News
Loading...

இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு

இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு

பிரேசில் நாட்டிலிருந்து பூச்செடி மூலம் இங்கிலாந்துக்கு வந்த புழு ஒன்று நிலத்தை பண்படுத்த உதவும் நத்தை, மண்புழுக்களை அசுரப் பசியோடு தின்று நிலவளத்திற்கும், மற்ற விலங்குகளின் வாழ்வுக்கும் அல்டிமேட் வில்லனாக உருவெடுத்துளளது. சிறிய புழு எப்படி வில்லனானது? கேள்வி நெஞ்சை குடைகிறதா? 

அகல இலை வடிவிலான 7 செ.மீ நீளத்தில் திமுதிமுவென வளரும் ஒபாமா தட்டைப்புழு, நெதர்லாந்தின் ஆக்ஸ்ஃபோர்டுஷயர் பகுதியிலிருந்து கொண்டு வந்த பவளமலர் (Heuchera) செடி வழியாக இங்கிலாந்திற்குள் ஊடுருவி தாக்குதலை தொடங்கிவிட்டது. பிரேசிலிய மொழியில் ஒபா என்றால் இலை, மா என்றால் உயிரி என்று அர்த்தம் என்பதால்தான் தட்டைப்புழுவுக்கு ஒபாமா என்று கருத்தாக பெயர் சூட்டப்பட்டது.

முதன்முதலில் ஒபாமா தட்டைப்புழுவை 2008 ஆம் ஆண்டு இவை ஐரோப்பாவில் பரவியபோது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்போது இவை பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு வெகுவேகமாகப் பரவின.

ஆனாலும் அரசுகள் முறையாக சுதாரித்து தடுக்காததால் உலகம் முழுவதிலிருந்து ஐரோப்பாவுக்கு இதுவரை 18 தட்டைப்புழுக்கள் ஏற்றுமதியாகி பரவி கடும்நாசம் விளைவித்துள்ளன. அதிலும் குறிப்பாக மோசமான பாதிப்பு ஏற்படுத்தும் 100 உயிரிகள் 

பட்டியலில் இடம்பெற்ற நியூகினி தட்டைப்புழுக்கள் குறிப்பிடத்தக்கவை. நிலத்தின் பயிர்களை வளப்படுத்த நுட்ப நுண்ணிய துளைகளை இடும் மண்புழுக்களை தீவிரமாக தட்டைப்புழுக்கள் வேட்டையாடி லபக்குவதால் இன்றைய நிலவரப்படி இங்கிலாந்து நிலங்களில் வாழ்ந்த மண்புழுக்களில் 20 சதவிகிதம் நொடியில் மாயமாகிவிட்டன. மண்புழுக்களின் இழப்பினால் நீரினை சரியானமுறை யில் உள்ளிழுக்க முடியாத நிலங்களில் பயிர்கள் மட்டும் எப்படி உயிர்பிழைக்கும்?   

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் செடிகளிலிருந்து பரவும் பல்வேறு தீங்கிழைக்கும் பூச்சிகளான குளவிகள், வண்டுகள், சிலந்திகள், அந்துப்பூச்சிகள் நாட்டின் கானுயிர் வளத்தை ஊனப்படுத்தி, விவசாயத்திற்கும் பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. 

சில குறிப்பிட்ட தாவரங்களுக்கு பாஸ்போர்ட் தேவை என அரசு அறிவித்தாலும், தாவர மண்ணிலுள்ள பூச்சிகளின் முட்டைகளைக் கண்டறிய சரியான முறை பின்பற்றப்படுவதில்லைஎன்று தீர்க்கமாகப் பேசுகிறார் பூச்சிகள் ஆராய்ச்சியாளரான மேட் ஷார்லோ. 

பூச்சிகளின் தாக்குதலில் ஒபாமா தட்டைப்புழு முதலுமல்ல, முடிவுமல்ல; ரோஸ்மேரி இலை வண்டு, ஓக் மர அந்துப்பூச்சி, ஆசிய குளவி, ஹார்லேக்வின் வண்டு, ஸ்பானிய நத்தை ஆகிய உயிரிகள், பயிர்களின் மீதான  தாக்குதல் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் பவ்யமாய் அமர்ந்துள்ளன. இங்கிலாந்து ஒரு ஆண்டிற்கு 324 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தாவரவணிகத்தை மேற்கொள்கிறது. 

இவ்வணிகத்தை சிதைக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த அரசு 1.7 பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  செடிகளைத் தாக்கும் புழுக்களை நிர்மூலமாக்குவதை தவிர்த்து  இரையாக உட்கொள்ளும் பறவைகளை ஈர்த்து, அவற்றை 
கட்டுப்படுத்தும் முயற்சிகளே வணிகத்தையும், சூழல் வளத்தையும் என்றென்றைக்குமாக காப்பாற்ற உதவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.