News
Loading...

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் ரூ.37.50 காசு... கோலா அடித்த கொள்ளை!

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் 37 காசு... கோலா அடித்த கொள்ளை!

தாமிரபரணி.... வற்றாத ஜீவநதி என்று அனைவராலும் அழைக்கப்படும் நதி. மழைக் காலத்தில் பெய்யும் மழையால் மட்டும் ஓடி மற்ற காலங்களில் வறண்டுபோய் நிற்கும் பிற நதிகளைப் போல் அல்லாமல், எப்போதும் போதிய தண்ணீருடன் இருப்பதாலேயே இப்பெயர். இந்த நதியால், 4,016 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பயனடைகிறது. அதில் 67.4 சதவிகிதம் விவசாய நிலங்கள். அதிலும் குறிப்பாக 60.7 சதவிகிதம் நெற்பயிர் விளைவிக்கும் நிலங்கள். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி திகழ்கிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்குத் தினமும் 12.5 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. 

குளிர்பானம் ஆகும் குடிநீர்!

பருவமழை குறைபாட்டால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்வரத்து, வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. தாமிரபரணியை நம்பியிருக்கும் விவசாயிகள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க, இரண்டு குளிர்பான நிறுவனங்கள் நாளொன்றுக்கு தலா 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அரசு அனுமதி தந்துள்ளது. அதுவும் 1,000 லிட்டருக்கு 37 ரூபாய் 50 பைசா என்ற சொற்ப விலையில். எடுக்கப்படும் தண்ணீர், குடிநீர் பாட்டில்களாகவும் குளிர் பானங்களாகவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதை கண்டித்து கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த போதும் அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த ஆண்டு, தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டத்தில் ஈடுபட்டபோது பலரின் மண்டைகள் உடைக்கப்பட்டன. இந்த உறிஞ்சலை தடுக்கக்கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் அரசுக்கும், குளிர்பான நிறுவனங்களுக்கும் எதிராகத் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ‘தனியார் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க இடைகாலத்தடை’ விதித்துள்ளது.

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் 37 காசு... கோலா அடித்த கொள்ளை!

உறிஞ்சிய கோலா!

இப்படித் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களுள் ஒன்று கோகோ கோலாவுக்கு ஒப்பந்த அடிப்படையில், குளிர்பானங்கள் தயாரிக்கும் சவுத் இந்தியா பாட்டில் கம்பெனி. இவர்களுக்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள 31.54 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தால் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ‘சுற்றியிருக்கும் ஊர்களில் பஞ்சமோ, குடிநீர் தட்டுப்பாடோ ஏற்பட்டால் அவர்களது குடிநீர் தேவைகளை இந்நிறுவனம்தான் பூர்த்தி செய்யவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் தான் 2006-ல் மானூர் பஞ்சாயத்து ஒன்றியத்தால் ஆலைக்கு உரிமம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் இந்த நிபந்தனையைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிறுவனத்துக்கு முதலில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர்  தண்ணீர் எடுக்கவே அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது. இப்போது அது 15 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது மேலும் ஒரு 36 ஏக்கர் நிலம் பெப்ஸிக்கு ஒப்பந்த அடிப்படையில், குளிர்பானங்கள் தயாரிக்கும் ப்ரதிஷ்டா என்ற நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சவுத் இந்தியா பாட்டில் கம்பெனியைப் போல் இவர்களுக்கும் நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் நீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதே 1,000 லிட்டருக்கு ரூ. 37.50 என்ற சொற்பவிலையில். இதனால், இந்தப் பகுதியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மான்கள் சரணாலயம் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி உலக குளிர்பான சந்தையின் பெரும் போட்டியாளர்களான பெப்சி, கோகோ கோலாஆகிய இரு நிறுவனங்களுக்கும் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் 37 காசு... கோலா அடித்த கொள்ளை!

‘‘அரசு ரத்து செய்ய வேண்டும்!”

இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த டி.ஏ.பிரபாகரிடம் பேசியபோது, “தாமிரபரணி வெறும் நதியாகப் பார்க்கப்படுவதில்லை. அது அவர்களுக்கு உணவளிக்கும் தாய். 30 வருடங்களுக்கு முன்பிருந்த தாமிரபரணி இன்றில்லை. மணல் கொள்ளை, கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் என தினமும் சீரழிந்து கொண்டே வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாதபோது, குளிர்பான நிறுவனங்கள் குறைந்தவிலையில் தண்ணீர் எடுக்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அதையே வணிகமாக்குவது சரியல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்துக் குடிமகனுக்கும் வாழும் உரிமை உண்டு. அதன்படி குடிநீரும், விவசாயமும் அவசியத் தேவைகள். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை வரவேற்கத்தக்கது. இதுபோன்று ஒரு வருடத்துக்கு முன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்துறை சிப்காட் வளாகத்தில், ஒரு கோலா கம்பெனிக்கு பவானி நதியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் மக்களின்  எதிர்ப்பால் அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதைப் போன்று இந்த விஷயத்திலும் மக்களும் நீதிமன்றமும் எதிராக இருப்பதை உணர்ந்து உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல் உடனே இந்நிறுவனங்களுக்குத் தண்ணீர் எடுக்கும் உரிமையை அரசே ரத்து செய்யவேண்டும்” என்றார்.

இதற்கு முன் கோகோ கோலா நிறுவனம் கேரளாவில் உள்ள பிளாச்சிமடாவில் இருந்தும் திருச்சி சூரியூரில் இருந்தும் மக்கள் போராட்டத்தால் விரட்டப்பட்டது. பிளாச்சிமடாவில் மலைவாழ் மக்கள் ஒன்று திரண்டு கோகோ கோலா நிறுவனத்தை எதிர்த்ததால் அரசாங்கமே மக்களுக்குத் துணை புரிந்தது என்பது வரலாறு.

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் 37 காசு... கோலா அடித்த கொள்ளை!

‘‘குறிப்பிட்ட அளவு நீர்தான் எடுக்கிறார்களா?”

கோகோ கோலாவுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் லஜபதிராயிடம் பேசினோம். “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழக அரசாங்கத்தின் நீர்வளக் கட்டுப்பாடு மற்றும் சீராய்வுக் குழுமத்தின் அனுமதி பெற்றுத்தான் குடிநீர் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், கோகோ கோலா நிறுவனம் சிப்காட்டின் அனுமதியை மட்டும்தான் பெற்றுள்ளது. 2003-ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது. போதிய விதிகள் வரையறுக்கப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கோகோ கோலா நிறுவனம் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால், அவர்கள் அந்த அளவுக்கு மட்டும்தான் எடுக்கிறார்களா என்று கண்காணிக்க எந்த ஏற்பாட்டையும் அரசு செய்யவில்லை. அரசிடம் இருந்து கோகோ கோலா நிறுவனம் குறைந்த விலைக்கு தண்ணீரை வாங்கி அதைச் சுத்திகரிப்பு செய்து குளிர்பானமாகவும், குடிநீராகவும் மாற்றி, கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்கிறது. இதுபோன்ற முறைகேடான நிறுவனங்களை தடைசெய்வதால் மட்டுமே தாமிரபரணி விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

குளிர்பான நிறுவனங்கள் தரப்பில் பேசியபோது ‘‘சட்டப்படிதான் தண்ணீரை நாங்கள் பெற்று வருகிறோம். நீதிமன்ற தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்’’ என்றார்கள்.

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் 37 காசு... கோலா அடித்த கொள்ளை!

கொள்ளைகள் தொடர்கின்றன!

1,000 லிட்டர் நீரை 37.50 ரூபாய்க்கு கொடுத்தால் ஒரு லிட்டர் 0.0375 பைசா மதிப்புக்கு அரசால் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 ரூபாய். ஒரு லிட்டர் குளிர்பானத்தின் விலை 55 ரூபாய் என கோகோ கோலா நிறுவனம் விற்பனை செய்கிறது.

கேரளாவின் பிளாச்சிமடாவிலும், சூரியூரிலும் பஞ்சாயத்து அமைப்பினரே கோகோ கோலா நிறுவனத்தை எதிர்த்தனர். கோகோ கோலா நிறுவனம் அமைந்துள்ள கங்கைகொண்டான் வட்டார பஞ்சாயத்து செயலாளரே கோகோ கோலா தொழிற்சாலையின் அனுமதியை ரத்துசெய்ய முடியும். பிளாச்சிமடாவில் பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்தில் அவ்வாறுதான் செய்யப்பட்டது.

பல நூறு விவசாயிகளின் வாழ்வைச் சீரழித்து, இப்படி அடிமட்ட விலைக்கு நீர் ஆதாரத்தை விற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தை கொள்ளை லாபம் அடையச் செய்ய வைப்பதில் இந்த அரசாங்கத்துக்கு அப்படி என்ன ஆர்வம்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.