News
Loading...

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘செப்டம்பர் 22-ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் 3-ம் தேதிவரை, ஜெயலலிதாவின் உடல்நிலையை மையமாக வைத்தே பரபரப்பாக இருந்தது அப்போலோ.  அக்டோபர் 3-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அப்போலோவுக்கு வந்துவிட்டுப்போன பிறகு, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அடுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் வரிசையாக வந்தனர். அதன்பிறகு,  வைகோவும்  ஜி.ராம கிருஷ்ணன், ராகுல் காந்தி, அன்புமணி, ஜி.கே.வாசன் என அடுத்தடுத்து வந்தார்கள்.  அப்போலோவில் ஆஜர் போடாதது விஜயகாந்த் டீம் மட்டும்தான். அரசியல் நாகரிகம் கருதி எதிர்க் கட்சித் தலைவர்கள் வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.  ஆனால், அப்போலோ வாசலில் வைத்து, அவர்கள் கொடுக்கும் பேட்டிகளைப் படித்தால் பல விஷயங்கள் புரியவரும்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘கொஞ்சம் விவரமாகச் சொல்லும்?’’

‘‘எதிர்க் கட்சித் தலைவர்களில், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசியது மிக முக்கியமானது. வைகோ தனது பேட்டியில், ‘காவிரி விவகாரத்தில், சகோதரி ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்திப் பல  வெற்றிகளைத் தேடித் தந்தார். அவர் இப்போது நலமுடன் இருந்திருந்தால், காவிரி விவகாரத்தில் முழுமையான வெற்றி தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும்’ என்றார். மேலும், அவரிடம், தமிழகத்துக்குத் துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் நியமிப்பது பற்றிக் கேட்டபோது, ‘கருணாநிதி 45 நாட்கள் மருத்துவ​மனையில் இருந்தார். அப்போது இதைக் கேட்டீர்களா? தமிழகத்துக்கு தற்போது துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் நியமனம் எல்லாம் தேவை இல்லை’ என்று பொட்டில் அடித்தது மாதிரி சொன்னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இவற்றை எல்லாம் வழிமொழி​வதுபோல்தான் அறிக்கை கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது பேட்டியில், ‘கவர்னர் ஆட்சியைக் கொண்டுவரும் அளவுக்குத் தமிழகத்தில் நிலைமை இல்லை. மத்திய அரசு அப்படிப்பட்ட திட்டத்தோடு செயல்பட்டால், நாங்கள் அனைவரும் அ.தி.மு.க-வின் பக்கம் இருப்போம்’ என்று குறிப்பிட்டார்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் பக்கம் சாயவேண்டிய காரணம் என்ன?’’

‘‘மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களில் திருமாவளவன் மட்டும்தான் தி.மு.க-வோடு நெருக்கமாக இருந்தவர். அவரைத் தவிர்த்து, வைகோவுக்கும் ஜி.ராமகிருஷ்ணனுக்கும் தி.மு.க-வைவிட அ.தி.மு.க-வோடுதான் நெருக்கம் அதிகம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அ.தி.மு.க பாசம் பற்றி சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஜெயலலிதாவின் உடல்நிலையையொட்டி, தடுமாறிப்போய் இருக்கும் தமிழக அரசியலில், தி.மு.க பலம் பெற்றுவிடக்கூடாது என்பதில் இவர்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘ம்ம்ம்... தி.மு.க-வின் ரியாக்‌ஷன் என்ன?’’

‘‘தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகள், குறிப்பாகத் தங்களுக்கு எதிர் அணியில் இருக்கும் கட்சிகள், அப்போலோவை மையமாக வைத்து ஒன்று சேர்வதை தி.மு.க-வும் அறிந்தே உள்ளது. அது உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக, தி.மு.க-வுக்கு எதிராக முடியும் என்பதையும் உணர்ந்தே உள்ளனர். எதிர்க் கட்சிகளின் அப்போலோ அணிவகுப்பை, மரியாதை நிமித்தம் என்று எடுத்துக்கொண்டாலும்,  அரசியல் என்று எடுத்துக்கொண்டாலும் அதையும் சமாளித்துத்தான் ஆக வேண்டும்; வேறு வழியில்லை என்று களத்தில் இறங்கத் துணிந்தது தி.மு.க. அதன்பிறகே, பொன்முடி மற்றும் துரைமுருகனுடன் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ம் தேதி இரவு அப்போலோ வந்தார்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘ராகுல் காந்தியின் வருகை தி.மு.க-வை ஜெர்க் ஆக வைத்துவிட்டதே?”  

‘‘ராகுல் காந்தியின் அப்போலோ வருகை ஹாட் டாபிக் மட்டுமல்ல. அது டெல்லி நாடாளுமன்ற அரசியலையும் அதிரவைத்துள்ளது.  ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி-யின் முகத்தில் கரியைப் பூசி உள்ளது. ராகுல் காந்தி தன்னுடைய அரசியல் வாழ்வில், புத்திசாலித்​தனமாக எடுத்துவைத்த முதல் அடி, அவர் ஜெயலலிதாவை பார்க்க அப்போலோ வந்ததுதான் என்கின்றனர் டெல்லி வாலாக்கள்.’’ 

‘‘இதற்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘ஆம். ராகுலின் வருகைக்கு முதலில் தூபம் போட்டவர்கள் என்று சுப்பிரமணியன் சுவாமியும், பிரதமர் நரேந்திர மோடியும்தான். எப்போதும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் வைக்காத சுப்பிரமணியன் சுவாமி, ட்விட்டரில் தனது கருத்துக்களைப் பதிவு செய்வார். அதை யாரும் கண்டுகொள்ள​மாட்டார்கள். அதுபற்றிக் கேள்வி எழுப்பினாலும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லி, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள் கழன்று கொள்வார்கள். ஆனால், இந்த முறை நடந்தவை எல்லாம் அந்த ரகம் அல்ல. ‘ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் குணமடைந்து வர நீண்ட நாளாகும். அதனால், தமிழகத்தில் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்’ என்று ஆரம்பத்தில், ட்விட்டரில் பதிவிட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சுவாமி, அதன்பிறகு, அதிகாரப்பூர்வமாக, பி.ஜே.பி எம்.பி என்று போட்ட லெட்டர்பேடில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதமும் எழுதினார். அது தமிழகத்திலும் அ.தி.மு.க-வுக்கு உள்ளேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைக் கச்சிதமாகப் பற்றிக் கொண்ட திருநாவுக்கரசர், ராகுலின் கவனத்துக்கு நிலைமையை துல்லியமாகக் கொண்டு சென்றார். அதோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது, அ.தி.மு.க எம்.பி-க்களை பிரதமர் மோடி சந்திக்காமல் திருப்பி அனுப்பிய விவகாரத்தையும் சேர்த்துச் சொல்லி, பி.ஜே.பி - அ.தி.மு.க உறவில் பெரிய விரிசல் விழுந்திருப்பதை ராகுலிடம் விளக்கினார் திருநாவுக்கரசர். இந்த அத்தனை விவகாரங்களுக்கும் பின்னணியில் ப.சிதம்பரமும் இருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘காங்கிரஸுக்கு அ.தி.மு.க-வின் தயவு அவ்வளவு தேவைப்படுகிறதா?’’

‘‘மக்களவை, மாநிலங்கள் அவை சேர்த்து சுளையாக 50 எம்.பி-க்கள் வேறு எங்கு கிடைப்பார்கள்? ‘ இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இத்தனை எம்.பி-க்கள் கிடைக்க மாட்டார்கள். இவர்களின் ஆதரவு முழுமையாக இருந்தால், எந்த விவகாரத்திலும் நாடாளுமன்றத்தை அதிரவைக்கலாம். அதோடு தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒரு வலுவான பிடிமானத்தை உருவாக்கலாம். அதோடு, மோடி அரசாங்கத்தின் முகத்தில் கரியைப் பூசியதுபோலவும் இருக்கும்’ என்பதுதான் ராகுல் காந்தியின் இந்த விசிட்டுக்குக் காரணம். இனிமேல், மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசாங்கம் வேறு எந்த மாநிலத்தையும் 356, கவர்னர் ஆட்சி என்றெல்லாம் அச்சுறுத்த முடியாது. அப்படிச் செய்தால், அங்கு காங்கிரஸ் போய் அரண் அமைக்கும் என்பதற்கான எச்சரிக்கையும் ராகுலின் விசிட்டில் இருக்கிறது. அதனால்தான், அப்போலோ விசிட் முடித்து காரில் வெளியே வந்த ராகுல், அவரே காரை நிறுத்தச் சொல்லி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அதில் ராகுலின் முதல் வார்த்தையே, ‘ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு’ என்பதுதான்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘ராகுல் ஏன் கருணாநிதியைப் பார்க்கவில்லை?”

‘‘பொதுவாகவே கருணாநிதியை ராகுலுக்கு பிடிக்காது. அவர் தமிழகம் வரும்போது கருணாநிதியை சந்தித்தது இல்லை. த.மா.கா-வையும் காங்கிரஸையும் ஒரே கூட்டணியில் வைத்துக்கொள்ள தி.மு.க. விரும்பியதையும் ராகுல் ரசிக்கவில்லை.”

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘திடீர் சுறுசுறுப்பு அடைந்துள்ளார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘இப்போது இருக்கும் நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதனால், துணை முதலமைச்சர் அல்லது பொறுப்பு முதலமைச்சர் என்று யாரையாவது நியமனம் செய்யுங்கள்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளாராம். இதைத்தொடர்ந்துதான் அவசர அவசரமாக தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், கவர்னரைச் சந்தித்தார். அவர் சொன்னது கவர்னருக்கு திருப்தி தரவில்லையாம். அதனால்தான் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தலைமைச் செயலாளர் போனார். ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், ‘அம்மா குணமடைந்து விரைவில் வந்துவிடுவார். அதுவரை, துணை முதலமைச்சரோ அல்லது பொறுப்பு முதலமைச்சரோ தேவை இல்லை’ என்று சொன்னார்களாம். ‘மத்திய அரசிடம் உங்கள் கருத்தை அனுப்புகிறேன்’ என்று மட்டும் சொன்னாராம் கவர்னர்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘ஓஹோ!”

‘‘சுப்பிரமணியன் சுவாமியின் வலியுறுத்தல், ராகுல் காந்தியின் வருகை ஆகியவை பி.ஜே.பி-யை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் உள்ளிட்டோரும், சசிகலாவின் ஆலோசனைப்படித்தான்  கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். மூத்த அமைச்சர்களின் பதிலும், தமிழக அதிகாரிகளின் மௌனமும், கவர்னருக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘நடுவே, ஜெ. உயில் விவகாரம் ஒன்று கசிந்ததே?’’

அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘அதெல்லாம் அப்பட்டமான வதந்தி. ஜெயலலிதா உயில் என்று இதுவரை எதையும் எழுதவில்லை. ஏற்கெனவே 1996-காலகட்டத்தில், ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முயற்சியில் ஜெயலலிதா இருந்தார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கு என்று வந்தபிறகு, அந்த முயற்சி தள்ளிப்போனது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவர் பெயரில்தான் உள்ளன. அவற்றை எல்லாம், கவனித்துக்கொள்பவர், முதலமைச்சரின் செயலாளர்களில் ஒருவரான வெங்கடரமணன்தான்’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.