News
Loading...

உலகில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்கு

உலகில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்கு

உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டி விலங்கு எதுவென நினைக்கிறீர்கள்? யானை, ஆமை, புலி, நட்சத்திர ஆமை... ம்ஹும்! இவற்றை சாய்ஸில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நம்பர் 1 இடத்தில் இருப்பது இவை எதுவுமல்ல. எறும்புத்தின்னிகளே உலகில் அதிகம் வேட்டையாடப்பட்டு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிற பாலூட்டி விலங்குகளாகும். 

எதற்காக? ஏன்? என கேள்விகள் எழுகின்றனவா? விரிவாகக் காண்போம் வாருங்கள்... ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்கு எறும்புத்தின்னியாகும்.  

மனிடே (Manidae) குடும்பத்தைச் சேர்ந்த இவற்றில் மொத்தம் 8 வகைகள் உள்ளன. ஆசியாவில் நான்கும், ஆப்ரிக்காவில் நான்கு வகைகளும் வாழ்கின்றன.  இவை 30 முதல் 100 செ.மீ நீளம் வரை வளரக்கூடியன. ‘பாங்கொலின்’ என்ற ஆங்கிலப் பெயரானது, மலாய் மொழியின் ‘பென்க்கல்லிங்’ என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். 

நார்ச்சத்து கட்டமைப்பு புரதங்களில் ஒன்றான கெராட்டின் (மனிதர்களின் விரல் நகங்கள் வளர உதவுவது) மூலம் உருவான செதில்கள்தான் எறும்புத்தின்னிகளின் கவசம், கேடயம் எல்லாமே. திக் திடுக் ஆபத்துகளில் சட்டென பந்துபோல சுருண்டு, செதில்களால் தம்மை மறைத்து, எறும்புத்தின்னிகள் சமர்த்தாய் தப்பித்துக்கொண்டு விடுகின்றன. சிறிய கால்களும் கூர்மையான நகங்களும் நீண்டநாக்கும் எறும்பு வளையைத் தோண்டி சாப்பிட உதவுகின்றன.  

எறும்புத்தின்னியின் பாதுகாப்புக் கவசமே அதன் உயிருக்கு உலை வைத்துவிட்டது. பல நாடுகளில் தடைகள் இருந்தாலும் எறும்புத்தின்னிகளின்  செதில்கள் சீனா, வியட்நாம் நாடுகளில்  ஆண்மை விருத்தி மருந்துப்பொருள் என்பதால் அதிவேகமாக வேட்டையாடி கடத்தப்படுகின்றன. 

எறும்புத்தின்னிகளை வேட்டையாட உலகளவிலான தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘‘எறும்புத்தின்னிகள் மனிதர்களின் தாக்குதலைச் சமாளித்து வாழ இது போன்ற செயல்பாடுகள் உதவும்’’ என ஆதங்கமாகப் பேசுகிறார் ‘வைல்ட்லைஃப் கன்சர்வேஷன் சொசைட்டி’ எனும் தன்னார்வ நிறுவனத்தின் துணைத்தலைவரான சூ லைபெர்மன்.

1973ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் வன விலங்குகள் மற்றும் அரிய உயிரிகளுக்கான உலகளாவிய வர்த்தக சாசன (CITES) அமைப்பு, பல்வேறு நாட்டு அரசுகளோடு இணைந்து, அழிந்துவரும் விலங்குகளை வணிகப் பிடியிலிருந்து காப்பாற்றப் போராடி வருகிறது. 

தென்ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் 183 நாட்டு அரசுகளின் பிரதிநிதிகளோடு நடந்த 17வது மாநாட்டில், அழியும் நிலையிலுள்ள எறும்புத்தின்னி, யானை, காண்டாமிருகம் உட்பட பலவற்றையும் காப்பாற்றுவதற்கான திட்டத்தினை முன்வைத்துள்ளனர். 1995ம் ஆண்டே எறும்புத்தின்னிகளை வேட்டையாட, விற்பனை செய்ய சர்வதேச தடை விதிக்கப்பட்டாலும் இன்றுவரை அவற்றைக் கடத்தும் வேகம் குறையவில்லை.

எறும்புத்தின்னியின் இனப்பெருக்க வேகமும் ஆண்டிற்கு ஒரு குட்டி என்ற அளவுதான் என்பதால் இவற்றின் எண்ணிக்கை  வேகமாக சரிந்து வருகிறது. ‘‘2011க்கும் 2013க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகாலத்தில் 2 லட்சத்து 34 ஆயிரம் எறும்புத்தின்னிகள் வேட்டையாடப்பட்டுள்ளன’’ என ‘உலகளாவிய இயற்கை நிதியம்’ (WWF) தகவல் தெரிவித்துள்ளது.

‘‘இது என்றும் தீராத ஒரு போர்தான். நாடுகள் சட்டங்களை இயற்றினாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அரிய விலங்குகளைக் காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கையோடுதான் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி  வருகிறோம்’’ என தீவிரமாகப் பேசுகிறார் ‘உலகளாவிய இயற்கை நிதிய’த்தின் தலைமை அதிகாரியான ஜினெட்டே ஹெமிலி. வளர்ச்சி என்பது உயிர்களே இல்லாத கண்ணாடியும் கட்டிடமும் அல்ல என்பதை நாம் உணர அதிக காலம் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.