News
Loading...

திருவண்ணாமலை நகராட்சி... சாக்கடை ஆட்சி!

திருவண்ணாமலை நகராட்சி... சாக்கடை ஆட்சி!

ஆன்மிக ஸ்தலம் என்றால் கடவுள் பக்தி, சுத்தமான சுற்றுப்புறம், தூய்மையான காற்று ஆகியவை அமையப் பெற்றிருக்கும். ஆனால், ஆன்மிக நகரமான திருவண்ணாமலையிலோ, எல்லாமே தலைகீழ்.

திருவண்ணாமலை நகராட்சி, தொடர்ந்து மூன்று முறை தி.மு.க வசம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், நகராட்சியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என சொல்லிதான் 2011-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலச்சந்தருக்கு மக்கள் ஓட்டுபோட்டனர். ஆனால், அவர்களுக்கு பாலச்சந்தர், நெற்றி நிறைய நாமம்தான் போட்டார்.

39 வார்டுகள் கொண்ட திருவண்ணாமலை நகராட்சியில் பெரிய பிரச்னை, பாதாள சாக்கடை திட்டம். தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பாதியிலேயே முடங்கிப்போனது. `நகராட்சி தலைவராகப் பொறுப்பேற்றவுடன் ‘முதல் வேலையாக பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பேன்’ என கொடுத்த வாக்கை மறந்தே போனார் பாலச்சந்தர். கிரிவல பாதையைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் பாதி குளங்கள் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. மீதி உள்ள குளங்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் பயன்படுத்தி வந்த அக்னி தீர்த்தகுளம் சில, ஆண்டுகளில் சாக்கடை குளமானது.

‘‘பௌர்ணமி நாளில் முளைக்கும் தற்காலிக தெருவோர கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு கடைகளை கண்டுகொள்வதில்லை. ‘போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என பாலச்சந்தர் சொன்னதோடு சரி. அதற்கான இடத்தைக்கூட தேர்வு செய்யவில்லை. இப்போது இருக்கும் பேருந்து நிலையத்தில் போதிய கழிவறை வசதிகள்கூட இல்லை. ஒரே ஒரு தண்ணீர் டேங்கிலும் தண்ணீர் வருவதில்லை. தாலுக்கா அலுவலகத்துக்கும், உழவர் சந்தைக்கும் நடுவில், அரசு கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. உழவர் சந்தையில் குவியும் குப்பைகளை மாணவியர் விடுதி முன்பாகக் கொட்டிவிட்டு செல்கிறனர். பன்றிகளும், மாடுகளும், குப்பைகளை கிளறிவிட்டுச் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மாணவிகள் கொசுக் கடியால் அவதிப்படுகிறனர்’’  என புலம்புகிறனர் நகரவாசிகள்.

திருவண்ணாமலை நகராட்சி... சாக்கடை ஆட்சி!

தி.மு.க. கவுன்சிலர் காலேஜ் ரவி, ‘‘நகராட்சிக் கூட்டம் நடத்தி 9 மாதங்கள் ஆகின்றன. நகராட்சி தலைவரிடம் கேட்டால், எம்.எல்.ஏ எலெக்‌ஷன், ஆணையர்கள் மாற்றம் என காரணம் சொல்லி டிமிக்கி கொடுக்கிறார். இதுவரை நகராட்சிக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் போடவில்லை. மக்களின் வசதிக்காக மூன்று நகர்நிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், அண்ணா நகர் நகர்நிலை மையத்துக்குச் சொந்தக் கட்டடம் இல்லாததால் பிச்சைக்காரர்கள் தங்கும் விடுதியாக மாறிப்போனது. கீழ்நாத்தூர் மையத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அமர்வதற்கு நாற்காலிகள் இல்லாமலும் குடிக்க தண்ணீர் வசதி இல்லாமலும் அவதிப்படுகின்றனர். நகராட்சி புதிய கட்டடம் கட்டத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இன்னும் பணிகள் முழுமை அடையவில்லை. தீபத்திருவிழா நாளில் வெளியூரில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் குறைந்த அளவில் அழைத்துவந்து, அதிக அளவில் ஆட்களை கணக்குகாட்டிக் கொள்ளை அடிக்கின்றனர். அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்தி தருவதில்லை. திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த முடியாமல் முற்றிலும் தோற்றுப் போனார்கள். பிணம் எரிக்கும் தகனம் மேடை அடிக்கடி பழுது, நகர் முழுவதும் குப்பை, துப்பரவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதில் கமிஷன், பௌர்ணமி நாளில் நகரை சுத்தம்செய்து சுண்ணாம்பு போடுவதில் கமிஷன், நகராட்சியில் சான்றிதழ் வாங்கப்போனால் புரோக்கர்கள் தலையீடு என நகராட்சியே நாற்றம் அடிக்கிறது’’ என்றார்.

திருவண்ணாமலை நகராட்சி... சாக்கடை ஆட்சி!

நகராட்சி தலைவர் பாலச்சந்தரிடம் பேசினோம். ‘‘கூட்டம் நடத்துவதில்லை என சொல்வது எல்லாம் சுத்த பொய். கமிஷனர்கள் மாறி மாறி வருகின்றனர். அவர்கள்தான் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், செய்வதில்லை. நகராட்சி கட்டடத்துக்கு மொத்த தொகையே ஒன்றரை கோடி ரூபாய்தான். ஃபண்டு போதவில்லை, கேட்டு இருகோம். இப்போதுதான் வந்திருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையா என்பது தெரிய வில்லை. தமிழகத்திலேயே திருவண்ணா மலை நகராட்சிதான், தண்ணீர் பஞ்சம் இல்லா நகராட்சியாக உள்ளது. பில் எக்‌ஸ்ட்ரா போட்டு வாங்குவதெல்லாம் எனக்குத் தெரியாது. நகராட்சி ஆணையரி டம்தான் கேட்கவேண்டும். என்னிடம் கையெழுத்துதான் கேட்பார்கள்.’’ என்றார்.

அருணாச்சலேஸ்வரருக்கே வெளிச்சம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.