News
Loading...

மிஸ்டர் கழுகு: முட்டிமோதும் ஜெட்லி!

மிஸ்டர் கழுகு: முட்டிமோதும் ஜெட்லி!

மை இடப்பட்ட கைவிரலை யாரோ காட்டும் படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார் கழுகார். ‘விரலில் மை; முகத்தில் கரி’ என்று கமென்ட் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ‘‘மக்கள் முகத்தில் மட்டுமல்ல... பி.ஜே.பி முக்கியத் தலைவர் ஒருவர், செல்லாக்காசு விவகாரத்தில், தனது முகத்திலேயே பி.ஜே.பி-யினர் கரி பூசிவிட்டதாகக் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கிறார்’’ என பரபர லீட் கொடுத்தபடியே வந்தார் கழுகார்.

‘‘அப்படியென்றால், பி.ஜே.பி-க்குள் பிளவா?’’

‘‘ஆமாம். பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள்; அதனால் பி.ஜே.பி. ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி; அனைத்தும் தற்போது நிதியமைச்சகத்தின் தலையில் சுமத்தப்படுகிறது. அதன் பாரம் தாங்காமல் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி புலம்பிக் கொண்டிருக்கிறார். அருண் ஜெட்லியோடு உள்ள பழைய பகையைத் தீர்த்துக்கொள்ளும் வன்மத்தோடு சுப்பிரமணியன் சுவாமி கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இது அந்தக் கட்சிக்குள் பெரும் களேபரத்தை உருவாக்கி உள்ளன.’’

‘‘அருண் ஜெட்லியின் பங்கும் இதில் உண்டுதானே. பிறகு ஏன் அவர் புலம்ப வேண்டும்?’’

‘‘அருண் ஜெட்லிக்கு இதில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு கிடையாது. அவர் இந்த அறிவிப்பை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக உள்ளுக்குள் எதிர்த்தும் வந்திருக்கிறார். கூடவே, விஜய் மல்லையா, பிர்லா (எஸ்.ஆர் குரூப்), சகாரா போன்ற பெரும் முதலாளிகளிடம் இருந்து கறாராக வாராக்கடன்களை வசூல் செய்வது, கூடுதலாக இனியும் கடன்கள் கொடுக்காமல் இருப்பது போன்ற யோசனைகளையும் முன்வைத்தார். ‘அப்படி முற்றிலுமாகப் பகைக்க முடியாது’ என மேல் மட்டத்தில் இருந்தவர்கள் நினைத்தார்களாம். இந்திய முதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மூன்று குழுக்களாக இருக்கின்றனர். டாப் லெவலில் இருப்பவர்கள் சி.ஐ.ஐ என்ற அமைப்பின் கீழ் செயல்படுகின்றனர். இரண்டாம்கட்ட முதலாளிகள் ஃபிக்கி என்ற அமைப்பின் கீழ் வருகின்றனர். மூன்றாம்கட்டத்தில் இருப்பவர்கள்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வகையறாக்கள். இவர்களில் அருண் ஜெட்லியின் முடிவு, டாப் லெவல் முதலாளிகளின் நலன்களை மட்டுமே ஒத்ததாக இருந்தது. அதாவது, ‘விஜய் மல்லையா, சகாரா நிறுவனம் மாதிரியான இரண்டாம் கட்ட முதலாளிகளைப் போல், தொழில் நடத்தத் தெரியாமல் நடத்தி, தாங்களும் நஷ்டமடைந்து நாட்டையும்  நஷ்டப்படுத்துபவர்கள் நமக்கு வேண்டாம்’ என்பதுதான் ஜெட்லியின் வாதம். ஆனால், பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்-க்குள் இருப்பவர்களோ, ‘இரண்டாம்கட்ட முதலாளிகளின் நலனும் நமக்குத் தேவை. அதனால் அவர்களையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். அவர்களிடம் கடுமைகாட்டி கடன்களை வசூல் செய்வதோ, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை உள்ளே கொண்டுவர நடவடிக்கைகளைக் கடுமையாக்குவதோ எதிர்காலத்தில் நம்மை பலவீனப்படுத்திவிடும்’ என்று எச்சரித்திருக்கிறார்கள். இறுதியில், இவர்களின் கையே ஓங்கியிருந்ததை அடுத்து விறுவிறுவென காய்களை நகர்த்தி, அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார் பிரதமர் மோடி. ஆனால், முடிவெடுத் தபிறகும்கூட அதனை செயல்படுத்து வதற்குக் கொஞ்சம் அவகாசத்தைக் கேட்டுள்ளார் அருண் ஜெட்லி. அதற்கு, மோடி தலைமையிலான ரகசிய உயர்மட்டக் குழு முதலில், ‘சரி’ சொல்லிவிட்டு, பின்னர் சொன்னபடி நேரத்தைக் கொடுக்கவில்லை.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். மோடியின் அறிவிப்பு நவம்பர் 8-ம் தேதி வெளியானது. ஆனால், இந்த முடிவுகள் எல்லாம் அதற்கு 10 நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. அதையொட்டி ரிசர்வ் வங்கிக்கு நவம்பர் 2-ம் தேதி ஒரு சர்க்குலர் அனுப்பப்பட்டது. அதில், ‘அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. அதற்கேற்றபடி புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் அந்த விதிமுறைகளை அமல்படுத்துங்கள்’ என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்தச் செய்தி, சில ஆங்கில நாளிதழ்களில் பூடகமாக வெளியாகிருந்தது. ஆனால், அந்த 15 நாட்கள் அவகாசம் முடியும் முன்னரே, அதாவது ஒரு வாரத்துக்குள்ளாகவே... ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டுவிட்டார். இதனால் ரிசர்வ் வங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அது ஜெட்லியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. இதிலும் அருண் ஜெட்லி கடும் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில் அந்த அதிருப்தியை ஜெட்லியின் முகத்தில் பார்க்கலாம்.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘அதனால்தான் அந்த பிரஸ்மீட்டில் சிடுசிடுவென்று அமர்ந்திருந்த அருண் ஜெட்லி, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், அதிகாரிகளையே பதில் சொல்லுமாறு கை காட்டிக் கொண்டிருந்தார். பொருளாதாரத் துறை விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்ததாஸ் மட்டுமே அந்த பிரஸ்மீட்டில் பேசிக்கொண்டிருந்தார். இந்த விவகாரங்கள் எல்லாம் முன்பே அம்பானி, அதானிக்குத் தெரியும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி, பவானிசிங் தெரிவித்துள்ளார். அதுபோல, 7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன்களை கட்டாயப்படுத்தி வாங்கத் தேவையில்லை என்பது போன்ற தகவல் வெளிவந்துள்ளன. இது மல்லையா உள்ளிட்ட இரண்டாம் கட்ட முதலாளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் சாதகமாக மாறி உள்ளது. தற்போது வங்கிகளில் இருப்பு உயர்ந்துள்ளது. அதை வங்கிகள் அப்படியே வைத்துக்கொள்ள முடியாது. கடனாகக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், வட்டி கொடுத்து மாளாது. அதனால், வங்கிகளில் உள்ள இருப்பை மீண்டும் பெரிய தொழிலதிபர்களுக்கு கடன்களாக அள்ளிக் கொடுப்பார்கள்.’’

‘‘சுப்பிரமணியன் சுவாமி இதில் என்ன ‘கேம்’ ஆடுகிறார்?’’

‘‘சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜெட்லியோடு எப்போதுமே ஆகாது. அவர் நிதியமைச்சராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதனால், எந்தெந்த வழிகளில் ஜெட்லியைக் கடுப்பேற்ற முடியுமோ, அதையெல்லாம் செய்துகொண்டே இருப்பார். ஜெட்லியின் உடைகள் ஹோட்டல் பட்லரின் உடைகளைப் போல இருக்கிறது என்று தனிப்பட்ட முறையில் பேசியவர்தானே சுப்பிரமணியன் சுவாமி. இப்போது இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் விடுவாரா? ‘இந்த விவகாரத்தைத் திறமையாகக் கையாள நிதியமைச்சகம் தவறிவிட்டது. இது நிதியமைச்சகத்தின் முழுத் தோல்வி’ என்று சுவாமி குறிப்பிட்டார். இது ஜெட்லியைக் கடுப்பேற்றியது. அதன்பிறகும் விடாமல் அருண் ஜெட்லியையும், நிதியமைச்சகத்தையும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.’’

சுப்பிரமணியன் சுவாமி

‘‘அருண் ஜெட்லி என்னதான் முடிவு செய்துள்ளார்?’’

‘‘ ‘கட்சிக்குள் எப்போதும் தனது கருத்துகள் பொருட்படுத்தப்படுவதில்லை’ என்ற வருத்தம் நீண்ட நாட்களாக அருண் ஜெட்லிக்கு இருக்கிறது. திரைப்படத் தணிக்கை, பாகிஸ்தான் யுத்தம், கலாசார விவகாரங்கள், கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ் தலையீடு, கறுப்புப் பண விவகாரம் போன்றவற்றில் மோடி, ராஜ்நாத்சிங்,  சுப்பிரமணியன் சுவாமி, பாரிக்கர் போன்றவர்களின் கருத்துகள் ஒன்றாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-ன் கலாசாரக் கொள்கைகளோடு இவர்கள் அப்படியே ஒத்துப்போகிறார்கள். ஆனால், அருண் ஜெட்லியால் அப்படி ஒத்துப்போக முடிந்ததில்லை. அதனால், உள்ளுக்குள் அது புகைந்து கொண்டிருந்தது. இப்போது ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற அறிவிப்பில் அது தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறார். விரைவில் பி.ஜே.பி-க்குள் இருந்து பெரிய செய்திகள் வரலாம்’’.

‘‘இடைத் தேர்தல் செய்திகள் எல்லாம் அமுங்கிப்போய் விட்டதா?’’

‘‘புதுச்சேரியில் இருந்து ஆரம்பிக்கிறேன். நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமார் வீட்டில் கடந்த செப்டம்பரில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை, 1.25 கோடி ரூபாயை அள்ளிச்சென்றது. அறக்கட்டளை என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையும் பணத்தையும் ஜான்குமார் வாரி இறைக்கிறார் என புகார் எழுந்த நிலையில் ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் அதிரடியாக சோதனை போட்டனர். நாராயணசாமிக்கு போக, ‘எனது அரசியல் வாழ்க்கையை ஒழிக்க எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைவிட தேர்தலை நிறுத்துவதற்குத்தான் பார்க்கின்றனர்’ என்று புலம்பியிருக்கிறார்.’’

‘‘ஓ!’’

‘‘கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவழிக்க முடியாமல், மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பொழியும் பணமழையில் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘செல்லாது’ அறிவிப்பு வெளியாகும் முன்புவரை ஓட்டுக்கு 500, 1,000 ரூபாய் மட்டும் கொடுக்கலாம் என்றே கட்சிகள் திட்டம் வைத்திருந்தனவாம். ஆனால், அறிவிப்புக்குப் பிறகு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என எல்லோரும் தங்களிடம் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைத் தேர்தல் செலவுக்கு என ஒதுக்க, ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் என வாரிவழங்குகிறார்கள். அத்தனையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். ‘தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமிக்கு வேலைபார்க்கும் 9 அமைச்சர்களில் முக்கியமான மூவர் பெருமளவு பணத்தை தொகுதிக்குள் இறக்கிவிட்டுள்ளார்கள்’ என அ.தி.மு.க-வினரே சொல்கிறார்கள். 

அரவக்குறிச்சியிலும் இதே நிலைதான்; விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வாக்கு கேட்கும் நோட்டீஸ்களுடன் பணத்தையும் திணிக்கிறார்கள். ‘4,500 ரூபாய் வரை வங்கியில் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் உங்கள் கணக்கில், நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். எந்தச் சிக்கலும் வராது’ என்று விளக்கமாக எடுத்துச் சொல்லியே விநியோகிக் கிறார்கள். பணப் பட்டுவாடா விஷயத்தில், திருப்பரங்குன்றம் மூன்றாவது இடத்தில்தான் வருகிறது. மூன்று தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை 13.69 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மக்களோ, வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றிக்கொண்டு, இப்போது வாக்குச்சாவடி வரிசையில் நின்று வாக்களிக்கவும் தயாராகி விட்டார்கள்.’’

கர்நாடகாவின் முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம்

‘கர்நாடகாவின் முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தை நாடே வியந்து பார்த்துள்ளதே?’’

‘‘ஆமாம்! நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் 1,000-க்கும், 500-க்கும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் போது, 500 கோடியில் திருமணத்தை நடத்தியுள்ளார் ரெட்டி. பணப் புழக்கமே நின்றுபோன நேரத்தில், இவரால் மட்டும் எப்படி செலவு செய்யமுடிந்தது என்று பி.ஜே.பி-யில் புகைச்சல் எழுந்துள்ளது. திருமணம் நடந்த தினத்தில் மட்டும் பல கோடி ரூபாய்களை பலருக்கும் ஊதியமாகக் கொடுத்துள்ளார்கள். இந்தத் தொகை தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய அதிகார மையம் ஒன்றில் இருந்து கர்நாடாகாவுக்்குச் சென்றதாகக் கூறுகின்றனர். ரெட்டிக்குத் தேவையான நோட்டுகள் புதிய கரன்சிகளாக மாற்றப்பட்டு அங்கு அனுப்பிவைக்கபட்டதாம். ரெட்டியின் திருமணத்துக்கு சுதாகரனுக்கும் அழைப்பு வைக்கப்பட்டதாம். சுதாகரனும், ரெட்டியும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்தபோது பழக்கமாம். அந்த நட்பின் அடிப்படையிலேயே அழைப்பிதழ் வைக்கப்பட்டதாம். ஆனால், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது திருமணத்துக்குச் சென்றால் நன்றாக இருக்காது என்று சுதாகரன் பின்வாங்கிவிட்டாராம்’’ என சொல்லி எழுந்த கழுகார், ‘‘ ‘இடைத் தேர்தலில் நீங்கள் ஏன் பிரசாரம் செய்யவில்லை’ என கனிமொழியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது சிரித்தபடியே நழுவிவிட்டார். தேர்தல் பிரசாரத்துக்கு கனிமொழிக்கு ஏன் போகவில்லை என கட்சிக்குள் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது’’ 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.