News
Loading...

காங்கிரஸார் எல்லோரும் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்

காங்கிரஸார் எல்லோரும் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனியாகக் கச்சை கட்ட ஆரம்பித்துவிட்டதோ என்கிற சந்தேகத்தை கிளப்பி விட்டது திருச்சியில் நடந்த உண்ணாவிரதம். 

காவிரியில் தமிழகத்துக்கு துரோகம்செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது காங்கிரஸ். அங்கே தி.மு.க கூட்டணிக்கு எதிராக அதிரடிகள் கிளம்பின. குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, தனுஷ்கோடி ஆதித்தன், யசோதா, டாக்டர் செல்லக்குமார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையே வந்து சேர்ந்தார் ப.சிதம்பரம். ‘அடுத்து இளங்கோவன் வருவாரா’ என பத்திரிகை​யாளர்கள் கேட்டதற்கு, ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இளங்கோவன் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை’ எனச் சமாளித்தார் திருநாவுக்கரசர். அதேநேரம் இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அங்கு மீடியாவிடம் பேட்டிக்கொடுத்தார். இதேபோல் குஷ்புவும் உண்ணாவிரத்தில் கலந்துகொள்ளவில்லை.

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்றுக் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. மத்திய அரசு முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறிவிட்டு, அடுத்து வாரியம் அமைக்க முடியாது என மறுத்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. இதுதொடர்பாகப் பிரதமரைச் சந்திக்கப்போன தமிழக எம்.பி-க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல... தமிழக மக்களையே அவமானப்படுத்தியுள்ளார் மோடி. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட​போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து பார்த்தார். அதுபோல முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வந்து பார்த்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை” என்றார் திருநாவுக்கரசர்.

காங்கிரஸார் எல்லோரும் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்

அடுத்து பேசிய ப.சிதம்பரம், “காவிரி விவகாரம் தொடர்பாக உடன்பாடு ஒன்றை கடந்த 1976-ம் ஆண்டு இந்திரா உருவாக்கினார். அதைத் தமிழக அரசு அப்போது செயல்படுத்தவில்லை. அதுதான் முதல் தவறு. காவிரிநீர்ப் பிரச்னையில், 89 வருட போராட்டத்தில் இப்போது கடைசிப் படிக்கட்டில் இருக்கிறோம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, முந்தைய காங்கிரஸ் அரசு காலத்தில் வெளியிடப்பட்டது. இறுதித்தீர்ப்பை நிறைவேற்றுவதுதான் இறுதிப்படி. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியும், கர்நாடகவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அரசியல் ஆதாயத்துக்காக, மத்திய அரசு அந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்தாமல் நடுநிலைத் தவறியுள்ளது. மோடியின் நடுநிலையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.   

நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன், “காவிரி நீர் தமிழகத்துக்குத் தரமறுத்தால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கே கொடுக்க வேண்டும்” என அதிரடி கிளப்பினார்.

போராட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விவசாயச் சங்க தலைவர்களான பி.ஆர்.பாண்டியன், செல்லமுத்து, அய்யாக்கண்ணு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளும் நேரில் வந்து வாழ்த்தினார்கள். தி.மு.க-வில் இருந்து யாருமே வரவில்லை.

காங்கிரஸார் எல்லோரும் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்

இறுதியாகப் பேட்டியளித்த திருநாவுக்கரசர், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி பற்றிக் கேட்காதீர்கள் அதை தேர்தல் நெருங்கும்போது பேசிக்கொள்ளலாம். உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில்லாமல் பல ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றித் தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் போட்டியிட வேண்டும். கட்சி சார்பில் சுமார் 20 ஆயிரம் பேர் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும்’’ என்றார்.

அந்தப் பேட்டியும், அடுத்தநாள் விஜயகாந்த்தை திருநாவுக்கரசர் சந்தித்ததும் அடுத்தடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ஆனால் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ‘‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடரும்’’ என திருநாவுக்கரசர் பல்டி அடித்திருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.