News
Loading...

உலகின் தொழில்நுட்ப நாயகர்கள்

உலகின் தொழில்நுட்ப நாயகர்கள்

பல்வேறு பிசினஸ்களில் மில்லியனர்கள் உலகம் முழுவதும் உண்டு. ஆனால் கம்ப்யூட்டர், இணைய சேவை வணிகம் என காலத்திற்கேற்ப புதிய டிசைனில் யோசித்து அதனை செயல்படுத்தி காசு பார்த்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் தனித்துவமானவர்கள்தானே! அவர்களைப் பற்றிய சிறு அறிமுகமே இக்கட்டுரை.

பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட்  

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் பொது நிறுவனமாக வளர்ச்சியடைந்த போது 30 வயதில் உலகமே வியக்கும் கோடீஸ்வரராகி இருந்தார். கல்லூரிப் படிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய பில்கேட்ஸ், நண்பருடன் இணைந்து மைக்ரோசாஃப்டை தொடங்கி, வரலாற்று வெற்றி கண்டார். 

2000 ஆம் ஆண்டில் இதன் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது மனைவி மெலிண்டாவோடு இணைந்து தனது கேட்ஸ் அறக்கட்டளையின் சமூகசேவைப் பணிகளைச் செய்து வருகிறார். 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் பணியாற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 85.32 பில்லியன் டாலர்களாகும். பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 89.4 பில்லியன் டாலர்கள்.

ஜெப் பெஸோஸ், அமேஸான்  

கார் கேரேஜில் வாழ்க்கையைத் தொடங்கி ஆன்லைனில் எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்களை விற்கும் நம்பர் 1 நிறுவனமான அமேஸான் நிறுவனத்தை 1994 ஜூலை 5ல்  தொடங்கினார் ஜெப் பெஸோஸ். பரபர பிஸினஸ் டெக்னிக்குகளால் சக்சஸ் வேகம் கூட்டி பணக்காரர் ஆனவர் இவர்.

இன்று ஆன்லைன் வணிகம்  கடந்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், ராக்கெட் மூலம் பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் ப்ளூ ஒரிஜின் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராக தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். 2 லட்சத்து 68 ஆயிரத்து 900 பணியாளர்களைக் கொண்டுள்ள அமேஸான் நிறுவன சொத்து மதிப்பு 107 பில்லியன் டாலர்களாகும். ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 51.2 பில்லியன் டாலர்கள்.  

மார்க் ஸுக்கர்பெர்க், ஃபேஸ்புக்  

மார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே மாணவர்கள் உரையாடுவதற்கான ஜாலியான ப்ராஜெக்டாக பேஸ்புக்கை(2004 பிப்ரவரி 4) உருவாக்கினார். ஆனால் கேம்பஸ் தாண்டி உலகளவில் ஃபேஸ்புக் சூப்பர் ஹிட்டடித்தவுடனே அவர் செய்த முதல் வேலை, படிப்பை உதறிவிட்டு தொழிலில் உற்சாகமாக ஈடுபட்டதுதான். தனது சம்பாத்தியத்தில் 99 சதவிகிதம் சமூகத்திற்குத்தான் என தில்லாக அறிவித்துள்ளார் மார்க். 

அதுமட்டுமல்ல, பல்வேறு நலஅமைப்புகளுக்கு  பணஉதவிகளும், நிறுவனத்தின் பங்குகளை வாரி வழங்குவதும் இவரின் வழக்கம். 14  ஆயிரத்து 495 பேர் பணிபுரியும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 17.928 பில்லியன் டாலர்களாகும். மார்க்கின் சொத்து மதிப்பு 46.2 பில்லியன் டாலர்கள்.   

உலகின் தொழில்நுட்ப நாயகர்கள்

லாரி எலிசன், ஆரக்கிள்   

ஆரக்கிள் கார்ப்பரேஷனை(ஜூன் 16, 1977) அமைப்பதற்கு முன் கல்லூரி. படிப்பிலிருந்து 2 முறை எஸ்கேப்பானவர் லாரி எலிசன். இஷ்டப்பட்டு லட்சியத்திற்காக கஷ்டப்பட்டதால் மைக்ரோசாஃப்டுக்கு அடுத்த பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமாக ஆரக்கிளை செதுக்கியெடுத்த உழைப்பாளி.

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி என்பதோடு, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் நெருங்கிய நண்பரும் கூட. ஹவாய் தீவுகளில் உள்ள ‘லனாய் தீவு’ சாருடையதுதான். 1 லட்சத்து 36 ஆயிரத்து 262 பேர் பணிபுரியும் ஆரக்கிள் நிறுவனத்தின் மதிப்பு 37.04 பில்லியன் டாலர்களாகும். 46.1 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து லாரி எலிசனுக்கு மட்டுமே சொந்தம்.   

லாரி பேஜ், ஆல்பபெட்  

1973 ஆம் ஆண்டு பிறந்த லாரன்ஸ் பேஜ் கூகுள் நிறுவனத்தை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவர். ஸ்மார்ட்போன் வணிகத்திற்காக, தீர்க்கதரிசியாக ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கியவர் இவர். 

கிட்டத்தட்ட 10 வருடம் கூகுள் நிறுவன பதவியிலிருந்து ஒதுங்கியிருந்தவர், தற்போது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாகி. 69 ஆயிரத்து 953 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் சொத்துமதிப்பு 74.98 பில்லியன் டாலர்களாகும். லாரி பேஜின் சொத்து மதிப்பு 37.8 பில்லியன் டாலர்கள்.

செர்ஜி பிரின், கூகுள்

செர்ஜி பிரினும், லாரி பேஜும் இணைந்துதான் 1998 ஆம் ஆண்டு கூகுளை தொடங்கினர். அதுமட்டுமல்ல, கிராமப்புற மக்களுக்கு எளிதில் `WIFI’ கிடைக்கும்படி செய்ய(ப்ராஜெக்ட் லூன்), விண்ணில் பலூன்களை பறக்கச் செய்யும் முயற்சி,  மக்களை சந்திரனுக்கு கூட்டிச் செல்லும் மூன்ஷாட் என சார் செம பிஸி. கூகுள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களாகும். செர்ஜி பிரினின் சொத்து மதிப்பு 36.2 பில்லியன் டாலர்கள்.

ஜாக்மா, அலிபாபா

1999 ஆம் ஆண்டு உருவான இவருடைய அலிபாபா, சீனப்பொருட்களை உலகளவில் விற்கும் இணைய நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு அலிபாபா பொது நிறுவன அந்தஸ்தை பெற்றபோது, உலகின் மிகப்பெரிய பங்குத்தொகை விற்பனையாக  25 பில்லியன் டாலர்கள் கிடைத்தது.

 இன்று ஜாக்மா ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்பதோடு, வியாபார நிறுவனங்களை இணைத்து புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதிலும் தீராத ஆர்வமுள்ளவராவார். 40 ஆயிரத்து 228 பணியாளர்களைக் கொண்ட அலிபாபா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 101.148 பில்லியன் டாலர்களாகும். ஜாக்மாவின் சொத்து மதிப்பு 26.3 பில்லியன் டாலர்கள்.

ஸ்டீவ் பால்மர்,  மைக்ரோசாஃப்ட்

1980-ல் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸுடன் இணைந்து, மைக்ரோசாஃப்ட்டை தொடங்கியபோது  அதன் முதல் பிசினஸ் மேனேஜர் இவர்தான். அப்போதே அவருக்கு 50 ஆயிரம் டாலர்கள் சம்பளத்தோடு, கூடுதலாக நிறுவன பங்குகளும் வழங்கப்பட்டன. தனது கடின உழைப்பால் 2000-2014 ஆண்டுகள் வரை மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். மைக்ரோசாஃப்ட்  பங்குகளின் மூலம் பணக்காரரும் ஆனார். ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு 28.6 பில்லியன் டாலர்கள்.

மைக்கேல் எஸ் டெல், டெல் 

1984-ல் மைக்கேல் டெல் ஆஸ்டினில் படித்தபோது, ‘PC Ltd’ என்ற பெயரில் ஒரு கணினி நிறுவனத்தை தொடங்கினார்.  ஒரு கட்டத்தில் கல்லூரிப் படிப்பிலிருந்து விலகி, சொந்தமாக கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது அவருக்கு வயது 23. கம்ப்யூட்டர் தயாரிப்பில் உலகிலேயே 3 வது பெரிய நிறுவனமான டெல் நிறுவனம், பொது நிறுவனமானபோது, 30 மில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்தது. மைக்கேல் டெல் பங்கு 18 மில்லியன் டாலர்களாகும். 13 ஆயிரம் பணியாளர்கள் பங்களிப்பு செய்யும் டெல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 19.1 பில்லியன் டாலர்களாகும். மைக்கேல் டெல்லுக்கு 18.9 பில்லியன் டாலர்கள் சொந்தம். 

மா ஹூவாடெங், டென்சென்ட் 

போனிமா என்றழைக்கப்படும் இவர்,  பங்குச்சந்தையில் கிடைத்த லாபத்தை வைத்து நண்பர்களோடு இணைந்து `Tencent’ இணையதள சேவை நிறுவனத்தை தொடங்கினார். டென்சென்ட் மூலம் தொடங்கிய தொழிலான `QQ’ தகவல் அனுப்பும் சேவையில் சக்சஸ் ஆக, இன்று இவர் வசம் பல தொழில்கள் உள்ளன. 31 ஆயிரத்து 557 பணியாளர்கள் பணிபுரியும் டென்சென்ட் நிறுவன மதிப்பு 102.9 பில்லியன் டாலர்களாகும். போனிமாவின் சொத்து மதிப்பு 18.2 பில்லியன் டாலர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.