News
Loading...

அன்று ராஜீவ்... இன்று ராகுல்!

அன்று ராஜீவ்... இன்று ராகுல்!

1990-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை நேரம். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டு TSI 99 என்ற பதிவு எண் கொண்ட கான்டெசா கிளாசிக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார் ஜெயலலலிதா. காரை டிரைவர் அண்ணாதுரை ஓட்டி வந்தார். புதுச்சேரி எல்லையில் காரை சைகை காட்டி நிறுத்தினார் சுலோசனா சம்பத். கையில் தயாராக வைத்திருந்த சால்வையை ஜெயலலிதாவுக்கு வழங்கி ‘‘ஹேப்பி பர்த் டே’’ என்றார். அடுத்த நாள் ஜெயலலிதாவின் பிறந்தநாள். ‘‘முன்கூட்டியே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல் நபர் நீங்கதான்’’ என சொல்லி சந்தோஷத்தோடு வாழ்த்தை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. கார் தொடர்ந்து பயணிக்க தொடங்கியது. கேசட் பிளேயரில் ஜெயலலிதாவுக்குப்பிடித்த பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சசிகலா பாடல்கள் முடிந்ததும் கேசட்டுகளை மாற்றியபடியே இருந்தார். பாடலில் லயத்தபடியே பின் சீட்டில் படுத்திருந்தார் ஜெயலலிதா.

மீனம்பாக்கம் திரிசூலம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி கார் அப்பளம் ஆனது. கான்டெசா கிளாசிக் காரின் முன் பகுதி கொஞ்சம் நீளமானது. அதனால் லாரி மோதியபோது ஜெயலலிதா உயிருக்கு பாதிப்பில்லை. ஆனால், படுகாயம் அடைந்தார். நெற்றி, உதடுகள் கிழிந்தன. சசிகலாவுக்கு கன்னத்திலும் கண்ணிலும் காயம். மயிலாப்பூரில் இருந்த ‘தேவகி மருத்துவமனை’யில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். (இப்போது அது சென்னை மீனாட்சி மருத்துமனையாக மாறிவிட்டது) தேவகி மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ரூம் நம்பர் 

216-ல் ெஜயலலிதா அட்மிட் செய்யப்பட்டார். சசிகலா முதல் மாடியில் நம்பர் 104 அறையில் இருந்தார். அதே மாடியில் அறை எண் 120-ல் சசிகலாவின் கணவர் நடராஜன் தங்கி யிருந்தார். அறையில் இருந்த டி.வி-யில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. இரண்டு நாட்கள் கழித்து ஜெயலலிதா அறையிலேயே சசிகலாவும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருவருக்கும் நடுவே ஒரு திரை மட்டுமே இருந்தது. மன்னார்குடியை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்தபடியே இருந்தார்கள். அதில் பெண்கள் மட்டுமே ஜெயலலிதாவை பார்க்க முடிந்தது. ரூம் நம்பர் 215-ல் முன்னாள் அமைச்சர் முத்துசாமியும் 214-ல் தலைமை நிலைய செயலாளர் துரையரசனும் மினி கட்சி ஆபிஸை நடத்திக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் நிலையை அறிய ஆர்வத்தோடு குவிந்த தொண்டர்களிடம், ‘‘மேடம் நல்லாயிருக்காங்க. ஒண்ணும் கவலைப்படாதீங்க’’ என சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார் துரையரசன். நலம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் அங்கே இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு போனார்கள். ஒருநாள் மட்டும் ஜெயலலிதாவைச் சந்திக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அன்று ராஜீவ்... இன்று ராகுல்!

மார்ச் 1-ம் தேதி ஜெயலலிதா முகத்தில் போடப்பட்டிருந்த தையல் பிரித்திருந்ததால் எதாவது இன்ஃபெக்‌ஷன் வரும் என்பதால் அன்றைய தினம் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ‘தேவகி’ சொக்கலிங்கம், கண் மருத்துவர் அகர்வால், நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஆகிய டாக்டர்கள்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். டிரைவர் அண்ணாதுரையும் தேவகி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். வழக்குப் பதிவு செய்த மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவசங்கு, ஜெயலலிதாவை சந்திக்கப் போனார். கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்தாயா என பல கேள்விகளால் அவரை துளைத்தெடுத்தார் ஜெயலலிதா. 

விபத்து பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, தேவகி மருத்துமனைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் வந்திருந்தார். கண் மற்றும் கன்னத்தைச் சுற்றிலும் பிளாஸ்திரிகள் போடப்பட்டு போர்வை போர்த்தியபடியே படுக்கையில் கிடந்தார் ஜெயலலிதா. அவர் அருகில் சென்று நலம் விசாரித்தார் ராஜீவ். பக்கத்தில் இருக்கையில் அமர்ந்த ராஜீவ் காந்தி ஜெயலலிதாவின் கையைப் பற்றி ஆறுதல் கூறி நீண்ட நேரம் பேசிக் கொண்டி ருந்தார். மறக்காமல் சசிகலாவையும் பார்த்துவிட்டுக் கிளம்பினார்.

சரியாக 26 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா இப்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அன்றைக்கு தந்தை ராஜீவ் காந்தி வந்தார். இன்று மகன் ராகுல் காந்தி வந்திருக்கிறார். ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி. அக்டோபர் 7-ம் தேதி திடீரென தனி விமானத்தில் சென்னை வந்த ராகுல் காந்தி அப்போலோவுக்கு வந்தார். ஆனால், அவரால் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. டாக்டர்களிடம் மட்டுமே பேச முடிந்து.

காலம் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.