News
Loading...

கங்கை அமரன் in Download மனசு

கங்கை அமரன் in Download மனசு

கற்ற பாடம்

உங்க முன்னேற்றத்திற்கு நீங்கதான் வழி வகை செய்துக்கணும். உற்றார், அண்ணன்-தம்பிகள் உங்கள் கையைப் பிடிச்சிட்டு போவாங்கன்னு எதிர்பார்க்கக்கூடாது. சொந்தமாக கரணம் போட்டுப் பொழைக்கிறதுதான் உத்தமம். திறமையை மட்டும் நம்புவதே புத்திசாலித்தனம். அதைத் தவிர வேறு சிறந்த வழி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறியாதவன் மாதிரி காட்டிக்கொள்வதே பல இடங்களில் அறிவுடைமை. பெரும் புகழ் பெற்றவர்களின் பின்னால் நீங்கள் போனால், ‘அவர்கள் ெமாழியில்தான் நீங்கள் பேசவேண்டும்’ என எதிர்பார்ப்பார்கள். யாரும் உங்களுக்குத் துணையில்லை. வாழ்க்கையை அரைகுறையாகப் புரிஞ்சுக்கும்போதே பாதி ஆயுசு முடிஞ்சிருக்கும். உலகமே நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டு பாடா படுது. இதில் நானெல்லாம் ஒரு துகள்தானே!

பாதிச்ச விஷயம்

எதுவும் என்னை பாதிக்காது. ஜெயலலிதா அம்மாவும், சசிகலா அம்மாவும் எங்க பையனூர் இடத்தை எடுத்துக்கிட்டாங்க. ஆரம்பத்தில துயரமா இருந்துச்சு. இப்ப எதுவும் மனசை பாதிக்க விடாமல் சும்மாதான் இருக்கேன். என் அண்ணன் இளையராஜா இங்கே கடவுளுக்கு அருகில் வைச்சு கொண்டாடப்படுகிற மனுஷன். இருந்து என்ன செய்ய! கூடப் பொறந்தவங்களை அவர் கொண்டாடலை. பாவலர் பிள்ளைங்க, பாஸ்கர் பிள்ளைங்க, உயிரோட இருக்கிற ஒரே அக்கா பத்மா, ஜீவா அண்ணியோட தம்பிகள் என யாரையும் கூட சேர்த்துக்கலை! ஒரு நல்ல வார்த்தை சொன்னதில்லை! ‘நான் இருக்கேன்’னு ஒரு புன்னகை செஞ்சதில்லை. ‘இதெல்லாம்  ரொம்ப அற்புதம்’னு நினைச்ச ஒரு உறவு விட்டுப் போனதன் வேதனை... அந்த இழப்பின் வலி கொடியது.

மறக்கமுடியாத மனிதர்கள்

இங்கே நான் மனிதர்கள்னா, அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தோடு சொல்றேன். தன்ராஜ் மாஸ்டர், அடுத்து ஜி.கே.வெங்கடேஷ் அண்ணா, பஞ்சு அருணாசலம் அண்ணா... இவங்க மூணு பேரும்தான் எங்க தலைவிதியை மாத்தி எழுதினவங்க. ‘மனிதர்கள்’ என்பதற்கும் மேலாக ‘அப்பழுக்கு இல்லாத மனிதர்கள்’.  இவங்களின் கருணையே எங்கள் வாசலைத் திறந்தது. தன்ராஜ் மாஸ்டர் ‘லண்டன் மியூசிக் ஸ்கூலில் படி’ன்னு சொன்னார். எங்களுக்கு மேலே போறதுக்கு வழி வகை தெரியாதபோது வழி காட்டியிருக்கார். 

கங்கை அமரன் in Download மனசு

அவர் எங்களைத் திசை திருப்பி இருக்காவிட்டால், இத்தனை சிறப்பு கிடைச்சிருக்குமா... சந்தேகமே! ஜி.கே.வெங்கடேஷ் அண்ணா மனசு எல்லாம் பெரிசு. எங்களை உயரத் தூக்கி வைச்சார். இவ்வளவு வளர்ந்து எங்களுக்குக் கூட அந்த மனசு இல்ல. பூரணமான மனுஷன். கடைசி வரைக்கும் எங்ககூட இருந்தார். துளி ஈகோ இல்லாமல் ஒரு மனசு இருந்ததுன்னா அது அவர்தான். பஞ்சு அண்ணா... ஊருக்கே தெரியுமே! கையைப் பிடிச்சு தூக்கி விட்டுட்டு, நாங்க கடந்து போனதை பிரியமும் பாசமும் பெருமிதமுமாகப் பார்த்துக்கிட்டு இருந்தவர்.

மீட்க விரும்பும் இழப்பு

அம்மா. ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களை வளர்த்து ஆளாக்கிய அம்மா. கடைசிப் பையன்னு என்னைக் கொண்டாடினதை எல்லாம் மறந்தால் எனக்கு விமோசனம் கிடையாது. சுயநலம்னு ஒண்ணு இல்லாமல் ஒரு ஆத்மா இருக்க முடியுமா? எங்க அம்மா மாதிரி ஒரு மனுஷியை இதுவரைக்கும் பார்க்கலை. எதையும் எதிர்பார்க்காமல் எந்த உறவுமே இல்லை. எங்க அம்மா கடைசிக்கட்டத்தில் இருந்த சமயம்... நெஞ்சுக்கூட்டில மூச்சு திணறிக்கிட்டு இருக்கு. டாக்டர் வந்து கவனிப்பாக பார்த்துக்கிட்டு இருக்கார். நான், ராஜா அண்ணன், பாஸ்கர் அண்ணன், அக்கா எல்லாம் கூடி நிற்கிறோம். மத்த சொந்த பந்தங்கள் பக்கத்திலேயே இருக்காங்க. 

‘அம்மா, உங்க புள்ளைக எல்லாம் இங்கே நிற்கிறாங்க... இதில உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்’னு சத்தம் போட்டுக் கேட்கிறார் டாக்டர். அதிகப்படியான சத்தத்தில முழிச்ச அம்மா கண்ணத் திறந்து பார்க்கிறாங்க. நாலு பேர் மேலேயும் பார்வை போயிட்டு கஷ்டப்பட்டு கையை உயர்த்தி, என் கன்னத்தைத் தடவி அந்தக் கேள்விக்கு பதில் சொல்றாங்க. அதற்குப் பிறகு கை விழுந்துருச்சு. கோமாவிற்குள் போயிட்டாங்க. என் கன்னத்தை அழுத்திப் பிடிச்சு சொன்ன அந்தக்  கணம் இன்னும் மனசுக்குள்ளே நிக்குது. பெருமளவு நேசிக்கப்படுவது பேரானந்தமானது!

கடைசியாக அழுதது

எங்க அம்மா இறக்கும்போது கூட நான் அழலை. கோமாவில் விழுந்திட்டு, அவங்க ரொம்ப காலம் எங்க கூடவே இருந்தாங்க. உணர்வு இல்லையே தவிர, உடம்பு இருந்தது. அவங்களுக்கான கடமையை செய்ததில் கொஞ்சம் நிறைவு இருந்தது. ஆனால் பாஸ்கர் அண்ணன் இறந்தபோது கதறிக் கதறி அழுதேன். எங்களைப் பூ மாதிரி பார்த்துக்கிட்டவர். அண்ணனுக்கும் மேல  தோழன் மாதிரியே எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு போனதில் அவருடைய பங்கு ரொம்ப பெரிசு. தோளுக்கு மேல் வளர்ந்த எங்களைத் தூக்கி வளர்த்தவர் அவர். எங்க வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தவர். அண்ணன்னா அருமை பெருமையா அவரை மட்டுமே சொல்லலாம்.

சினிமாவைப் புரிந்துகொள்வது

மக்களைப் புரிஞ்சதால சினிமாவும் புரிஞ்சதுனு நினைக்கிறேன். கிராமத்திலிருந்து ஓடி வந்த எங்களுக்கு சினிமா கொடுத்தது பெரிய மரியாதை. அத்தனை பெரிய மியூசிக் டைரக்டர்களிடமும் வேலை பழகியிருக்கோம். அவங்களோட குறை, நிறைகள் தெரியும். அவ்வளவு தூரம் சேர்த்து வைச்ச அனுபவம்தான் பின்னாடி உதவியது. ஊர்ல டென்ட் கொட்டகையில் படம் பார்த்திட்டு, கண்ணதாசன் பேர் வந்த இடத்தில் என் பெயரும் வரும்னு நினைச்சது நடந்ததே! 

இங்கே திறமை இருந்தால், யாரையும் அவமதிக்காமல் இருந்தால், கடைசி வரைக்கும் இருக்கலாம். நான் இருக்கேன். ‘அடடா, கங்கை அமரனா! இருக்கிற இடம் சந்தோஷமா இருக்குமே’ன்னு சொல்றாங்க. மக்கள் என்னைப் புரிஞ்சுகிட்டதையும், கொண்டாடியதையும் நான் மறந்தால் என்ன ஆவது? பாவலர் அண்ணனோடு கூடித் திரிந்த ஒவ்வொரு நாளும் அனுபவச் ேசர்க்கை. கொள்முதல் மாதிரி சேர்த்து வைத்தது. மக்களின் பாராட்டைப் பெறுவதெல்லாம் மிகப் பெரிய விஷயம். அதற்கும் மேலானது அவங்க அன்பைப் பெறுவது.  நற்சொல், நற்செயல்தான் தேவை. 

இந்த சினிமா மட்டும் எங்களைத் தோளோடு தோள் சேர்க்கலைன்னா நான், ராஜா அண்ணன், யுவன், வெங்கட்பிரபுன்னு யாருமே இல்லை. இங்கே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை. இது ஒரு வினோதமான இடம். திமிர்த்தனமும், இயல்பை மீறி இறுக்கமும் காட்டினால் நீங்கள் விலகும்போது கேலிப் பொருள் ஆவீர்கள். நான் இன்னமும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். சந்தோஷம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.