News
Loading...

இந்த மணல் கொள்ளையை தடுத்தால்தான் ஆற்றில் தண்ணீர் நிற்கும்!

இந்த மணல் கொள்ளையை தடுத்தால்தான் ஆற்றில் தண்ணீர் நிற்கும்!

சென்னையில் இருந்து வெளிவரும் ‘‘டி.டி.நெக்ஸ்ட்’’ ஆங்கில பத்திரிகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுவந்த ஒரு செய்தியும், இருபடங்களும் எல்லோருடைய நெஞ்சங்களையும் பதறவைத்தது. காவிரியில் தண்ணீர் இல்லை, ஏற்கனவே குறுவை சாகுபடியை ஐந்து ஆண்டுகளாக இழந்துவிட்டோம். இப்போது சம்பாசாகுபடி செய்யமுடியுமா?, தண்ணீர் வரும் என்று தொடங்கப்பட்ட சம்பாசாகுபடி பயிர்களெல்லாம் கருகிக்கொண்டிருக்கிறதே?, வானம் தன் கதவை திறந்து வடகிழக்கு பருவமழையைப் பொழியாதா? என்று விவசாயிகளெல்லாம் வானத்தைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், மணல் கொள்ளையர்களோ, வடகிழக்கு பருவமழை தாமதமாக வராதா?, பொய்த்துவிடாதா? என்று வானத்தைப்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ‘‘டி.டி.நெக்ஸ்ட்’’ பத்திரிகை காவிரி ஆற்றில் விடியவிடிய நடக்கும் மணல் கொள்ளைப்பற்றிய ஒரு விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையர்களால் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் இருந்து, ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக லாரிகளில் மணல் அள்ளும் படமும், வரிசையாக காவிரி ஆற்றின் கரையில் மணல் எடுப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற லாரிகளின் படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

3 யூனிட் காவிரி ஆற்று மணல் ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டு, கேரளாவில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறதாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘‘தோட்டக்காவல்காரனும், கொள்ளைக்காரனும் கைகோர்த்துவிட்டால், விடிய, விடிய கொள்ளையடிக்கலாம்’’ என்பார்கள். அதேநிலைதான் தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆற்றுபடுகைகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. மணல் கொள்ளையை தடுக்கவேண்டிய அரசுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் மணல் கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்திருப்பதால், விடிய விடிய கொள்ளை நடக்கிறது. இவ்வளவுக்கும் கொள்ளையடிக்கப்படும் மணல்களையெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு கணக்கில்லாமல் கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மணிக்குமார் ஒரு தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தார். உரிய லைசென்ஸ் பெறாமல், மணலை, தமிழ்நாட்டின் எல்லையைத்தாண்டி அடுத்த மாநிலங்களுக்கு கொண்டுசெல்லக்கூடாது. தொழில்துறை செயலாளரும், போலீஸ் டைரக்ட் ஜெனரலும் இதுகுறித்து அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். மணல் கொள்ளையர்களோடு அரசு அதிகாரிகள் கைகோர்த்து நின்று அவர்களுக்கு உதவியாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அண்டை மாநிலமான கேரளாவில் ஆறுகளும், மணல் வளமும் அதிகமாக இருந்தாலும் மணல் எடுப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மணலை வாங்குவதற்கு வாசலை திறந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு கொண்டுவரும் மணலுக்கு இது ‘‘தாமிரபரணி மணல், கரூர் மணல், பாலாற்று மணல், காவிரி ஆற்று மணல்’’ என காய்கறி கூடையில் விலைப்பட்டியல் உள்ளதைப்போல, விலைப்பட்டியல் வைத்திருக்கிறார்கள். 

பொதுவாக நீதிமன்ற உத்தரவு அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றப்படவேண்டும். ஆனால், மணல்கொள்ளை விஷயத்தில் மட்டும் அரசும், நீதிமன்றங்களும் கடுமையான உத்தரவை பிறப்பித்தாலும், மணல் கொள்ளையர்கள் அதை கொஞ்சமும் பொருட்படுத்திக்கொள்வதே இல்லை. இவ்வளவுக்கும், அரசு அனுமதிபெற்று நடத்தப்படும் குவாரிகளில்கூட ‘புல்டோசர்’ போன்ற கனரக வாகனங்களை மணல் எடுக்க பயன்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மணல்கொள்ளை என்ற பெயரால், இப்போது ஆறுகளும், ஏரிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இங்கெல்லாம் ஆழமாக தோண்டி அடி மணல் வரை எடுப்பதால், மழைக்காலத்தில் ஓடிவரும் தண்ணீர் வேகமாகப்போய் கடலில் கலந்து வீணாகிவிடுகிறது. உடனடியாக அனைத்து ஆறுகளிலும் மணல்கொள்ளை நடப்பதை தடுக்க அரசுத்துறைகள் துரிதமாக முடுக்கிவிடப்படவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.