றார். ஒரு கட்டத்தில் ‘‘உள்ளாட்சி பதவியிடங்களுக்கான காலம் அக்டோபர் 24-ம் தேதியோடு முடிவடைகிறது’’ என காரணம் சொன்னார் தேர்தல் ஆணைய வழக்கறிஞர். ‘‘தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலண்டரே இல்லையா? அப்படியே இருந்தாலும் அதில் அக்டோபர் மாதம் இல்லாமல் போய்விட்டதா? பதவிக் காலம் எப்போது முடியும் என்பது தெரியும். அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே பணியைத் தொடங்கியிருக்கலாமே. அவர்களை யார் தடுத்தது?’’ என ஜோதி சொல்லிக் கொண்டே போக... வழக்கின் திசை மாறியது. அதன்பிறகு சட்டப் பாயின்டுகளை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவும் ஜோதி சமர்ப்பித்தார்.

‘பஞ்சாயத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் தேதி வெளியிடப்படவில்லை. அதனால் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது. தேர்தல் தேதியை ரத்து செய்கிறேன்’ என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், ‘புதிய அட்டவணையை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் பிறப்பிக்கவேண்டும். உள்ளாட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்.’ என உத்தரவு போட்டிருக்கிறார்.

மாநில தேர்தல் ஆணையரை கவர்னர்தான் நியமிக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு சமமான பதவி அது. ஆனால், நீதியை நிலைநாட்ட தவறிவிட்டார் தேர்தல் ஆணையர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.