News
Loading...

சென்னை க்ளீன் பாய்ஸ்!

சென்னை க்ளீன் பாய்ஸ்!

நகரின் அழுக்கை மாற்றும் குழு

‘‘இன்னைக்குக் குப்பைகளும், அசுத்தங்களும் நிறைஞ்ச இடமா சென்னை மாறிப் போச்சு. இங்கிருக்கிற எல்லாருமே நமக்கென்னங்கிற மனப்பான்மையிலதான் வாழ்ந்துட்டு வர்றாங்க. சிலர் ‘யாராவது  செய்யட்டும்’னு போய்க்கிட்டே இருக்காங்க. நம்ம ஏரியாவை நாமே சுத்தம் செய்ற துவக்கப் புள்ளியா  இருப்போம்னு நினைச்சோம். அப்படித்தான் இந்த அமைப்பு உருவாச்சு. அதனாலயே இதுக்கு ‘துவக்கம்’னு பெயர் வச்சு செயல்பட்டுட்டு வர்றோம்’’ என உற்சாகமும், சந்தோஷமுமாகப் பேசும் கிருஷ்ணகுமார் சுரேஷ், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர். 

உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் மக்களுக்குத் தெரியாமல் சென்னையைச் சுத்தப்படுத்தும் அரிய பணியில் பின்னியெடுக்கிறது இவரின் ‘துவக்கம்’ அமைப்பு! நகரின் சுத்தம்தான் இவர்களின் அதி முக்கிய டார்கெட். இதோடு ‘மைம்’, ‘வீதி நாடகங்கள்’ எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியாக போக்குவரத்து விதிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பெண்கள் மீதான வன்முறை என பல்வேறு சீரியஸ் விஷயங்களையும் கையிலெடுத்துப் பேசுகிறார்கள். 

இரண்டு வருடங்களுக்கு முன்புதான், இந்த அமைப்பை கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்திருக்கிறார் கிருஷ்ணகுமார். இன்று ஆலமரமாகி படர்ந்திருக்கிறது இந்த இளைஞர் படை! ‘‘நான் ஏதாவது பண்ணலாம்னு நினைச்ச நேரம், என் கூட எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்ச சுதர்ஸன், அபிராமி, பணிந்திரா, அரிகிரண், ராகவ் ஐயர், கார்த்திக்சிவானு ஆறு நண்பர்கள் இணைந்தாங்க. முதல்ல, நாங்க படிக்கிற காலேஜ்ல இருந்தே ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். 

சென்னை க்ளீன் பாய்ஸ்!

அதனால, 2014ம் வருஷம்  சுதந்திர தினம் அன்னைக்கு காலேஜ் அனுமதியோட 67 மரங்கள் நட்டோம். இப்போ அந்த மரங்கள் நல்லா வளர்ந்திட்டு வருது. அந்நேரம் பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் வந்துச்சு. எங்களை அதோடு இணைச்சுக்கிட்டு திரிசூலம் ரயில் நிலையத்தை சுத்தம் பண்ணினோம். அது நிறைய உற்சாகம் தந்து, இப்போ வரை எங்களைத் தொடர்ந்து பயணிக்க வச்சிட்டு இருக்கு’’ என்கிறவரிடம், ‘அதென்ன உலகமே தூங்கும்போது உங்களுக்குத் தன்னார்வம் பிறக்கிறது?’ என்றோம். 

‘‘அதுக்கு ஒரு சம்பவம்தான் காரணம். மயிலாப்பூர் மாட வீதிகளை சுத்தப்படுத்திட்டு இருந்த நேரம். அங்கிருந்த மக்கள் சிலர், ‘சும்மா விளம்பரத்துக்குப் பண்ணுவாங்க. அப்புறம், அப்படியே போயிடுவாங்க’னு சொன்னாங்க. அது எங்களை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. விளம்பரத்துக்காக எதையும் செய்யக்கூடாதுனு நினைச்சோம். அதோடு, எங்களால மக்கள் நெரிசல்ல வேலையும் பார்க்க முடியலை. அதான், இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தோம். 

ஆனா, அதிலும் ஆரம்பத்துல சிக்கல் இருந்துச்சு. இதுக்கு முதல்ல மாநகராட்சிகிட்ட அனுமதி வாங்கணும். அப்புறம், இரவு நேரம்ங்கிறதால போலீஸ்கிட்டயும் அனுமதி பெறணும். மாநகராட்சிகிட்ட போனப்போ, ‘ஓகே, பண்ணுங்க பார்ப்போம்’னு அனுப்பிட்டாங்க. போலீஸ் ஒத்துக்கவே இல்லை. ‘பொலிட்டிக்கலா எதுவும் செய்ய மாட்டோம்... சுத்தம் பண்ணி, பெயின்ட் பண்ணப் போறோம். அவ்வளவுதான்’னு கோரிக்கை வச்சோம். அவங்க, ‘சரி, ஒரு எஸ்.ஐ.யை அனுப்புறோம். நீங்க பண்றதைப் பார்த்திட்டுதான் அடுத்து பர்மிஷன் கொடுப்போம்’னு சொன்னாங்க. 

அது போதும்னு வேலையை செஞ்சோம். இரவு பத்து மணிக்கு ஆரம்பிச்சு, அதிகாலை மூணு மணி வரை எங்க வேலைகள் இருக்கும்.  மாநகராட்சி வேனுக்குப் போன் பண்ணினதும் அவங்க வந்து குப்பைகளை அள்ளிட்டு போயிடுவாங்க. இப்போ, மயிலாப்பூர் துணை கமிஷனரே ‘இந்த இடத்தைச் சுத்தம் பண்ணுங்க’னு எங்களுக்குச் சொல்றதைக் கேட்கும்போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிற கிருஷ்ணா, அவரின் குழுவோடு சேர்ந்து மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட், லஸ் பஸ் ஸ்டாப், நொச்சி நகர் பள்ளி, கஸ்தூரி பாய் மருத்துவமனை, மடிப்பாக்கம், எழும்பூர் என நிறைய இடங்களைச் சுத்தம் செய்து பெயின்ட் அடித்துக் கொடுத்திருக்கிறார். 

இதற்கு ‘cleanup after dark’ எனப் பெயரும் சூட்டியிருக்கிறார். இதுமட்டுமல்ல... சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது இவரின் டீம்! ‘‘இப்போ 40 பேர் வரை உறுப்பினரா இருக்காங்க. இதுதவிர இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வலர்களாக வருவாங்க. உறுப்பினர்கள் கொடுக்கிற பணத்துலதான் அமைப்பை நடத்திட்டு வர்றோம். நாங்க இடத்தை சுத்தம் பண்ணி அங்கிருக்கிற சுவர்ல ஏதாவது டிசைன் பண்ணிடுவோம். இதுமாதிரி மந்தைவெளியில நாங்க பண்ணிட்டு போயிட்டோம். 

மறுநாள், யாரோ போஸ்டர்ஸ் ஒட்ட வந்திருக்காங்க. அங்கிருந்த கடைக்காரர் எங்களுக்கு போன் பண்ணி, ‘மறுபடி போஸ்டர் ஒட்ட வந்திருக்காங்க’னு சொன்னார். அப்புறம் அதை தடுத்தும் நிறுத்தியிருக்கார். இதுதான் எங்களோட சக்சஸ். மக்கள்கிட்ட ஒரு விழிப்புணர்வு வந்துட்டா போதும். சென்னையே சுத்தமாகிடும்’’ என நம்பிக்கை விதைக்கும் கிருஷ்ணகுமார் இப்போது, எலக்ட்ரிக்கல் கான்டிராக்டராக இருக்கிறார். இவரின் ‘துவக்கம்’ அமைப்பு வேறு பல தளங்களிலும் இயங்கி வருகிறது. 

‘‘இந்த வருஷம் ‘கற்க கசடற’னு புதுத் திட்டத்தை ஆரம்பிச்சிருக்கோம். இதன் வழியா மாநகராட்சி, அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அங்குள்ள குழந்தைகளுக்குப் பல்வேறு திறன்களை வளர்க்கப் போறோம். ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அறிவு, தற்காப்புக் கலைகள்னு நிறைய விஷயங்கள் இதுல அடங்கும். இப்போ, லேட்டஸ்ட்டா செம்பரம்பாக்கம் ஏரியாவை சுத்தம் பண்ணி, ஒரு முன்மாதிரி கிராமமா மாத்த பேசிட்டு இருக்கோம். சீக்கிரமே தொடங்கிடுவோம். இந்தச் சமூகத்துக்கு எங்களால என்ன பண்ண முடியுமா அதை பண்ணிட்டே இருப்போம் சார்... அதுதான் எங்க லட்சியம்’’ என்கிறார் இவர் தீர்மானமாக! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.