News
Loading...

“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்த, மறைந்த நடிகர் சோபன் பாபு தன்னுடன் நடித்த கதாநாயகிகள் குறித்து, தெலுங்கு இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதினார். அதில், ஜெயலலிதா பற்றிய கட்டுரை இது: 

 “திரை உலகுக்கு நான் வந்த ஐந்தாறு வருடங்கள் கழித்துதான், திரை உலகுக்கு ஜெயலலிதா வந்தார். வந்த வேகத்தில் ‘ஸ்புட்னிக்’ வேகத்தில் உயரே போய்விட்டார். எல்லா இடங்களிலும் அவரைப் பற்றிய பேச்சுதான்... அவருடைய பாடல்கள்தான். அப்போது, நான் சிறு சிறு வேடங்களில்தான் நடித்துக்கொண்டு இருந்தேன். ‘வீர அபிமன்யு’ படத்தில் அபிமன்யுவாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வரலாற்றுரீதியான படங்கள் குறைந்து சமூகக்கதைகள் கொண்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. அப்போது, பட வாய்ப்புகள் எனக்குக் குறைந்துவிட்டன. வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். அந்த நேரத்தில், ஏரோபிளேன் மாதிரி பெரிய கார் ஒன்று எங்கள் வீட்டுக்கு முன் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய தயாரிப்பாளர் ஒருவர்,  ‘நான் எடுக்கப்போகும் படத்தில் நீங்கதான் ஹீரோ. ஜெயலலிதாதான் ஹீரோயின்’ என்று சொல்லி, ‘அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்’ என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். சந்தோஷத்தில், எனக்குத் தலைகால் புரியவில்லை. 

“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

அதுவரை ஜெயலலிதாவை நேரில்கூட நான் பார்த்தது இல்லை. பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என் மிகப்பெரிய அதிர்ஷ்டம். எப்போதும் அவரது நினைவாகவே இருந்தது. சிரசாசனம் செய்யும்போதுகூட, ஜெயலலிதாவின் முகம்தான் கண்முன் நின்றது. ஆனால், நாளாக நாளாக எனக்குத் தாடிதான் வளர்ந்தது. போன தயாரிப்பாளர் வரவே இல்லை. கார் சத்தம் கேட்டாலே, ஓடிப்போய் வாசலில் எட்டிப்பார்ப்பேன். தினமும் டென்ஷன். சாப்பாடு கிடைத்தால்தான் உண்டு. இல்லையென்றால், பட்டினிதான் என்ற நிலை. ஒரு நாள், அந்தத் தயாரிப்பாளர் இருக்கும் இடத்தை விசாரித்து அவரது அலுவலகத்துக்குப் போய்விட்டேன். 555 கிகரெட் பிடித்தபடி, கூலிங் கிளாஸை சரிசெய்தவாறு காரில் இருந்து இறங்கி அவரது அறைக்குள் வேகமாகப் போய்விட்டார். கூப்பிடாமலே, அவரது அறைக்குள் நான் நுழைந்துவிட்டேன். நான் வணக்கம் சொன்னதை அவர் கண்டுகொள்ளவில்லை. முகத்தை சிடுசிடுவென வைத்திருந்தார். நான் வலியப்போய் சிரித்துக்கொண்டே அட்வான்ஸ் கொடுத்தது பற்றி கேட்டேன். ‘என்ன அட்வான்ஸ்? ஓ... சோபன்பாபுவா நீங்க’ என்று வேண்டா வெறுப்பாகப் பேசினார். ‘ஆமா... அப்போ நினைத்தேன். இப்போ அந்தப் படத்தை ட்ராப் பண்ணிவிட்டேன். ஜெயலலிதாவோட அம்மா சந்தியா உங்களை ஹீரோவா போடுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை’ என்று சொன்னார். நான் ரொம்பவும் அப்செட் ஆகி, டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தூக்கம், பசி எல்லாம் போய்விட்டது. யோசித்துப்பார்த்தேன். ‘ஜெயலலிதாவின் அம்மாவுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். வாய் வரைக்கும் வந்த உணவை அவர்கள் ஏன் பறிக்கிறார்கள்? அதைக் கேட்க இந்த மகாராணி யார்’ என்ற சிந்தனை எல்லாம் என் மனதில் ஓடியது.

கிடைத்த வாய்ப்பும் போய்விட்டதால், ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய பேச்சையே நான் எடுப்பதில்லை. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று என் குடும்பத்தாரிடமும் சொல்லிவிட்டேன். ஆனால், என் வயிற்றெரிச்சல் மட்டும் குறையவில்லை. அந்தப் பட்டத்து ராணி எப்படி இருப்பார் என்று பார்க்க விரும்பினேன். கோல்டன் ஸ்டுடியோவில், ‘கோபாலுடு பூபாலுடு’ பட ஷூட்டிங் நடந்தது. ராணி வேடத்தில் ஜெயலலிதா நடித்துக்கொண்டிருந்தார். அங்கே போனேன். வெளியே மாமரத்து நிழலில்  ஈசி சேரில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டு, ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா. அது, உல்லன் நூலாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அந்த நூலாலே அவரது கழுத்தை நெரிக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  ‘நீங்கதான் சோபன்பாபுவா? இவ்வளவு அடக்கமா இருக்கீங்க’ என்று சொல்லிவிட்டு, ‘ஸாரி’ என்றார். அவர் ஸாரி கேட்டாலும், எனக்குக் கோபம் தீரவில்லை. அன்று, ஜெயலலிதாவைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டேன். 

 ஒரு நாள் பிரசாத் ஸ்டுடியோவில், ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்தேன். ஓய்வில் நாங்கள் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அனுமார் வேடம் உட்பட பல வேடங்களில் நடித்த எல்லோரும் வேகவேகமாக ஒதுங்கினர். படகு போன்ற பெரிய கார் ஒன்று ஜெட் வேகத்தில் வந்து நின்றது. அதில் இருந்து தங்கம்போல தகதகவென ஜொலிக்கும் தேவதையைப்போல ஜெயலலிதா இறங்கினார்.  அவருக்கு முன்னாடி மூன்று பேர், பின்னாடி ஏழு பேர் சென்றார்கள். சால்வை போர்த்தியிருந்த ஜெயலலிதா, ஒய்யாரமாக நடந்துபோனார். என்னைத் திரும்பிப் பார்ப்பார் என்று ஆசையாக நோக்கினேன். என் ஆசை நிராசையானது. நான் அவரை நேரில் பார்த்தது அப்போதுதான்.

“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

அந்த வருடத்தில் என்னுடைய மூன்று படங்கள் ஹிட் அடித்தன. ஆனாலும், ‘ஸ்புட்னிக்’ ஹீரோயினுடன் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஜெயலலிதாவைக் கதாநாயகியாக புக் பண்ண முடியுமா என்று எல்லா தயாரிப்பாளர்களிடமும் கேட்டேன். ‘புக் பண்ணச் சொல்லிட்டு நீங்க போயிடுவீங்க. படம் முடியறதுக்குள்ளே எங்க வாழ்க்கையே முடிஞ்சிரும். அவங்க எப்போ வருவாங்க, எப்போ போவாங்கனு தெரியாது. அந்த ஆசையை விட்டுருங்க’ என்று சொல்வார்கள். எனவே, நானும் அதை மறந்துவிட்டேன்.

 ‘கைதி பாபாய்’ பட ஷூட்டிங் மைசூரில் நடந்தது. தூங்குவதற்கு முன் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. ‘விஜய்சித்ரா’ என்ற பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தேன். முழுப்பக்கத்தில் ஜெயலலிதாவின் வண்ணப் படம் இருந்தது. ‘டாக்டர் பாபு’ படத்தின் இயக்குநர், கதாநாயகியைத் தேடிக்கொண்டு இருந்தார். உடனே, டிரங்கால் புக் பண்ணி தயாரிப்பாளரிடம் பேசினேன். ஜெயலலிதாவை புக் பண்ணுங்கள் என்று சொன்னேன். நாளைக்குச் சொல்கிறேன் என்று அவர் சொன்னார். இதையும் சந்தியா கெடுத்துவிடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஓ... அவங்கதான் இறந்துட்டாங்களே. மறுநாள் போன் வந்தது. ‘உங்க கால்சீட்டுக்கு ஜெயலலிதா ஓகே சொல்லிவிட்டார்’ என்றார், தயாரிப்பாளர்.

 ஜெயலலிதாவைப் பற்றி நான் கேள்விப்பட்டது எல்லாமே... மூக்கு மேல கோபம் வரும், ரொம்ப பிகு பண்ணுவாங்க... என்றுதான். ‘வாழ்த்துகள்’ என்று தயாரிப்பாளர் தம்மா ரெட்டி என்னிடம் சொன்னார். அவர்தான் அந்தப் படத்தை எடுப்பவர். அந்த நாள் வந்தது. ஊட்டியில் பட பூஜை. ஜெயலலிதாவை எனக்குத் தயாரிப்பாளர் அறிமுகம் செய்தார். ‘ஹலோ’ என்று பட்டும் படாமலும் ஜெயலலிதா பேசினார். நான் அவரது கையைப் பிடித்துக் குலுக்கினேன். நாசூக்காக கையை இழுத்துக்கொண்டு, கைகூப்பி வணக்கம் சொன்னார். ஷூட்டிங் ஆரம்பமானது. பிரேக் நேரங்களில் நிறைய ஜோக் சொல்லி சிரித்துப்பேசுவோம். நான் ஜோக் சொல்லச் சொல்ல... அவங்க சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. என்னிடம் மனம்விட்டுப் பேசினார்கள். ‘சொல்ல முடியாத கவலையில் இருந்தேன். அம்மா இறந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. உங்க கூட பேசுறதால மனசுல கொஞ்சம் பாரம் குறைந்தது. இப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கிற மாதிரி இருக்கிறது. இவ்வளவு நாளாக... ஆசை இல்லை, மகிழ்ச்சி இல்லை, ஈடுபாடு இல்லை, லட்சியம் இல்லை. எல்லாமே இருந்தும் வெறுமையாக இருக்கிறது. எனக்காக யாரும் இல்லை. ‘நான் இருக்கேன்’ என்று யாராவது சொன்னால், அது பணத்துக்காகத்தான் என்று புரிந்துகொண்டேன். வேண்டியவர் என்று நினைத்துப் பொறுப்பை ஒப்படைத்தால், லட்சம் லட்சமாகக் கொள்ளை அடித்துவிட்டுப் போய்விட்டார்கள். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. என்னுடைய அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, என்னை நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அதனால், நான் யாரிடமும் பேசுவது இல்லை. அரண்மனை மாதிரி வீடு இருந்தாலும், நான் தனியாகத்தான் இருக்கிறேன். உங்களிடம் பேசுவது என் அம்மாவிடம் பேசுவது போல இருக்கிறது. நீங்கள் நகைச்சுவையாகப் பேசுவதால், எனக்கு மனபாரம் குறைவது மாதிரி இருக்கிறது’ என்று சொன்னார். அந்த சமயத்தில், மேக்கப்பை சரி செய்வதுபோல, கண்ணீர்த் துளிகளைத் துடைத்தவாறே இருந்தார். டச் பண்ணிக்கொண்டே, ‘என்னைப் புரிந்துகொண்டதற்கு நன்றி’ என்று சொன்னார். ‘ஷாட்’டுக்கு வரச்சொல்லி இயக்குநர் லெனின்பாபு கூப்பிட்டார். மனசு கேட்காமல் ஜெயலலிதாவைப் பார்த்தேன். அவரது கண்களில் கண்ணீர் ததும்பி இருந்தது. ‘ஸாரி’ என்று சொன்னார்.

“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ?” - அஞ்சிய ஜெ.

உடனே நான், marry some harry and throw away this sorry in a lorry என்று சொன்னேன். அதைக்கேட்டு, குழந்தை மாதிரி விழுந்து விழுந்து சிரித்தார். அப்போது, மேக்கப் கண்ணாடியே கீழே விழுந்துவிட்டது. உடனே நான், ‘ஸாரி’ சொன்னேன். அதற்கு அவர், throw away sorry in a lorry என்று திருப்பிச் சொன்னார். சிரித்துக்கொண்டே ஷாட்டுக்குப் போய்விட்டோம். ஷூட்டிங் முடிந்ததும் ஜெயலலிதா, விமானத்தில் மெட்ராஸுக்குக் கிளம்பிவிட்டார். நான் ரயிலில் கிளம்பினேன். மறுநாள் காலையில் எனக்கு ஒரு போன் வந்தது. அது ஜெயலலிதாவின் குரல். ‘மே ஐ ஸ்பீக் டு சோபன்பாபு’ என்று கேட்டார். ‘யெஸ் ஸ்பீக்கிங்...நீங்க ஃப்ளைட்ல ஏறியவுடன் அப்படியே போயிருவீங்ன்னு நினைத்தேன்’ என்று கிண்டலாகச் சொன்னேன். ‘நீங்க ஏன் ஃப்ளைட்ல வரலை’ என்று கேட்டார். ‘ஃப்ளைட்ல போறதுக்கு எனக்கு பயம்’ என்று சொன்னேன். ‘நீங்க ஜோக் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஒரு சின்ன ரெக்வஸ்ட். நீங்க நாளை ஏழரை மணிக்கு ஃபேமிலியோட என் வீட்டுக்கு டின்னருக்கு வரணும்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘என் வைஃப் எங்கேயும் வரமாட்டாங்க. எப்போதும் கதவுக்குப் பின்னாடிதான் நிற்பாங்க’ என்று சொல்லிவிட்டு, ‘நான் மட்டும் நாளைக்கு வர்றேன்’ என்றேன். அப்புறம், ‘நிஜமாத்தான் சொல்றீங்களா? நாளைக்கு நான் வந்ததும் ஜோக்குக்காக சொன்னேன்னு பசியோட திருப்பி அனுப்பிறாதீங்க’ என்றேன். அதற்கு, ‘இல்லை...உங்களுக்காக நான் வெயிட் பண்றேன்’ என்றார்.

சொகுசுமிக்க போயஸ் கார்டன் ஏரியாவில், மாடர்னான ஒரு பங்களாவில் ஜெயலலிதா வீடு இருந்தது. என் காரை நிறுத்திவிட்டுப் போனேன். ஜெயலலிதா வெளியே வந்து என்னை வரவேற்றார். ‘ஹலோ’ சொல்லிக் கைகொடுத்தேன். அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் கைகொடுத்தார். கையை இழுத்துக்கொள்ள வில்லை. என் கையைப் பிடித்துக்கொண்டே வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். 

மைசூர் மகாராஜா அரண்மனைதான் நினைவுக்கு வந்தது. முக்கால் ஏக்கரில் பங்களா. விசாலமான ஆறு ஏ.சி  பெட்ரூம்கள். ஒவ்வொரு பெட்ரூமும் ஒரு வீடு அளவுக்கு விசாலமாக இருந்தது. வீட்டுக்கு நடுவில் பெரிய லைப்ரரி ஒன்று இருந்தது. அதில் கிடைக்காத புத்தகங்களே இருக்காது என்று தோன்றியது. ‘எல்லா புத்தகங்களையும் படிச்சிட்டீங்களா’ என்று கேட்டேன். ‘படிக்காததுதான் கம்மி’ என்றார். 

 ஷூட்டிங் நேரத்தில் பேசும்போது, எந்த டாப்பிக் ஆக இருந்தாலும், அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுவார். அந்த அளவுக்கு அவருக்கு விஷய ஞானம். அவர் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசி நான் பார்த்தது இல்லை. பத்து நாட்கள் நடந்த ஷூட்டிங்கில் இவை எல்லாவற்றையும் பார்த்தேன்.
 ஒன்பது வருடங்களில் 100 படங்களில் நடித்தார். அவர் ஒரு நல்ல டான்சர். மிக நன்றாக வீணை வாசிப்பார். நல்ல பாடகி. நான்கு வருட நட்பில் இந்த உலகத்தில் நடக்கும் பல விஷயங்களை நாங்கள் விவாதித்து இருக்கிறோம். அவர், வாய்ப்புகள் இருந்தும்கூட, சினிமாத் துறையை விட்டு விலகினார். ‘அய்யங்கார் ஃபேமிலி’ என்று சொல்லிக்கொள்வார். ஆனாலும், அவர் சாதி வித்தியாசம் எதுவும் பார்க்கமாட்டார்.

‘மதர் அண்டு டாட்டர்’ என்ற 1500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஜெயலலிதா எழுதியிருந்தார். அவரது வீட்டில் இருந்து விடைபெற்றபோது, அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். எல்லாம் ஆக்ஸ்போர்டு இங்கிலிஷ். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு கும்பிடுபோட்டுக் கிளம்பிவிட்டேன்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.