News
Loading...

அளக்கும் - ரத்தினம்! - நெட்வொர்க் - 7

‘அளக்கும்’ ரத்தினம்! - நெட்வொர்க் - 7

ராம மோகன ராவ் நெட்வொர்க்கின் முக்கிய புள்ளி ‘திண்டுக்கல்’ ரத்தினம். சேகர் ரெட்டி, ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் அடங்கிய  மூவர் கூட்டணிதான், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ளி வியாபாரம் செய்துவருகிறது. தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மாதம்தோறும் இவர்கள் கொடுக்கும் மாமூல் தொகையே நூறு கோடிகளைத் தாண்டுமாம்.  

‘திண்டுக்கல்’ ரத்தினம் என்று அழைக்கப்பட்டாலும், ரத்தினத்தின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம். சர்வேயர் ரத்தினம் என்றால்தான் திண்டுக்கலில் இவரைத் தெரியும். தொழிலதிபர், கல்வித் தந்தை என பல பெயர்களில் அழைக்கப்படும் ரத்தினம், நில அளவைத் துறையில் உதவியாளர் பணியில் இருந்தவர். 1999-ம் ஆண்டு, வீடு கட்டுவதற்காக இரண்டு லட்ச ரூபாய் ஹவுசிங் லோன் கேட்டு விண்ணப்பித்தார். ‘போதிய சம்பளம் இல்லை’ என்ற காரணத்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த ரத்தினம் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டிய ஆடம்பர பங்களாவின் கிரகப் பிரவேசத்துக்காகப் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு மட்டுமே பல லட்சம் ரூபாய். 

சர்வேயர் பணியில் இருந்தபோதே, தனது மனைவி பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.  ஒரு கட்டத்தில், அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, முழுமையாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அப்போது, மணல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த படிக்காசுவின் நட்பு கிடைத்தது. ரத்தினத்தின் சுறுசுறுப்பைப் பார்த்த படிக்காசு, மணல் எடுக்க சப்கான்ட்ராக்ட் கொடுத்தார். மணல் பிசினஸ் மற்றும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனுடன் ஏற்பட்ட நட்பு என இவரை பல வி.ஐ.பி-க்களோடு நெருக்கமாக்கியது. ரத்தினத்தின் வருமானமும் பல மடங்கு அதிகமானது. 

 இந்த நிலையில், புதுக்கோட்டை ராமச்சந்திரன் மூலமாக சேகர் ரெட்டியிடம் அறிமுகம் கிடைத்தது. ஒருபக்கம் வருமானம் கொட்டிக்கொண்டே இருக்க... சேம்பர், டயர் டீலர், ஹோட்டல், கல்லூரி என முதலீடு செய்துகொண்டே இருந்தார். தொழில் அதிபர், கொடைவள்ளல் என வி.வி.ஐ.பி-யாக மாறினார். 

 திண்டுக்கல் அய்யலூரில் உள்ளது வண்டி கருப்பணசாமி கோயில். இங்கு ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, தனக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்தி வைத்து, பூஜை செய்து 500  ஆடுகள் வெட்டி விருந்துவைப்பார் ரத்தினம். பிரமாண்டமான இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட திண்டுக்கல் வி.ஐ.பி-க்கள் அனைவரும் ஆஜராவது வழக்கம். 

 2006 தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ள ரத்தினத்தின் வருவாய் மலைக்க வைக்கிறது. ரத்தினம் தற்போது திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராக இருக்கிறார். திண்டுக்கல், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாக்கள் உள்ளன. திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் ‘ரத்ன விலாஸ்’ என்ற பெயரில் உணவகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழாவுக்கான விளம்பரங்களின் செலவு மட்டுமே வாய் பிளக்க வைக்கிறது. திருச்சி சாலையில், செல்வி சேம்பர்ஸ், செல்வி டயர்ஸ் அலுவலகம், ரவுண்ட் ரோடு அருகே தரணி குழும நிர்வாக அலுவலகம், தாடிக்கொம்பில் நவீன இயந்திரங்களைக் கொண்ட சேம்பர் தொழிற்சாலை, கரூர் சாலையில் உள்ள குடோன் என தமிழகம் முழுக்க ரத்தினத்துக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. 

‘அளக்கும்’ ரத்தினம்! - நெட்வொர்க் - 7

ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தரப்பில் பேசியவர்கள், ‘‘ரியல் எஸ்டேட் தொழில் செய்தபோது, ரத்தினம் வாங்கிப்போட்ட இடங்கள் எல்லாம் நல்ல விலைக்கு விற்பனை ஆகின. பிறகு, மணல் வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு பிரிக்ஸ் கம்பெனி, உணவகம், கல்லூரி என முதலீடு செய்தார். அதன் பிறகுதான் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மூலமாக சேகர் ரெட்டியுடன் எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். மற்றபடி வருமானத்துக்கு முறையாக வரி கட்டி வருகிறார் ரத்தினம்’’ என்றார்கள். 

சேகர் ரெட்டி மூலமாக மாற்றப்பட்ட பழைய நோட்டுகளில் சில கோடிகள், திண்டுக்கல் வங்கிகளிலும் மாற்றப்பட்டுள்ளன என்பதை சீரியல் நம்பர் அடிப்படையில் கண்டுபிடித்து உள்ளார்களாம். விரைவில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. ரத்தினம் கைது செய்யப்பட்டு உள்ளதால் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.