News
Loading...

மெடிக்கல் டிக்‌ஷ்னரி

மெடிக்கல் டிக்‌ஷ்னரி

ஜெயலலிதா மருத்துவ மனையில் அட்மிட் ஆன பிறகு 11 அறிக்கைகளை வெளியிட்டது அப்போலோ. அந்த அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள சொற்கள் பலவும் மருத்துவம் சம்பந்தப்பட்டது. அந்த மருத்துவ வார்த்தைகளுக்கான விளக்கங்கள் இதோ...

Fever (காய்ச்சல்): காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல. உடல் உறுப்புக்களில் பாதிப்பு, நோய்த்தொற்று போன்ற காரணத்தின் வெளிப்பாடாக காய்ச்சல் ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலை 38’ செல்சியஸுக்கு அதிகமாகப் போவது காய்ச்சல் எனப்படும். வெப்பநிலை மிகவும் அதிகமாக செல்லும்போது, ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தீவிர சிகிச்சைக்கு உட்படும் 5 சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல் இருக்கும்.

Dehydration (நீரிழப்பு): வெயில், போதுமான அளவு நீர் அருந்தாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்தம் வெளியேறுவது உள்ளிட்ட காரணங் களால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடுகிறது. இதை டிஹைட்ரேஷன் அல்லது நீரிழப்பு என்று சொல்வர். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதை வெளியேற்ற அதிக அளவில் சிறுநீர் வெளியேறு வதாலும் நீரிழப்பு ஏற்படலாம்.

Normal Diet (இயல்பான ஊட்டச்சத்து உணவு): ஒவ்வொருவருக்கும் தேவையான கலோரி மாறுபடும். உடலுக்குத் தேவையான சாிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதை இயல்பான ஊட்டச்சத்து உணவு என்று சொல்வர்.

Nutrition (ஊட்டச்சத்து): உடலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண் ஊட்டச்சத்துக்கள் தேவை.

Standard Medical Protocol (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகள்): நோயின் தன்மைக்கு ஏற்ப, என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளன. நோய் அறிகுறிகள் மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாறு அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். 

Recuperative Treatment (சத்துமீள் சிகிச்சை): நாட்பட்ட அளவில் நோய்வாய்ப்பட்டு மருந்துகளின் கட்டுப்பாட்டில் உடல் இயங்கும் நிலையில், சிகிச்சைக்குப் பிறகு உடலை மீட்டுக்கொண்டுவர அளிக்கப்படும் சிகிச்சை முறை.

Antibiotics (ஆன்டிபயாடிக் அல்லது பாக்டீரியா நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்): உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியை அழிக்கும் மருந்துக்கு ஆன்டிபயாடிக் என்று பெயர். டாக்டர் பரிந்துரைக்கும் காலம் வரை, இந்த மருந்தை எடுக்க வேண்டும். இல்லையெனில், மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கிருமி பெற்றுவிடும். 

Infection (நோய்த் தொற்று): காற்று, நீர், உணவு, ரத்தம், என எந்த ஒரு வழியாகவும் நம் உடலுக்குள் கிருமி நுழைவதை நோய்த் தொற்று என்கிறோம். எளிதில், நோய்த்தொற்றுக்கு ஆளாகும் உள் உறுப்பு நுரையீரல்தான். 

Infectious Disease Specialists (தொற்றுநோய் சிறப்பு நிபுணர்கள்): நிமோனியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை தொற்றுநோய்கள். இதற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களுக்குத் தொற்றுநோய் சிறப்பு நிபுணர் என்று பெயர். 

Respiratory Support (செயற்கை சுவாச உதவி): சுவாசிப்பதில் பிரச்னை இருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக் கருவியைப் பயன்படுத்தி சுவாசிக்கச் செய்கின்றனர். நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு இதன் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை, நுரையீரல் விரிவாக்கச் சிகிச்சை, எக்மோ எனப்படும் இணைக்கப்பட்ட இதய மற்றும் நுரையீரல் கருவிச் சிகிச்சை உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

மெடிக்கல் டிக்‌ஷ்னரி

Intensivists or Critical Care (தீவிர சிகிச்சைப் பிரிவு): இதயம், நுரையீரல் என முக்கிய உறுப்புக்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தலாம். இவர்களுக்கு பிரத்யேகமாக 24 மணி நேர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்ட பிரிவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு என்று பெயர். செயற்கை சுவாசம், இதயத் துடிப்பு கண்காணிப்பு என்று பல பிரத்யேகக் கருவிகள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

Cardiologists (இதய மருத்துவர்): பிறவி இதயக்கோளாறு, இதய வால்வு நோய்கள், இதயம் செயலிழப்பது, இதய செயல் இழப்பு, இதய மின் இயங்கியல் (எலக்ட்ரோ பிசியாலஜி) போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இதய நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.

Respiratory Physicians (நுரையீரல் மருத்துவர்கள்): சுவாசம் தொடர்பான பிரச்னை, நுரையீரலில் ஏற்படக்கூடிய டி.பி., நிமோனியா போன்ற நோய்த் தொற்றுகள், இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு வந்து செல்லும் ரத்த ஓட்டம் உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் நுரையீரல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். 

Diabetes (சர்க்கரை நோய்): நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானத்தின்போது குளுக் கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. செல்கள் இயங்க இந்த குளுக்கோஸ் தேவை. ஆனால், நேரடியாக செல்களால் இதைப் பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரு சாவி போல செயல்படுவது இன்சுலின் ஹார்மோன். உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைந்ததாக இருந்தாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். 

Endocrinologists (நாளமில்லா சுரப்பியியல் நிபுணர்): நம் உடலின் செயல்பாட்டை தூண்டும் ஊக்கிகளுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். பிட்யூட்டரி, தைராய்டு, லாங்கர் ஹான்ஸ் திட்டு என்று நம் உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களை நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் என்று சொல்வர். சர்க்கரை நோய்க்கு காரணமான இன்சுலின் கூட நாளமில்லா சுரப்பியைச் சார்ந்ததுதான். எனவே, இவர்கள் சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களாக உள்ளனர்.

Radiologist (கதிரியக்கவியல் நிபுணர்): உடல் உள் உறுப்பு​களை எக்ஸ்ரே உள்ளிட்ட கதிர்வீச்சை செலுத்தி பரிசோதித்து, பாதிப்பைக் கண்டறிய உதவும் மருத்துவ நிபுணருக்கு கதிரியக்கவியல் நிபுணர் என்று பெயர். எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ., ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன் என பல நோய் கண்டறியும் முறைகளை இவர்கள் கையாளுவர். நெஞ்சக நோய்கள், இதயம் மற்றும் மூளைச் செயல்பாடு சார்ந்த நோய்களில் குறிப்பிட்ட பிரச்னைகளைக் கண்டறிய இந்த முறை பயன்படுத்தப்படும்.

Winter Bronchitis (குளிர்கால மூச்சுக்குழல் அழற்சி): குளிர்காலம், காற்று மாசுபடுதல், நோய்த் தொற்று போன்ற பிரச்னைகளால் நுரையீரல், சுவாசக்குழாய் பாதிக்கப்படுதல். மூச்சுவிடுவதில் சிக்கல் மற்றும் இழுப்பு இதற்கான அறிகுறி.

Nebulisation (மருந்து அணுக் கடத்திகள்): நுரையீரல் மற்றும் சுவாசம் சார்ந்த ஆஸ்மா, அழற்சி போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு நுரையீரலுக்குள் மருந்தை நேரடியாகச் செலுத்துவது.

Decongestion (அடைப்பு நீக்குதல்): சுவாசப்பாதை மற்றும் சுவாச உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக ஏற்படும் திரவ சேர்மானத்தை மருந்துகள் கொடுத்தோ, கருவிகள் பொருத் தியோ நீக்குவதன் மூலமாக சுவாசத்தை சரிப்படுத்தலாம். இதற்கு,  இழுப்​பான்கள் போன்ற கருவிகள் பயன்​படுத்தப்​படும். 

Passive Physiotherapy (செயலற்ற உறுப்புக்கான பிஸியோதெரபி): உடலின் உறுப்புகள் மந்தமாகவோ, செயலிழந்து போகும் நிலையிலோ, அதன் இயக்கத்தை மீட்டெடுக்க பிஸியோதெரபி நிபுணர்களே அந்த உறுப்புகளை இயக்கிச் சிகிச்சை தரும் முறை. ஆக்டிவ் பிசியோதெரபி என்றால் நோயாளி கை, காலை அசைத்து செய்வது. பேசிவ் என்றால், நோயாளியால் அசைக்க முடியாத நிலையில், தெரபி அளிப்பவர் அல்லது, கருவியின் துணைகொண்டு அசைத்துப் பயிற்சி அளிப்பது.

Tracheotomy (குரல்வளைப் பகுதியில் துவாரம் ஏற்படுத்தி செயற்கை சுவாசம்): குரல்வளைப் பகுதியில் சிறிய துவாரம் ஏற்படுத்தி, அதற்குள் சிறு குழாய் பொறுத்தி, அதன் வழியாக ஆக்சிஜன் செலுத்துதல். இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், நோயாளியால் பேசுவது மிக மிகக் கடினம். அந்த நோயாளிக்கு குழாய் மூலம் திரவ உணவு செலுத்தப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.