News
Loading...

காவிரி தொழில்நுட்ப குழுவினர்: மேட்டூர், பவானிசாகரில் இன்று ஆய்வு

காவிரி தொழில்நுட்ப குழுவினர்: மேட்டூர், பவானிசாகரில் இன்று ஆய்வு

காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழுவினர், கர்நாடகத்தில் உள்ள அணைகளை நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர். இன்று தமிழகம் வரும் குழுவினர், 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காவிரி பாசனப் பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை கடந்த 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைத்து காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்து, உண்மை நிலை குறித்த ஆய்வு அறிக்கையை வரும் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்தது.

இதில் மத்திய நீர்வள ஆணைய பிரதிநிதி சையத் மசூத் ஹுசேன், நீர்வளத் துறை முதன்மைச் செயலர் ராகேஷ் சிங். தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவ‌ர் சுப்பிரமணியன், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பி.சுவாமிநாதன், கண்காணிப்புப் பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறி யாளர் ஏ.ராஜசேகர் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியா சென்று, அங்குள்ள காவிரி பாசனப் பகுதிகளை பார்வையிட்டனர். நேற்று மைசூரு வந்த குழுவினர் ரங்கப்பட்டினம், பாண்டவப்புரா, கே.ஆர்.பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், தடுப்பு அணைகள், காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மண்டியா, மைசூரு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் குழுத் தலைவர் ஜி.எஸ்.ஜா-வை சந்தித்து கர்நாடகாவின் வறட்சி நிலையை எடுத்துரைத்தனர். மண்டியா எம்.பி.புட்டண்ணையா, முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா ஆகியோரும் குழுவினரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கர்நாடகாவில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் 2 ஹெலிகாப்டர்களில் சென்று கிருஷ்ணராஜசாகர் அணையை ஆய்வு செய்தனர். அணையின் வரைபடத்தை வைத்துக்கொண்டு நீர்வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராய்ந்தனர். மேலும் ஹெச்.டி.கோட்டை, ஹொளேநர்சிப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பார்வையிட்டனர். பின்னர், கார் மூலம் ஹேமாவதி அணைக்கு சென்று அங்குள்ள நீர் இருப்பை ஆய்வு செய்தனர்.

இந்தக் குழுவினர் கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நேற்று மாலைக்குள் பார்வை யிட்டுவிட்டு தமிழகத்துக்கு வர திட்டமிட்டிருந்தனர். பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை. எனவே, தங்களின் பயணத் திட்ட‌த்தை மாற்றி அமைத்து இன்று கபினி, ஹாரங்கி ஆகிய நதிகளின் பாசன‌ப் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இன்றே தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் இக்குழுவினர் 2 நாட்கள் பயணம் செய்ய உள்ளனர்.

மேட்டூர், பவானிசாகர் அணை களில் இன்று ஆய்வு மேற்கொள் ளும் உயர்நிலைக் குழுவினர், வழியில் உள்ள விவசாய நிலங்களையும் பார்வையிட்டு, விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிகின்றனர். இன்று இரவு திருச்சியில் தங்கும் குழுவினர், நாளை காலை கல்லணை வழியாக தஞ்சாவூர் செல்கின் றனர். அங்கிருந்து ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, முத்துப் பேட்டை, பெருகவாழ்ந்தான் என தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங் களில் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் பிறகு நாகை மாவட்டத்தில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.