News
Loading...

ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்... நெல்லித்தோப்பு கரன்சி!

ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்... நெல்லித்தோப்பு கரன்சி!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அறிவிப்போடு அமைதியாக இருக்க, முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பறக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிய நாராயணசாமி, தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நெல்லித்தோப்பின் முட்டு சந்துகளுக்குள் எல்லாம் நுழைந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தேர்தலில் போட்டியிடாமலே புதுச்சேரிக்கு முதல்வர் ஆனவர் நாராயணசாமி. தேர்தலில் போட்டியிடாத ஒருவர் முதல்வரானால் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற வேண்டும் என்பது விதி. அதற்காக நெல்லித்தோப்புத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜான்குமாரை ராஜினாமா செய்யவைத்து அங்கே களமிறங்கியிருக்கிறார் நாராயணசாமி. முதல் அமைச்சர் போட்டியிடுவதால் நெல்லித்தோப்பின் அனைத்து வீதிகளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களால் நிரம்பி வழிகின்றன.

வெற்றி பெறுவதற்கான சூழல் அதிகம் என்றபோதிலும் பதற்றம் கலந்த இறுகிய முகத்துடனேயே நாராயணசாமி காணப்படுகிறார். ‘‘தொகுதியில் 50 சதவிகிதம் வாக்காளர்கள் தேர்தலை வருமானமாகப் பார்க்கிறார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர், ‘எங்களிடம் சொம்பை வைத்துவிட்டு குடத்தை எடுக்கிறார் ஜான்குமார். இவங்க அரசியல் வியாபாரத்துக்கு எங்கள் வரிப்பணம் வீணாகணுமா?’ என்ற கோபத்தில் இருக்கிறார்கள். இப்படி தேர்தலைப் புறக்கணித்தால் வாக்குப்பதிவின் சதவிகிதம் குறையும். இதனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் நாராயணசாமி வெற்றி பெறுவார். அது அவருக்கு மரியாதையான வெற்றியாகவும் இருக்காது. இதுதான் அவரது பதற்றத்துக்குக் காரணம்” என்றார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க முதல் கட்டமாக ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கனையும் விநியோகித் துவிட்டதாம் நாராயணசாமி தரப்பு. டோக்கன் வழங்கப்படுவது ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பெற்றுக்கொள்வதற்காகவாம்.

‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத தலைவர்கள் வரிசையில் இருக்கும் நாராயணசாமி இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதை தன்மானப் பிரச்னையாகப் பார்க்கின்றனர் தமிழக அமைச்சர்கள். மருத்துவமனையில் ஜெ. இருக்கும் நிலையில் தேர்தலில் நாராயணசாமியை வீழ்த்தி அவரது முதல் அமைச்சர் கனவைத் தகர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் போட்டியைக் கடுமையாக்கி அவர் வெற்றி பெறும் வாக்கு விகிதத்தையாவது குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். நாராயணசாமியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஓம் சக்தி சேகர் மீது மக்களுக்கு அதிருப்தி. இதனால் புதிய வேட்பாளரைக் களம் இறக்க முதலில் நினைத்தனர் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள். தேவையான அளவுக்குப்  பணத்தை தேர்தலில் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக சொன்னதால் அவருக்கே மீண்டும் சீட் கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

இந்த இடைத்தேர்தல் பணத்தை மையப்படுத்தியேதான் நடக்கப் போகிறது என்பதால் நெல்லித்தோப்பு மக்களுக்கு இரண்டு தீபாவளி உறுதி. ஆளும் கட்சி அஸ்திரத்தைப் பயன்படுத்தி தேர்தல் கமிஷனை சமாளித்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறது நாராயணசாமி தரப்பு. 

‘‘அன்னை சோனியாவின் ஆணைக்கிணங்க, இளம் தலைவர் ராகுல் காந்தியின் வேண்டு கோளுக்கிணங்க, நாராயணசாமிக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் பகிரங்கமாகச் சொல்லி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியபோதும் அமைதியாகத்தான் வேடிக்கை பார்க்கிறது தேர்தல் கமிஷன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.