News
Loading...

இந்தியாவில் கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர்

இந்தியாவில் கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர்

கூகுள் தன் இசைக் கடையை இந்திய இணையத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் நாம் விரும்பும் பாடல்களை, கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடல்களை, அவற்றைப் பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், எழுதியவர்கள், பாடப்படும் சூழ்நிலை என்ற பல வகைகளில் தேடி கண்டறிந்து பெறலாம். இணையத்தில் கேட்டும் ரசிக்கலாம். இதன் தள முகவரி https://play.google.com/music/listen?authuser#/now.

கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் முதன் முதலாக, அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்தியா வருவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது. தற்போது அனைத்து இணைய நிறுவனங்களும், இந்தியா மீது கண் வைத்து வருவதால், கூகுள் மிக வேகமாக இந்தியாவில் இதனைச் செயல்படுத்தியுள்ளது. 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், இணையத்தில் 30 கோடி பேர் உள்ளனர். இந்தியாவில், சீனா போல, கூகுள் சில விஷயங்களில் தனிமைப்படுத்தப்படவில்லை. 

கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் இந்தியாவில் அமைக்கப்பட இருக்கிறது என்ற தகவல் ஜூலை மாதத்திலேயே கசிந்து வந்தது. தற்போது இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வர்த்தகத்திற்குத் தயாராய் உள்ளது. பாடல் ஒன்றை ரூ. 15 செலுத்தி தரவிறக்கம் செய்திடலாம். ஆல்பம் என்ற வகையில் பாடல் தொகுப்புகள் ரூ. 70 முதல் ரூ. 200 வரையில் கிடைக்கின்றன. இந்திய மாநில மொழிப் பாடல் தொகுப்புகள் மட்டுமின்றி, பன்னாட்டளவிலான பாடல்களும் கிடைக்கின்றன. 

இசைப் பிரியர்களுக்கு, Top Songs, New Releases, Top Albums, Best of Bollywood, Devotional & Spiritual, Indian Pop Hits, Recommended for You, International Music, Tamil, Telugu, Punjabi Pop, Ghazals & Sufi, Indian Classical என்ற வகையில் பாடல்கள் தரப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென தனியாகவும் பாடல்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. கஜல் மற்றும் சுபி எனப் பிற பிரிவுகளிலும் பாடல்கள் உள்ளன. 

ஆனால், இன்னும் இசைப் பாடல் ஒலிக்க, ரேடியோ மற்றும் ஒரு குடும்பத்திற்கான திட்டம் ஆகியவற்றை கூகுள் தரவில்லை. வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். பயனாளர் ஒருவர் தன் பாடல்களை, தனக்குப் பிடித்த பாடல்களை, அதிக பட்சம் 50,000 என்ற எண்ணிக்கையில் அப்லோட் செய்து இந்த தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். குரோம் பிரவுசர் வழியாக இதனை மேற்கொள்ளலாம். பின்னர், தேவைப்படுகையில் தங்கள் போன்களின் வழியாகக் கேட்டுக் கொள்ளலாம். 

இதன் மூலம், கூகுள் ஆஸ்திரேலியாவின் Guvara, ஆப்பிள் மியூசிக், கானா, சாவன் மற்றும் விங்க் மியூசிக் (Apple Music, Gaana, Saavn, மற்றும் Wynk Music) ஆகிய இசைத் தளங்களுடன் போட்டியில் இறங்கியுள்ளது. இவற்றில் கானா, சாவன் ஆகியவை இந்திய மியூசிக் ஸ்டோர் தளங்களாகும். ஏற்கனவே இயங்கும் இவை நல்ல வருமானம் பார்த்து வருகின்றன. சாவன் தளத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 99, ஆண்டுக்கு ரூ.999 செலுத்தி, ஐந்து மொபைல் சாதனங்களில் அளவற்ற பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவசமாக இணையத்தில் வைத்தே பாடல்களைக் கேட்கும் வசதியையும் சாவன் தருகிறது. கானா தளமும் இதே வகையில் தன் தளத்தை இயக்குகிறது. இரண்டும் ரேடியோ ஸ்டேஷன்களையும் இயக்குகின்றன. ஒலி பரப்பப்படும் பாடல்களில், தேவைப்படும் பாடல்களை தேடி எடுத்துக் கேட்கலாம். 

ஆனாலும், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்துவோர், இந்திய ஜனத்தொகையில் 10% மட்டுமே என்ற கோணத்தில் பார்க்கையில், இத்தகைய விற்பனை தளங்களின் வர்த்தகம், இந்தியா போன்ற அதிக மக்கள் வாழும் நாட்டில் குறைவாகவே இருக்கும். முன்பு, மொபைல் சேவை செய்திடும் நிறுவனங்கள் வழியாக, வாங்கும் பொருட்களுக்குப் பணம் செலுத்தும் முறையை கூகுள் கொண்டு வந்தது. இது இன்னும் கூகுள் பிளே மியுசிக் ஸ்டோர் விற்பனையில் இணைக்கப்படவில்லை. எனினும், இதனை விரைவில் கூகுள் இணைக்கும் என்று அறிவித்துள்ளது. 

போட்டியில் தாமதமாக இறங்கினாலும், அனைத்து சிறப்பம்சங்களையும் கூகுள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூகுள் நிறுவனத்திற்கு சாதகமான ஒன்றும் இதில் உள்ளது. அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களிலும், இதற்கான Play Music டூல் பதியப்பட்டுத் தரப்படுகிறது. மியூசிக் பிளே ஸ்டோர் பயன்படுத்த விரும்புபவர்கள், இதற்கென புதியதாக அப்ளிகேஷன் எதனையும் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. 

ஆண்ட்ராய்ட் பதிக்கப்பட்ட மொபைல் போன்களே அதிகமாக இந்தியாவில் இயங்குவதால், இசைப் பாடல் சார்ந்து, பிளே மியூசிக் அப்ளிகேஷன் தான் பயனாளர்களின் முதல் தேர்வாக அமையும் என கூகுள் எதிர்பார்க்கிறது. கூகுள் பிளே வவுச்சர்கள் மூலம் முன் கூட்டியே பணம் செலுத்திப் பெறும் வசதியை கூகுள் தருவதால், இசைப்பாடல் பெற, ஒருவர் கிரெடிட் கார்ட் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியதில்லை. 

இதனைச் சோதனை செய்து பார்த்திட விரும்புபவர்கள், தங்கள் ஆண்ட்ராய்ட் போனில், பிளே மியூசிக் வழியாக செயல்படுத்திப் பார்க்கலாம். அல்லது இணைய தளம் சென்றும் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.