News
Loading...

அரசுப் பொருட்காட்சியும் அமைச்சரின் ஆசையும்!

அரசுப் பொருட்காட்சியும் அமைச்சரின் ஆசையும்!

னது சொந்தத் தொகுதியில் அரசுப் பொருட்காட்சி நடத்தவேண்டும் என ஆசைப்படுவதில் தவறில்லை. மாணவர்கள் துள்ளி விளையாடும் பள்ளி மைதானத்துக்குள் நடத்தவேண்டும் என ஆசைப்படுவதுதான் தவறு. மாணவ அமைப்புகள் கொடுத்த எதிர்ப்புக் குரலால் அதிர்ந்து போயிருக்கிறார் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு!

வருடம்தோறும் தூத்துக்குடியில், நடத்தப்பட்டுவந்த பொருட்காட்சியை இந்த முறை தனது சொந்தத் தொகுதியான கோவில்பட்டியில், நடத்தவேண்டும் என ஆசைப்பட்டார் அமைச்சர் கடம்பூர் ராஜு. அமைச்சரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதிகாரிகள் ஜரூராக களத்தில் இறங்கினர். கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 2-வது வாரம் அரசுப் பொருட்காட்சி நடத்தப்போவதாகத் தகவல் வெளியானது. முதற்கட்டமாக மைதானத்தை சீரமைக்கும் பணியும் தொடங்கியது.

ஆனால், பள்ளி மைதானத்துக்குள் பொருட்காட்சியை நடத்தி மாணவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலிப் போராட்டம் என இவர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான சுரேஷ் பாண்டியனிடம் கேட்டோம். ‘‘பொருட்காட்சி நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தப் பள்ளி வளாகத்துக்குள் நடத்துவதைத்தான் எதிர்க்கிறோம். இங்கு மாவட்டக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் பயிற்சிக் கூடம், அனைத்து இடைநிலைக் கல்விப் பயிற்சி அலுவலகம் மட்டுமில்லாமல் பக்கத்திலேயே எஸ்.சி-எஸ்.டி மாணவர்கள் விடுதியும் இருக்கிறது.

இவர்கள் கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை இடத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். மாணவர்கள் விளையாட வேறு இடம் இல்லை. சிறப்பு வகுப்புகள், மாதிரி தேர்வுகள் எல்லாமே அந்த இடைப்பட்ட காலத்தில்தான் நடத்தியாக வேண்டும். இதற்கு இடையில்தான் அரையாண்டுத் தேர்வும் வருகிறது. 

பள்ளி வளாகத்துக்குள் பெரிய பெரியக் கொட்டகைகளைப் போட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதால்  மாணவர்களின் கவனம் சிதறிவிடாதா? ஏற்கெனவே அரசு பள்ளிகளின் தரம் குறித்து நீதிமன்றம் வருத்தம் தெரிவித்திருக்கிற இந்த வேளையில், ஒரு அமைச்சரே முன்னின்று மாணவர்களின் படிப்பை கேள்விக்குறியாக்கலாமா? அமைச்சர் விரும்புகிறார் என்றதும் கலெக்டர், கல்வி அதிகாரிகள் என எல்லோருமே வாய்பொத்தி சம்மதிக்கின்றனர். அப்படியானால், யார்தான் இவர்களைத் தட்டிக் கேட்பது? பொருட்காட்சியே வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை; கோவில்பட்டியைச் சுற்றி எத்தனையோ மைதானங்கள் இருக்கின்றன. பொருட்காட்சியை அங்கே கொண்டு போங்க என்றுதான் சொல்கிறோம்” என்றார் ஆவேசமாக.

சமூக ஆர்வலரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான ஆ.சக்திவேல் முருகனிடம் பேசினோம். ‘‘இந்தப் பள்ளியில், அடிப்படைத் தேவைகள் எதுவுமே சரியில்லை. அதைக் கவனிக்காத அமைச்சர், இந்தப் பள்ளி மைதானத்தை மட்டும் அவர் தேவைக்கு எடுக்க முயற்சி செய்கிறார். அதற்கு அதிகாரிகளும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பொருட்காட்சி அமைப்பதற்கான வேலைகள் மெதுவாக நடந்து வந்த நிலையில், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றதும் ரொம்ப வேகமாக நடக்கிறது. அப்படியானால், ‘இவர்கள் சொல்லி நாம் என்ன கேட்பது?’ என்கிற எண்ணத்தில்தானே இப்படிச் செயல்படுகிறார்கள். இதையும் மீறி மாணவர்களுக்கு இடையூறு செய்தால், அதற்கானப் பலனை இவர்கள் நிச்சயமாக அனுபவிப்பார்கள். நாங்க சும்மா விடமாட்டோம்’’ என்றார் வேகமாக.

அரசுப் பொருட்காட்சியும் அமைச்சரின் ஆசையும்!

மாவட்டக் கலெக்டரான ரவிக்குமாரிடம் பேசினோம், ‘‘மேலிடத்திலிருந்து வந்த அதிகாரிகள் பார்த்து ‘ஓ.கே’ சொன்ன இடம்தான் அது. அதுவும் மாலை ஆறு மணிக்கு மேலேதான் நிகழ்ச்சிகள் தொடங்கும். மாணவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கப்போறதில்லை. பக்கத்தில் ஹாஸ்டல் இருப்பதாகச் சொன்னாங்க. அங்கிருப்பவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். அதையும் தாண்டி இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக இருந்தால், வேறு இடத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். கிடைத்தால் அங்கே மாற்றிவிடுவோம்’’ என்றார் உறுதியாக.

அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசினோம், ‘‘பல மாவட்டங்களில் இதுமாதிரி புது இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். நாம் மட்டும்தான் அப்படி செய்திருக்கிறோம் என நினைக்கவேண்டாம். அந்த இடத்தில் இந்த மாதிரி எதிர்ப்புக் கிளம்புவதாகச் சொன்னார்கள். இப்பதான் அது எனக்குத் தெரியும். அதனால் வேறு இடத்துக்கு மாற்றுவது சம்பந்தமாக கலெக்டர்கிட்ட சொல்லியிருக்கிறேன். அவர் பார்த்துக்கொள்வார்’’ என்றார்.

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.