News
Loading...

பூமிக்கு வெளியே விண்வெளி நாடு!

பூமிக்கு வெளியே விண்வெளி நாடு!

‘விண்வெளியில் வாடகைக்கு வீடு கிடைக்குமா’ என நாம் பிற்காலத்தில் நினைக்கலாம். ஆனால் அறிவியலுக்கு வீடு மட்டுமல்ல, நாடு கூட சாத்தியம்தானே?  பல ஹாலிவுட் படங்களில் விண்வெளி நாட்டினைக் கண்டிருந்தாலும் உண்மையில் அப்படி மிதக்கும்  தேசத்தை உருவாக்கிவிட ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஸ்பீடு 2.0 வேகத்தில் துடித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் வாசிக்கப்போவதும் விண்வெளி தேசத்தின் முயற்சி குறித்துத்தான். 

வியன்னாவிலுள்ள சர்வதேச வான்வெளி மையம் (AIRC) எனும் தனியார் நிறுவனத்தின் இகோர் அசுர்பெய்லி மற்றும் யுனெஸ்கோவின் விண்வெளி அறிவியல் கமிட்டி அறிவியலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரோடு இணைந்து இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதோடு சரி என தூங்கிவிடாமல், ஸ்காண்டிநேவிய புராணப்படி ‘அஸ்கார்டியா’ என இந்த நாட்டிற்குப் பெயரே சூட்டி விட்டனர். 

அஸ்கார்டியா நாட்டில் வேலை செய்ய, வாழ என நேர்த்தியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நிறுவனத்தினர் தோள் தட்டினாலும், இன்னும் இதற்கு ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதே தெரியாத நிலையில், அசுர்பெய்லியின் வார்த்தைகள் மாயம் செய்கின்றன.

 ‘‘விண்கற்கள், குப்பைகள் ஆகியவற்றிலிருந்து அஸ்கார்டியாவை காக்க ஹைடெக் கவசத்தை உருவாக்க உள்ளோம். இதையெல்லாம் 18 மாதங்களுக்குப் பிறகு ரோபோடிக் செயற்கைக் கோளை ஏவியபிறகு அமல்படுத்துவோம்’’ என அசராமல் பேசுகிறார். 

சரி, அஸ்கார்டியா நாட்டுக் குடிமகனாவது எப்படி? ‘‘அனைவரும் இந்த விண்வெளி நாட்டுக் குடிமகனாக முடியும். இதுவரை எந்த நாடும் எங்களின் ஐடியாவைப் போல முயற்சிக்கவில்லை. இதுதான் முதல் முயற்சி. 

பல்வேறு விதிமுறைகளோடு ஜனநாயக, தனித்துவ நாடாக அஸ்கார்டியா பின்னாளில் உருவாகும். இன்று பலரும் இதனைக் கிண்டல் செய்தாலும், நாளை உலகமே எங்களை ஆச்சரியமாகப் பார்க்கும்’’ என்று பூரிக்கிறார், அஸ்கார்டியா அமைப்பின் திட்ட உறுப்பினரும், மெக்கில் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் சட்டக் கழகத்தின் இயக்குநருமான ராஜ் ஜாகு. 

இதில் முதலில் இணையும் 1 லட்சம் நபர்கள் அஸ்கார்டியா நாட்டின் மக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் அறிவித்து, நாட்டின் கொடி, லோகோ, ஏன்... தேசிய கீதத்தையும் மக்களே தேர்ந்தெடுக்க அனுமதித்துள்ளது புதுமைதான். 

எல்லாம் சரிதான். ஆனால் இந்த நிலைவரை செல்லவே பில்லியன் டாலர்கள் தேவைதானே? தற்போது பூமியின் வட்டப்பாதையில் சில கி.மீ பயணிக்க ஃபால்கன் 9, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்கள் 65 மில்லியன் டாலர்களை கட்டணமாக வசூலித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்தால் அஸ்கார்டியா தேசம் சாத்தியமாகலாம். 

‘‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISS) ஒன்று ஏற்கனவே விண்வெளியில் உள்ளதே?’’ என்ற கேள்விக்கு, ‘‘அதனை பல்வேறு நாடுகள் சேர்ந்து உருவாக்குவதால் அதன் இயக்கம் பல்வேறு நாடுகளால் கட்டுப்படுத்தப்படும். காண்டோ (கூட்டு தலைமை ஆட்சி) முறையில் பல பிரிவுகளாக இருக்கும். எங்களது நாடு தன்னாட்சி கொண்டது’’  என விரிவாக விளக்குகிறார் ராஜ் ஜாகு.   
   
சரி நிஜம் என்ன? விண்வெளியில் ஐரோப்பிய நாடுகளின் (UNOOSA) நடைமுறை விதிகளின்படி தன்னாட்சி நாடாக ஒன்றை உருவாக்குவது கடினம். நாட்டின் விதிமுறைகள், நிதி, திட்டம் குறித்த எதனையும் நிறுவனம் தெளிவாக அறிவிக்காததால் அஸ்கார்டியா சாத்தியமா என பலரும் எண்ணினாலும் விண்வெளியில் வாழ்வது, ஆதிக்கம் செலுத்துவது என்கிற தொலைநோக்கில் வல்லரசு நாடுகளிடையே ரேஸ் எப்போதோ தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.