News
Loading...

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடமை தவறிவிட்டன!

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடமை தவறிவிட்டன!

வாழ்க்கையே இப்போது வங்கியைச் சுற்றித் தான் இருக்கிறது. இரண்டு நாளில் சரியாகும் என்றார்கள். மூன்று வாரம் என்றார்கள். 50 நாள் என்றார்கள். மூன்று மாதம் என்கிறார்கள். மக்களும் வங்கி அதிகாரிகளும் மற்றும் அலுவலர்களும் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையான நிலைமையை உணர  அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலத்தை சந்தித்தோம்.

‘‘ ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற இந்த அறிவிப்பால், கறுப்புப் பணத்தை ஒழித்துவிட முடியுமா?”

‘‘முடியாது. பொதுமக்கள் டிசம்பர் 30 வரை தங்கள் பழைய பணத்தை வங்கிகளில் செலுத்தலாம் என்று அரசு சொல்லியிருக்கிறது. இப்போது வரை 6 லட்சம் கோடி ரூபாய் பணத்தைச் செலுத்தியிருக் கிறார்கள். அவர்களில் யாராவது பணக்காரர்கள் உண்டா? பொதுமக்கள்தான் தங்கள் பணத்தை வங்கிகளில் செலுத்துகிறார்கள். பணக்காரர்களுக்கு பல ரூட்கள் தெரியும்? அவர்கள் ஏன் வங்கிகளுக்கு வரப்போகிறார்கள்? சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களின் பட்டியலையும் வங்கிகளில் உள்ள வாராக்கடன் பட்டியலையும் ஏன் அரசு வெளியிடத் தயங்குகிறது? ஆக, சாதாரண மக்களுக்கு ஒரு நீதி; பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?”

‘‘புது நோட்டுகள் தட்டுப்பாடு எப்போது நீங்கும்?”

‘‘இந்தியாவில், இரண்டேகால் லட்சம் ஏ.டி.எம்-கள் இருக்கின்றன. சுமார் 40 கோடி மக்கள் டெபிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். புதிய நோட்டுகளை தேவைக்கு ஏற்ப அச்சிடாமல், அரசியல் நோக்கத்துக்காகவும் தேர்தல் காரணத்துக்காகவும் இப்படித் தடாலடி அறிவிப்பை பிரதமர் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதுள்ள தட்டுப்பாட்டைப் போக்க ரூபாய் நோட்டுகளை முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடவே சில மாதங்கள் ஆகும். ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகளை திட்டமிட்டே ரெடி பண்ணியிருக்கிறார்கள். ஏ.டி.எம் மிஷின்களில் 2,000 ரூபாய் தாள்களை வைக்கப் போதுமான கட்டமைப்பு வசதி இல்லை. செல்லாத நோட்டுகளாக வங்கிகளில் இருப்பில் இருப்பதை எல்லாம் இப்போது மக்களிடம் கொடுக்கவேண்டிய நிலைமை. இது நீடித்தால், நிலைமை சீரடைய மேலும் சில மாத காலம் பிடிக்கலாம்.’’

‘‘பல இடங்களில் மக்களால் பணத்தை மாற்ற முடியவில்லையே? ரெப்கோ வங்கி போன்றவையும் ஒத்துழைக்கவில்லையே?”

‘‘ரெப்கோ வங்கி ரிசர்வ் வங்கியின் கீழ் வரவில்லை என்கிறார்கள். ஆனால், ‘பிக் பஜாரில் டெபிட் கார்டைத் தேய்த்துப் பணத்தைப் பெறலாம்; பெட்ரோல் பங்குகளில் பணத்தைப் பெறலாம்’ என்கிறார்கள். இதெல்லாம் வங்கிகளா? தனியார் நிறுவனங்கள்தானே? அரசாங்கத்தின் கீழ் வரும் ரெப்கோ வங்கியை நம்பக்கூடாதா? கூட்டுறவு வங்கியை நம்பக்கூடாதா? அரசுக்குச் சொந்தமான அமைப்புகளின் மூலம் மக்களுக்குச் சேவை செய்யலாம். ஆக, மத்திய அரசுத் தரப்பில், எதையும் திட்டமிடாமல் வேண்டுமென்றே இப்படி நடந்துகொள்கிறார்கள்.”

“ ‘ரிசர்வ் வங்கி கடமை தவறிவிட்டது’ என்று நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறாரே?” 

‘‘மத்திய அரசிடம் இருந்து தினம் ஒரு புதிய அறிவிப்பு வந்தபடி இருக்கிறது. ரூ.4,500, ரூ.4,000, ரூ. 2,500, ரூ. 2,000 என்றெல்லாம் மாற்றி மாற்றி அறிவித்தார்கள். நவம்பர் 8-ம் தேதி ஏ.டி.எம்-களில் 48 மணி நேரத்தில் பணம் எடுக்கலாம் என்றார் மோடி. அவர் சொன்னபடி நடந்ததா? இல்லையே? இன்னும் மூன்று வாரங்கள் ஆகலாம் என்கிறது மத்திய அரசு. இந்த சூழ்நிலையை முன்கூட்டியே கணித்துச் சொல்ல ரிசர்வ் வங்கி தவறிவிட்டது. குளறுபடிகள் சரியாக இன்னும் 50 நாட்கள் ஆகும். இதை பிரதமர் மோடி வெளிப்படையாகச் சொல்லாமல், மக்களைப் பொறுத்துக்கொள்ளும்படி கூறுகிறார்”

‘‘வாராக்கடன் செலுத்தாதவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிட்டீர்களே? அது என்ன ஆனது?’’

‘‘சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக உள்ளது. இப்படி ஏமாற்றுபவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நாங்களே அவர்களின் பட்டியலை வெளியிட்டோம். இதை ரிசர்வ் வங்கி அல்லது அரசு அல்லவா செய்திருக்கவேண்டும்? ஏதோ ரகசியம் என்கிறார்கள். பொதுமக்கள் பணத்தைக் கடனாகப் பெற்றவர்கள் பெயர்களை பகிரங்கமாக அறிவிப்பதில் தவறில்லையே? இதிலும் இன்னொரு புதிய மோசடி நடக்கிறது. ஒருவர் ரூ.100 கோடி கடன் பாக்கி என்றால், ரூ. 30 கோடி கொடுங்கள் கணக்கை முடித்துக்கொள்கிறோம் என்கிறார்கள். 70 கோடி வங்கிக்கு நஷ்டம். நஷ்டமான நிறுவனத்தை 30 கோடி கொடுத்து இன்னொரு கம்பெனி வாங்குகிறது. இன்னொரு கம்பெனி வாங்குவதில் சூட்சுமம் இருக்கிறது. 30 கோடிக்கு நிலம், தொழிற்சாலை இதெல்லாம் கிடைக்கிறதல்லவா! வசூல் செய்து வாராக்கடனைக் குறைக்கவேண்டுமே தவிர வாராக்கடனை ஒரு பொருள் ஆக்கி, குறைவான விலைக்கு விற்பனை செய்து வாராக்கடனைக் குறைக்கக்கூடாது.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.